கட்டபொம்மனாக நடிக்க உயிரையே பணயம் வைத்த சிவாஜி…
கட்டபொம்மனாக நடிக்க உயிரையே பணயம் வைத்த சிவாஜி… நாடக மேடையில் ஒரு துயர சம்பவம்
…
சிவாஜி கணேசனின் நடிப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படம் காலத்துக்கும் பேசப்படும் திரைப்படமாக அமைந்தது. இதில் சிவாஜியின் கம்பீரமான நடிப்பு பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்தது.\
சிவாஜி கணேசன் சிறு வயதில் இருந்தே வீரபாண்டிய கட்டபொம்மனின் நாடகத்தில் எப்படியாவது கட்டபொம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தாராம். அதன் பின் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வளர்ந்த பிறகு தனக்கு சொந்தமான நாடக கம்பெனியில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தை அரங்கேற்றினார். அதில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்து தனது பல நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார்.
இந்த நாடகத்தில் சிவாஜியின் கம்பீரமான நடிப்பை பார்த்த பி.ஆர்.பந்துலு இதனை திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தார். இவ்வாறுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் உருவானது.
இந்த நிலையில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தில் சிவாஜி கணேசன் நடித்தபோது அவருக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை குறித்து பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.சீனிவாசன் சிவாஜியை சந்தித்து வாழ்த்துக்களை கூற அவரது அறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கே குளியலறையில் ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாராம் சிவாஜி. அவருக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த அவரது மருத்துவர் “உங்ககிட்ட எத்தனையோ தடவ சொல்லியிருக்கேன். இப்படி உணர்ச்சிவசப்பட்டு நடிச்சீங்கன்னா நிச்சயமா உங்க உடல்நலம் கெடும். சொன்னா கேட்கவே மாட்டிக்கிறீங்க” என்றாராம்.
அதற்கு சிவாஜி கணேசன் “எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதற்காக வீரபாண்டிய கட்டபொம்மன் கதாப்பாத்திரத்தில் கொஞ்சம் கம்மியாக நடித்தால் மக்கள் என்னை வீரபாண்டிய கட்டபொம்மனாக ஏற்றுக்கொள்வார்களா? நாடகத்தில் நடிக்க வந்துவிட்டால் அந்த நாடகத்துக்கு எவ்வளவு நேர்மையா இருக்கனுமோ அவ்வளவு நேர்மையா இருக்கனும்” என்று கூறினாராம். “ஒரு நாடகத்திற்காக தன்னை இந்தளவு வருத்திக்கொண்ட நடிகரை நான் பார்த்ததில்லை” என்று ஏ.ஆர்.சீனிவாசன் கூறினாராம்.
Comments