பீஷ்மாஷ்டமி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பிறவி பாவங்கள் போகும்
பீஷ்மாஷ்டமி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பிறவி பாவங்கள் போகும்
பீஷ்மாஷ்டமி தினம் 29.01.23 கொண்டாடப்படுகிறது. பீஷ்மாஷ்டமி தினத்தில், பீஷ்மருக்காகவும், நம்முடைய முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால், நாம் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நம்முடைய வாழ்வில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பீஷ்மர் உயிர் பிரிந்து மோட்சம் பெற்றாலும், அவர் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு தர்ப்பணம் செய்ய வாரிசுகள் இல்லை. ஆனால், பீஷ்மர் ஒழுக்க நெறி தவறாமல் பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடித்து வந்ததால், அவருக்கு சிரார்த்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று வியாசர் கூறினார். வியாசர் அப்படி சொன்னாலும், பீஷ்மரின் ஆத்மாவுக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியமும் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார் வியாசர்.
மஹாபாரதத்தில் கங்கையின் மைந்தரான பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் இல்லாமல் மஹாபாரத காவியமே கிடையாது. கிருஷ்ணபரமாத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரோ, அதே அளவுக்கு பீஷ்மரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர். இவ்வுலகில் பிறந்த யாருமே செய்யத் தயங்கும் செயலை தன்னுடைய தந்தைக்காக செய்யும் பேரு பெற்றவர்.
உலக நன்மைக்காகவும், தன்னுடைய தந்தைக்காகவும் செய்த தியாகத்திற்கு பிரதிபலனாக, தான் விரும்பாமல் தன்னுடைய உயிர் உடலை விட்டு பிரியாது என்னும் வரத்தை பெற்றார். இதனால் பாண்டவர்கள், கவுரவர்கள் என இரு தரப்புக்கும் பிரியமான பிதாமகர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார். தான் என்றைக்கும் நியாய தர்மத்தின் பக்கம் நிர்பதாக எண்ணிக்கொண்டாலும், விதியின் சூழ்ச்சியால் பாரதப்போரில் கவுரவர்கள் பக்கம் நின்று போரிட்டார்.
விதியின் கணக்கு
ஒருவர் தான் என்னதான் தான தர்மங்கள் செய்திருந்தாலும் கூட, தன்னருகில் நடக்கும் அநீதியை கண்டும் காணாமல் சென்றால் அதுவும் அதர்ம கணக்கிலேயே சேரும் என்பது விதியின் கணக்காகும். அதனால், பீஷ்மர் நல்லதையே செய்திருந்தாலும், தன்னுடைய ரத்த உறவுகள் செய்யும் அதர்மத்தை கண்டும், அதை தட்டிக் கேட்காமல், அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காரணத்தினால் தன்னுடைய கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அனுபவிக்க வைத்தது விதி.
வேடிக்கை பார்த்த பீஷ்மர்
அனைத்தும் கற்றறிந்த பிதாமகரான பீஷ்மர், துரியோதனனின் சபையில், துச்சாதனன் திரௌபதியின் கூந்தலை பிடித்து இழுத்து வந்து, அனைவரின் முன்னிலையில் அவளின் துகிலை உரித்தபோதும், துரியோதனன் திரௌபதியை தன்னுடைய தொடையில் வந்து உட்காரும்படி சொன்னபோதும், அதைத் தட்டிக்கேட்காமல் மௌனகுருவாக உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
தன் கண்ணெதிரே யாரும் செய்யத் துணியும் பாதகத்தை துரியோதனனும், துச்சாதனனும் செய்ததை தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்து பெரும் பாவத்தை சேர்த்துவிட்டார்.
அம்புப் படுக்கையில் பீஷ்மர்
துரியோதனனின் சபையில் தான் செய்த மாபெரும் பாவச் செயலின் காரணமாகவே, பிதாமகரான பீஷ்மர் மஹாபாரதப் போரில் அம்புகளால் வீழ்த்தப்பட்டார். அம்புகளால் வீழ்த்தப்பட்டு அம்புப்படுக்கையில் கிடந்தாலும், தான் பெற்ற வரத்தின் காரணமாக, தன்னுடைய மரணத்தை மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி மரணத்தை தள்ளிப்போட்டு வந்தார்.
பீஷ்மரைச் சுற்றிலும் தன்னுடைய ரத்த உறவுகளான பாண்டவர்களும், கௌரவர்களும் வணங்கி நின்றனர்.
