உறவு, நட்பு இடையே பிரைவசி முக்கியம்..? அந்தரங்கம் காப்பது எப்படி
உறவு, நட்பு இடையே பிரைவசி ஏன் முக்கியம்..? அந்தரங்கம் காப்பது எப்படி
தனித்து வாழ்தல் மனிதரின் இயல்பல்ல. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு மட்டுமே உரிய, அவருக்கு மட்டுமே தெரிந்த, அவருக்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள் பல உண்டு. அவர் அனுமதிக்காத பட்சத்தில் அவருக்கான வெளிக்குள் நுழைய யாருக்கும் உரிமையில்லை. தனிமையில் தம்பதியினர் நெருக்கமாக இருத்தல், எந்தவித தொந்தரவும் இல்லாமல் தன் அறைக்குள் பாடல் கேட்டுக்கொண்டோ படித்துக்கொண்டோ இருத்தல், டீன் ஏஜ் வயதினரின் தனிப்பட்ட நட்பு வட்டம், திரையரங்கில் காதலருடன் அமர்ந்து இடையூறுகளின்றி படம் பார்த்தல், இவை எல்லாமே அந்தரங்கத்தின் வெவ்வேறு பரிமாணங்கள்தாம்.
தம்பதியர்களுக்குள்...
கணவன், மனைவி இருவருக்கிடையில், ஒருவர் மீது ஒருவருக்கு உரிமையும் அக்கறையும் இருந்தாலும், துணைவரிடம் பகிர்ந்துகொள்ளாத விஷயங்களும் ஒருவருக்கு இருக்கும். அதற்குள் நுழைந்துபார்க்கும் உரிமை மற்றவருக்கு இல்லை. அப்படிச் செய்வது உறவைப் பாதிக்கும். துணைவரின் செல்போன் அல்லது சமூக வலைதளப் பக்கங்களை, அவரின் அனுமதியின்றி படிப்பது அல்லது ஆராய்வது, அவர் யாரிடம் பேசுகிறார் என்பதை விசாரிப்பது போன்றவை உரிமை மீறல்களே.
இமெயில், நாள்குறிப்பு, தனிப்பட்ட வங்கிக்கணக்கு எனப் பலவற்றுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காத அல்லது தொடர்பில்லாத விஷயங்களை துணைவர் சொல்லாமல் இருக்கும்போது, அதைப் பற்றித் தெரிந்துகொள்ள முற்படுவதும் அந்தரங்கத்தை ஊடுருவும் செயலே. இருவரும் உறவில் உண்மையாக இருந்தால், பரஸ்பர நம்பிக்கை என்ற மட்டத்திலேயே அவர்கள் செயல்பட வேண்டும்.
அலுவலக நட்புக்குள்...
அலுவலக நண்பர் உங்களிடம் பகிர்ந்துகொண்ட அந்தரங்க விஷயங்களை, அவருடன் உறவு சீர்கெட்ட நிலையில் அலுவலகத்துக்குள் அம்பலப்படுத்துவதோ, பரப்புவதோ கூடவே கூடாது. அடுத்தவரின் கோப்புகள், டைரி, போன், அவர் இல்லாத நேரத்தில் திறந்து பார்த்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சக பணியாளர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்பது, அவர்களின் பணிக்குறிப்புகள், கணினித்திரை இவற்றைத் தேவையின்றி பார்த்தல் அவரின் அந்தரங்க எல்லையைத் தொடும் செயலே.
அலுவலகத்தில், அலுவலகப் பணிகளுக்கே முன்னுரிமைகொடுக்க வேண்டும். மருத்துவர், மனநல ஆலோசகர், வழக்கறிஞர், செய்தியாளர், ஆலோசகர் போன்றோரிடம் ஆலோசனைக்காக வருபவர்கள், பிறரிடம் பகிர்ந்துகொள்ளாத தகவல்களைக்கூடக் கூறுவார்கள். இந்த அந்தரங்க விஷயங்களைக் கண்ணியத்துடன் பாதுகாக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை வெளிப்படுத்தக் கூடாது.
உறவுகளுக்குள்...
சிறியவர், பெரியவர் பேதமின்றி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் அந்தரங்கமும் மதிக்கப்படவேண்டியதே. சிறியவர்கள்தானே என்று குழந்தையின் தன்மதிப்பைக் குறைக்கும் விஷயங்களை வெளிப்படுத்தவோ கிண்டல் செய்யவோ கூடாது. அதுபோல, பதின்வயது பிள்ளைகளை குறிப்பிட்ட எல்லைவரை கண்காணிக்கலாமே தவிர, அவர்களின் தனிப்பட்ட உடைமைகளைச் சோதிப்பது தவறு. பெரியவர்கள் தம்மைப் புரிந்துகொள்வார்கள், தங்கள் மதிப்பு குறையாது என்ற நம்பிக்கை ஏற்படும்போது பிள்ளைகளும் நிச்சயம் வெளிப்படையாக இருப்பார்கள்.
