முனைவர். லக்ஷ்மிப்ரியா


முனைவர். லக்ஷ்மிப்ரியா

   நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்!
   ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்!
   வாணி சைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
   இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்!

என்று இத்தேசமெங்கும், ஏன் உலகெங்கும்கூட, கல்வியும் கலைகளும் ஓங்க வேண்டும், கலைவாணியின் கோயில்கள் பெருக வேண்டும் என்பது பாரதியின் உள்ளத் தவிப்பு. அந்த உள்ளத் தவிப்பைத் தன் உயிர்த்துடிப்பாகக் கொண்டுவிட்ட ஒருவர், முனைவர் லக்ஷ்மிப்ரியா!

வாசிப்பில் ஈடுபாட்டுடைய அனைவருக்கும் வரும் ஆவல், தானும் வாசிப்பிற்குக் கதையோ, கவிதையோ, கட்டுரையோ நல்கவேண்டும் என்பது. "எல்லோருக்குள்ளும் ஒரு கதை உண்டு" என்கிறார் இந்த இளம்பெண். அவர்களில் பலர் அதனை எழுதுவதிலும் வெற்றியடைகிறார்கள். அதுவே தங்களுக்கு ஆனந்தம் அளித்த கலைவாணிக்குத் தாங்கள் செய்யும் பூஜையாகக் கருதுகிறார்கள்.

முனைவர் லக்ஷ்மிப்ரியாவும் எழுத்தாளர்தாம். அவர் சிறுவயதில் படித்துக் களித்த கதைகள் அவரை எழுதத் தூண்டின. அவர் நூல்கள் ஆக்கம் பெற்று, அச்சும் பெற்றுப் புகழுறும்போது, லக்ஷ்மிப்ரியாவிற்குப் பிற எழுத்தாளர்களோடு நட்பு ஏற்பட்டது. அப்போதுதான் அவர் கதைகளை கற்பனை செய்வதோ படைப்பதோ எத்தனைக் கடினமோ, அத்தனைக் கடினம் அதனைப் பதிப்பிப்பது என்று அறிந்துகொண்டார்.

எழுத்தோ, கலையோ, சபையேறினால்தானே அது முழுமையடைகிறது? படைப்பு, பிறப்புக்கு நிகரானது. சில படைப்புகள் மக்கள் கண்களுக்கு வராமலே மறைகின்றன. மரணமிலாப் பெருவாழ்வை ஒரு படைப்பு பெறுவது, அது அச்சேறி, மக்கள் அங்கீகாரத்தைப் பெறும்போதுதான்.


ஆனால் படைப்பு பதிப்பாவது சுலபமல்லவே! பதிப்பகங்கள் புதிய எழுத்தாளரின் படைப்பை ஏற்றுக் கொள்வதே குதிரைக் கொம்பு. அப்படியே ஏற்றுக் கொண்டாலும், அதைப் பதிப்பிக்க அவரே பணம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. அப்படியே இலவசமாகப் பதிப்பித்தாலும், அதை விளம்பரப்படுத்தவாவது எழுத்தாளர் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. 

இதனைக் கண்ட லக்ஷ்மிப்ரியா என்ற அந்த இளம்பெண்ணின் மனத்தில் ஒரு எண்ணம் தோன்றியது - "நாம் ஏன் ஒரு பதிப்பு உதவி நிறுவனத்தை ஏற்படுத்தக் கூடாது? எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை இலவசமாக, அல்லது குறைந்த செலவில் பதிப்பித்து, அதனை விளம்பரப்படுத்தி அனைவரும் அறியச் செய்யுமாறு செய்யக் கூடாது? அனைத்து மொழிகளிலும், குறிப்பாக நம் தமிழ்மொழியில் நூல்கள் பெருகச் செய்வதைவிட, தேசத்திற்குப் பெரிய சேவை என்ன இருக்க முடியும்? இவ்வுலகில் அறிவின் புதிய ரத்தம் பாய்ச்சுவதும், அற்புதமான அறிவியல் மற்றும் பல்கலைக் கனிகள் கனியச் செய்வதும், அழகிய கருத்து மற்றும் கவிதை மலர்கள் பூக்கச் செய்வதும், இந்தச் சமூகத்தையே வேறுபாடுகளும் துன்பங்களும் இல்லாத பூந்தோட்டமாகச் செய்யும் சக்தியுள்ளதுமான நல்ல நூல்கள், வெறுமே எழுத்தாளரிடம் பணமில்லாத காரணத்தால் பதிப்பைக் காணாதிருப்பதா? ஜீவனுள்ள அந்த எழுத்துகள் சக்திபெற வேண்டாமா?"

இந்த எண்ணங்கள் அவருள் தூண்டிய உத்வேகந்தான்  பாக்கிடெர்ம் டேல்ஸ் என்ற நிறுவனத்தைத் தோற்றுவிக்கச் செய்தது. அறிமுக எழுத்தாளர்களின் எழுத்துகள் அச்சு வடிவமும் மின்னூல் வடிவமும் பெறுவதற்கு உதவி செய்கிறது இந்நிறுவனம். உக்கியோட்டோ பதிப்பக நிறுவனத்துடன் இணைந்து பலப்பல துறைகளில் ஆங்கிலம், தமிழ், பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, நேபாளி போன்ற பல மொழிகளில் பல்வேறு நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 


பதினைந்து பதிப்பகங்களோடு இணைந்து, பதினான்கு மொழிகளில், பலநூறு எழுத்தாளர்களின் ஆயிரக்கணக்கான நூல்களை வெளியிட்ட பெருமை இதற்கு இருக்கிறது. இந்த எழுத்தாளர்களில் சிறு குழந்தைகள் இருக்கிறார்கள், மிக வயதானவர்களும்கூட இருக்கிறார்கள் என்கிறார் லக்ஷ்மிப்ரியா.