நியாயத்தின் பக்கம்
அப்போது, பீஷ்மர் ஒரு அரசன் எவ்வாறு நடுநிலையில் நின்று நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதைப் பற்றி எடுத்துக் கூறினார். அரசன் மட்டுமல்லாது நீதியை வழங்கக்கூடிய இடத்தில் உள்ளவர்கள் யாராக இருப்பினும், உற்றார் உறவினர், தெரிந்தவர் தெரியாதவர், நண்பர் பகைவர் என எந்த பாகுபாடும் காட்டாமல், நியாயத்தின் பக்கம் நின்று நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பாண்டவர்களும், கௌரவர்களும் அதை கேட்டுக்கொண்டனர்.
விஷ்ணு சகஸ்ரநாமம்
பின்னர், பீஷ்மர் மஹாவிஷ்ணுவை வேண்டிக்கொண்டார். அருகில் இருந்த கிருஷ்ணபரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை பீஷ்மருக்கு காட்டி அருளினார். அந்த சமயத்தில் பீஷ்மர் அருளியதே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். அப்போது மோட்சம் அளிக்கும் உத்தராயண காலம் ஆரம்பமாகிவிட்டதால், பீஷ்மர், தன்னுடைய உயிர் பிரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஆனால், உயிர் பிரியவில்லை.
சூரிய சக்திக்கு நிகரான எருக்க இலை
உத்தராயண காலம் தொடங்கியும் தன்னுடைய உயிர் பிரியாததைக் கண்டு மனம் வருந்தி வியாசரிடம் விளக்கம் கேட்டார் பீஷ்மர். அதற்கு வியாசர், பீஷ்மர் செய்த பாவச்செயலை அவரிடம் எடுத்துரைத்தார். தன்னுடைய மாபெரும் தவறை உணர்ந்துகொண்ட பீஷ்மர், தன்னுடைய உடலை எரிக்கும் சக்தியை, சூரிய தேவனிடம் இருந்து பெற்றுத் தருமாறு வியாசரிடம் கேட்டுக்கொண்டார். உடனே வியாசரும், சூரிய சக்திக்கு நிகரான எருக்க இலைகளைக் கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதையடுத்து நிம்மதியடைந்த பீஷ்மர் தியான நிலைக்கு சென்று மோட்சம் பெற்றார்.
பிரம்மச்சாரிய விரதம்
பீஷ்மர் உயிர் பிரிந்து மோட்சம் பெற்றாலும், அவர் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு தர்ப்பணம் செய்ய வாரிசுகள் இல்லை. இந்துக்களாக பிறந்த அனைவருக்கும் சிரார்த்தம் செய்யவேண்டும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இருந்தாலும், பீஷ்மர் ஒழுக்க நெறி தவறாமல் பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடித்து வந்ததால், அவருக்கு சிரார்த்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று வியாசர் கூறினார்.
பீஷ்மாஷ்டமி
வியாசர் அப்படி சொன்னாலும், பீஷ்மரின் ஆத்மாவுக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியமும் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார் வியாசர்.
பீஷ்மர், ரதசப்தமி முடிந்த மறுநாளான அஷ்டமி திதியன்று தன்னுடைய உயிரை போக்கிக்கொண்டார். அந்த அஷ்டமியே பீஷ்மாஷ்டமி என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு நாளை பீஷ்மாஷ்டமி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பீஷ்மாஷ்டமியை இந்துக்களான யார் வேண்டுமானாலும் செய்யலாம். பீஷ்மாஷ்டமி திதியில், அதிகாலையில் நீராடி, பித்தளை அல்லது செம்பு குவளையில் பால் கலந்த நீரை இடது கையில் எடுத்துக்கொண்டு, வலது கையில் அட்ஷதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் முதலியவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.
கீழே தாம்பாளம் வைத்து அதில்,
வையாக்ரபாதி கோத்ராய ஸாங்க்ருதி ப்ரவராய ச
கங்காபுத்ராய பீஷ்மாய ஆஜன்ம ப்ரஹ்மசாரிணே
பீஷ்மாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்
அபுத்ராய ஜலம் தத்மி நமோ பீஷ்மாய வர்மணே
பீஷ்ம: சாந்தனவோ வீர: ஸத்யவாதீ ஜிதேந்த்ரிய
ஆபி ரத்பி ரவாப்நோது புத்ரபௌத்ரோசிதாம் க்ரியாமி
பீஷ்மாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்
வஸூனா மவதாராய சந்தனோ ராத்மஜாய ச
அர்க்யம் ததாமி பீஷ்மாய, ஆபால ப்ரஹ்மசாரிணே
பீஷ்மாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்
என்று ஒவ்வொரு முறையும் இதமர்க்யம் என்று சொல்லி நீரை விடவேண்டும். நாளை பீஷ்மருக்காகவும், நம்முடைய முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால், நாம் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நம்முடைய வாழ்வில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
Comments