அதேபோல வீட்டில் இருக்கும் முதியவர்களின் தனி உரிமைகளும் அந்தரங்கமும் காக்கப்பட வேண்டும். நம் மீது நம்பிக்கை வைத்து நண்பர் பகிர்ந்துகொள்ளும் தனிப்பட்ட விஷயங்களை, நமக்கு நெருக்கமான வேறொருவரிடம் பகிர்வது, அந்த நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம். இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்படவில்லை எனில், நம் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் நட்பையும் இழக்க நேரிடும்.
சமூக(வலைதள)த்தில்...
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில், நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம், நம் மனநிலை என்ன, யாருடன் இருக்கிறோம் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களைக்கூட முன்பின் தெரியாதவர்களுடன் பகிர்ந்துகொள்வது மிகவும் தவறு.
அதேபோல், மற்றவர்களின் இணைய கணக்குகளுக்குள்ளேயோ (இமெயில், சமூகவலைதளக் கணக்குகள்), கணினிக்குள்ளேயோ திருட்டுத்தனமாக நுழைந்து, அவர்களின் கோப்புகள் மற்றும் சாட்டிங் விவரங்கள், இணைய உலாவல் வரலாறு, செயல்பாட்டு விவரங்கள் ஆகியவற்றை ஆராய்வது ஆகப்பெரிய அத்துமீறல்.
பொது இடங்களிலும் குறைந்தபட்ச அந்தரங்கம் தேவையிருக்கிறது. யாரேனும் இருவர் நின்று பேசிக்கொண்டிருந்தால், அவர்களின் அழைப்பு இல்லாமலேயே அருகில் சென்று நிற்பதோ, இடையில் சென்று ஆஜராவதோ தவறு. சங்கடம் ஏற்படுத்தும் அளவுக்குப் பெண்களை, அவர்களின் உடலை உற்றுப்பார்ப்பது, பொது இடங்களில் ஒருவரின் அனுமதியின்றி, அவரைப் புகைப்படமோ, வீடியோவோ எடுத்தல் கூடாது.
மொத்தத்தில், பிறரின் அந்தரங்கத்தை நாம் மதித்தால்தான், நம்முடைய அந்தரங்கமும் காக்கப்படும்.
சிலரின் பிறப்பே இப்படித்தான்.மற்றவர்களின் அந்தரங்க விஷயத்தில் தலையீட்டு அவர்களின் வாழ்வை சீர் குலைப்பது இவர்களின் பிறவிக்குணம்
இவர்களால் ஒரு நாளும் சும்மா இருக்க முடியாது
,அடுத்தவர்களின்மற்றவர்களின்இணைய கணக்குகளுக்குள்ளேயோ(இமெயில், சமூகவலைதளக் கணக்குகள்), கணினிக்குள்ளேயோ திருட்டுத்தனமாக நுழைந்து, அவர்களின் கோப்புகள் மற்றும் சாட்டிங் விவரங்கள், இணைய உலாவல் வரலாறு, செயல்பாட்டு விவரங்கள் ஆகியவற்றை ஆராய்வது,மற்றும் அவர்களின் டைரிகளை திருட்டுத்தனமாக படிப்பது
அவர்கள் போன் பேசும் போது ஓட்டுக்கேட்பது
பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என வேவு பார்ப்பத
இப்படி அடங்கும்
இப்படி மற்றவர்களின் அந்தரங்கத்தில தலையிடும் இவர்கள் தங்கள் டைரிகள் அல்லது செல் போன்ககளை தொட விட மாட்டார்கள்
போன் பேசும் போது தனியாக பேசுவார்கள்
இவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்
இந்த சமுதாய விஷக்கிருமீகள் எங்கே சென்றாலும் அங்கே போனை பார்த்தால் அதனை நொண்டுவார்கள்
இவர்கள் கிளப்பும் வதந்திகள் பலரின் வாழ்க்கையை கெடுக்கிறது?பல தற்கொலைகளுக்கு காரணமாகிறது
உறவு நட்புகளை சந்தேதிக்கும இவர்களின் பார்வையில் இருந்த விலகி நில்லுங்கள்
Comments