சாட்-ஜி.பி.டி.'க்கு பதிலடியாக கூகுளின் 'பார்டு'
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் போட்டி: 'சாட்-ஜி.பி.டி.'க்கு பதிலடியாக கூகுளின் 'பார்டு'
‘சாட்-ஜி.பி.டி.’க்கு பதிலடியாக ‘பார்டு’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சேவையை கூகுள் அறிமுகம் செய்ய உள்ளது. நியூயார்க், வருங்காலத்தில் உலகை ஆளப்போவதாக கருதப்படும் 'சாட்-ஜி.பி.டி.' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எலான் மஸ்க்கின் நிறுவனமான ஓபன்-ஏஐ உருவாக்கி இருக்கிறது. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசும் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். தொழில்நுட்ப உலகில் சக்கரவர்த்தியாக விளங்கும் கூகுள் நிறுவனத்தை கட்டுப்படுத்தவே இவர்கள் ஒன்றிணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'சாட்-ஜி.பி.டி.'க்கு பதிலடி கொடுக்கும்விதமாக 'பார்டு' எனப்படும் செயற்கை நுண்ணறிவு சேவையை கூகுள் அறிமுகம் செய்கிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் அறிவித்த கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தொடக்கமாக இந்த சேவை ஒரு நம்பிக்கைக்குரிய சோதனையாளர்கள் குழுவுக்கு வழங்கப்படும். பின்னர் இந்த ஆண்டு இறுதிவாக்கில் பரவலாக வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். 'படைப்பாக்கத்துக்கான வழியாகவும், ஆர்வத்துக்கான ஏவுதளமாகவும் 'பார்டு' இருக்கும்' என்று அவர் தெரிவித்துள்ளார். விண்வெளி போன்ற கடினமான விஷயங்களை குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த சேவை விளக்கும் என்று கூறப்படுகிறது. பழங்கால கவிஞர், பாடகரை குறிக்கும் சொல்தான் 'பார்டு'. ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கவிதை எழுதுமா என்பது குறித்து சுந்தர் பிச்சை எதுவும் தெரிவிக்கவில்லை.
Comments