குழந்தைகளுக்கான தளமாக இருக்கவேண்டும் என்றுதான் யானைக் குட்டியைச் சின்னமாகக் கொண்டு, பாக்கிடேர்ம் என்ற பெயரும் வைக்கப்பட்டது என்று சொல்லும் லக்ஷ்மிப்ரியா, அதன்பின் இந்த யானைக் குட்டி பெரிய யானையாக வளர்ந்து, எத்தனையோ எழுத்தாளர்களைத் தன் முதுகில் தாங்கி, அவர்களுக்கு யானைபலம் அளித்திருக்கிறது என்பதையும் குறிப்பிடும் இவருடைய யானைபலம், இவருடைய தாய் உமா அபர்ணா! பத்திர அளவில் ஒரு இயக்குனராக உள்நுழைந்தாலும், அதைமீறி அவர் பங்களிப்பு வெகு அதிகம். முக்கியமாக, தமிழ் நூல்கள் நூல்வடிவம் பெற்று பதிப்பகத்தை அடைகின்ற பொறுப்பு முழுவதையும் இவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

நிறுவனம் என்று பெயரே தவிர, இங்கு யாரும் 'வேலைசெய்பவர்கள்' அல்ல. எல்லோருமே பங்குதாரர்கள் போன்று, தங்களுக்குப் பிரியமான துறைகளில், புத்தகங்களில் வேலை செய்யலாம். அவர்களின் படைப்புத்திறனுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படுவதால் நூல்கள் உயர்தரத்துடன் வெளியாகின்றன.

ஒரு கதை சமர்ப்பிக்கப்படுகையில், அதே கருத்துள்ள கதை வேறு இருக்கிறதா என்ற ஆய்விலிருந்து, படைப்புச் சரிபார்த்துப் பிழைதிருத்தங்கள் செய்யப் பெற்று, நூல்வடிவம் பெற்று, பதிப்பாளரிடம் அனுப்பப்பட்டு அச்சேறி,அதன்பின் அது விளம்பரப்படுத்தப்பட்டு மக்களைச் சென்றடையும்வரை இந்நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்கிறது.

"இப்படிப் பல்வேறு எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகள் புத்தகமானதற்குக் காரணமான பாக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும்போது, நீங்கள் எப்படி உணர்வீர்கள்?" என்று லக்ஷ்மிப்ரியாவைக் கேட்டபோது, அவர் கூறிய பதில் ஆச்சரியப்படுத்தியது. "நான் எதை அதிகம் விரும்பினேனோ, அதையே செய்துகொண்டிருக்கிறேன். எழுத்தாளார்கள் என்னிடம் உதவி பெறுபவர்களல்ல,  என் லட்சியப் பயணத்தில் சக பயணிகள்! ஒருவருக்கொருவர் உதவுகிறோம், சமூகமும் இதனால் நன்மை பெறுகிறது என்ற திருப்தி கிடைக்கிறது."

ஓமன், ஹாலந்து, இங்கிலாந்து, ஐயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவருடைய நிறுனவத்தின் தூதர்கள் இருந்து பதிப்பிக்க வேண்டி நூல்கள் அனுப்புகிறார்கள். மேலும் இந்தியா, இந்தோனேஷியா, பூடான், நேபாளம் ஆகிய தேசங்களில் படைப்பாக்கத்திற்கான எழுதுதல் (creative writing)  வகுப்புகள் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் லக்ஷ்மிப்ரியா கற்பித்து வருகிறார்.

பதிப்பாளராக மட்டுமல்ல, பன்முகம் காட்டுகிறார் லக்ஷ்மிப்ரியா. இவர் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரும்கூட! மட்பாண்டங்கள் செய்யும் கலையிலும் ஆர்வம் உண்டாம்! 

லக்ஷ்மிப்ரியா சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட ஜப்பானிய எழுத்தாளரான முரகாமியின் "ஸ்புட்னிக் ஸ்வீட்ஹார்ட்" லக்ஷ்மிப்ரியாவின் பேனாவில் செந்தமிழ் இனியாளாகப் பிறப்பெடுத்திருக்கிறாள்.  இப்புத்தகம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

குழந்தைகள், வாழ்வில் பெருஞ்சோதனைகளைச் சந்தித்த பெண்கள், திருநர் போன்றவர்களுக்கு ஊக்கமளிப்பதும் லஷ்மிப்ரியா செய்துவரும் முக்கியச் சேவையாகும். ஆண்டுதோறும் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார்.

ஒருவரின் ஆத்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்வதும் அடையாளப்படுத்திக் கொள்வதும், தர்மத்திலும், அதனைச் செய்யும் தைரியத்திலும், அதனை அழகுறப் புரியும் கலையிலும்தானே? தன் அடையாளத்தை அறிவதுதான் பிறப்பின் நோக்கம். அதனைப் பிறரும் அடையுமாறு செய்யும் முனைவர் லக்ஷ்மிப்ரியா, பாராட்டுக்குரியவரே! தொடர்ந்து எழுத்துலகிற்குச் சேவை செய்துவரவும் பெரும் வெற்றிகளை அடையவும் எங்கள் வாழ்த்து.






ருத்ரா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி