: உலகமே கொண்டாடும் சூரிய வழிபாடு
: உலகமே கொண்டாடும் சூரிய வழிபாடு
ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதும், ஒரு சக்கரம் மட்டுமே கொண்டதுமான தேரில் ஏறி பவனி வருவதாக கருதப்படும் சூரிய பகவானுக்கு, ஆதித்தன், ஆதவன், ஞாயிறு, பரிதி, பகலவன், உதயன், இரவி, சவிதா, திவாகரன், கதிரவன் என்று பல பெயர்கள் உண்டு.
வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய பழங்கால இந்தியர்கள், சூரியன் பற்றிய அறிவியல்பூர்வமான செய்திகளை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து இருந்தனர்.
சூரியக்கதிர், ஒளிச்சிதறலுக்கு உள்ளாகும்போது, அது ஆங்கிலத்தில் 'விப்ஜியார்' என்று கூறப்படும் ஏழு விதமான நிற மாலையாக காட்சி அளிக்கிறது. இதனால்தான், சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரில் சுற்றி வருவதாக அவர்கள் உருவகப்படுத்தினார்கள்.
அனைத்து கிரகங்களில் சூரியன் மட்டுமே நிலையாக ஒரே இடத்தில் இருக்கிறது என்றும், மற்ற கிரகங்கள்தான் சூரியனைச் சுற்றி வருகின்றன என்றும் அறிவியல் கூறுகிறது.
அறிவியலின் இந்த கண்டுபிடிப்பை, முன்னதாகவே அறிந்து இருந்த இந்தியாவின் பழங்கால வானசாஸ்திர நிபுணர்கள், 'சூரியன் உதிப்பதும் இல்லை; அஸ்தமிப்பதும் இல்லை' என்று உறுதிபட கூறினார்கள்.
அவர்களது இந்த வாசகம், கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று கருதப்படும் ரிக் வேதத்தின் ஐதரேய பிராம்மணத்தில் இடம்பெற்று இருக்கிறது.
கோவில்களின் நவக்கிரக சன்னதியில், மற்ற 8 கிரகங்களைச் சுற்றிலும் வைத்து, நடுவே சூரியன் இருப்பதாக அமைத்ததும் இந்த காரணத்தினால்தான்.
சூரியன் ஒரே இடத்தில் நிலையாக இருக்கின்றபோதிலும், அதனை பூமி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால், சூரியன் காலையில் உதிப்பதுபோலவும், மாலையில் அஸ்தமனம் ஆவதுபோலவும் நாம் உணருகிறோம்.
அதேபோல, சூரியன் 6 மாத காலத்திற்கு வட திசையை நோக்கியும், அடுத்த 6 மாத காலத்திற்கு தென் திசையை நோக்கியும் பயணிப்பதாக கருதுகிறோம்.
இதனையும் உற்றுக்கவனித்த பழங்கால இந்தியர்கள், தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதங்கள் சூரியன் வடதிசையை நோக்கி பயணிப்பதால், அதற்கு உத்தராயன காலம் என்றும், ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் சூரியன் தென்திசையை நோக்கி பயணிப்பதால், அதற்கு தட்சிணாயன காலம் என்றும் பெயர் சூட்டினார்கள்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள் இருப்பதாக கணக்கிட்டவர்கள், சூரியன் ஒவ்வொரு ராசிக் கட்டத்திற்கும் நகர்வதை, மாதத்தின் முதல் நாள் என்றும் குறித்தார்கள்.
அவ்வாறு, தட்சிணாயன காலம் முடிந்து, உத்தராயன காலம் தொடங்கும்போது, தனுசு ராசியில் இருக்கும் சூரியன், மகர ராசிக்கு நகரும் நாளை, மகர சங்கராந்தி என்று கொண்டாடினார்கள்.
இன்றைய தினம், (ஜனவரி 15-ந் தேதி) சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பயணமாகிறார் என்பதால், மகர சங்கராந்தி தினம், பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
அதாவது, சூரியன் வட திசையை நோக்கி பயணத்தை தொடங்கும் புண்ணிய காலமான இன்றைய தினம், சூரியனை வழிபட வேண்டும் என்ற நோக்கத்திற்காக சங்கராந்தி தினம் கொண்டாடப்படுகிறது.
சூரியனால்தான் பூமியில் விவசாயம் நடைபெறுகிறது. இப்போது அறுவடை காலம். வயலில் அறுவடை செய்த தானியங்களை முதலில் சூரியனுக்கு படைத்து, நன்றி செலுத்தும் வகையில், சூரிய பகவானுக்கு பொங்கல் வைக்கப்படுவதால், தமிழகத்தில் இது பொங்கல் பண்டிகை என்ற பெயரையும் பெற்றுவிட்டது.
இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்றைய தினம், மகர சங்கராந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றும், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மகர் சக்ராத் என்றும், மத்திய பிரதேசத்தில் சக்ராத் என்றும், ஒடிசாவில் மகா சாலா என்றும், இமாசலப்பிரதேசத்தில் லோஹரி என்றும், டெல்லியில் சங்கராத் என்றும், குஜராத்தில் உத்தராயன் என்ற பெயரிலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் தாக்கம், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்பட்டது. இதன் காரணமாக அந்த நாடுகளிலும், சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் பண்டிகை அல்லது மகர சங்கராந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சங்கராந்தி என்பது, தாய்லாந்து, லாவோஸ் நாடுகளில் 'சொங்ராங்' என்ற பெயரைப் பெற்று இருக்கிறது.
நேபாள நாட்டில் 'மாகே சங்கராந்தி' என்றும், மியான்மர் நாட்டில் 'திங்க்யான்' என்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
வங்காள தேசத்தில், 'பவுஸ் சங்கராந்தி' என்ற பெயரில் மகர சங்கராந்தியைக் கொண்டாடுகிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள சிந்தி இன மக்கள், மகர சங்கராந்தி தினத்தை 'திர்மூரி' என்று அழைக்கிறார்கள்.
இலங்கையில் தைப்பொங்கல் என்ற பெயரிலேயே இந்த விழா கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி தினத்தின் முக்கிய அம்சமே சூரிய வழிபாடுதான்.
அப்படிப்பட்ட சூரிய வழிபாடு, உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் குறிப்பிட்ட இந்த தேதியில் என்று இல்லாமல், வெவ்வேறு காலகட்டங்களில் கொண்டாடப்படுகிறது.
உலகின் அனைத்து நாட்டு மக்களும், ஆதிகாலந்தொட்டே சூரியனை வழிபட்டு வந்து இருக்கிறார்கள் என்பது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. உலகில் மனித இனம் முதலில் தோன்றிய இடம் ஆப்பிரிக்காவா அல்லது இந்தியாவா என்பதில் இன்னும் உறுதியான கருத்து எட்டப்படவில்லை.
ஆப்பிரிக்காவில் முதலில் தோன்றிய இனம், பின்னர் இந்தியா போன்ற மற்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்து இருக்கலாம் என்று சில ஆய்வாளர்களும், தமிழகத்தில் அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களைக் கொண்டு, மனித இனம் முதலில் தோன்றிய இடம் தமிழகமே என்று சில ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
எப்படி இருந்தபோதிலும், உலகில் மனித இனம் தோன்றியது முதலே, சூரிய வழிபாடும் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதற்கான ஆதாரங்களும் பல நாடுகளில் கிடைத்து இருக்கின்றன.
4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியது என்று கருதப்படும் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் சூரிய வழிபாடு பற்றிய செய்தியைக் காண முடிகிறது. கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற வடு நீங்கு சிறப்பின் மண்ணிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்பது தொல்காப்பியரின் கூற்று.
அதாவது, சூரியன், நெருப்பு, சந்திரன் இம்மூன்றை வாழ்த்துவதும், கடவுள் வாழ்த்துபோல எண்ணப்படும் என்கிறார், தொல்காப்பியர். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சூரிய வழிபாடு முக்கியத்துவம் பெற்று இருந்ததை இந்த மேற்கோள் உறுதிப்படுத்துகிறது என அறிஞர்கள் கருதுகின்றனர்
இதேபோல, முதல் வேத நூலான ரிக் வேதத்தின் மூன்றாம் மண்டலம் 62-வது பிரிவு 10-ம் பாடலில், சூரிய வழிபாட்டுக்கான மந்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் சூரியன் என்பது, சவிதா என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிக் வேதத்தில் உள்ள மந்திரத்தின் பொருள், 'அந்த உன்னதமான சூரியனை நாம் வணங்குவோமாக. சூரியன் எல்லாவற்றையும் ஒளியூட்டுபவன். எல்லாம் அவனிடம் இருந்தே பிறக்கின்றன. எல்லாம் அவனிடமே திரும்பி செல்கின்றன. நமது அறிவை ஒழுங்குபடுத்த சூரியனை தியானம் செய்வோமாக. அவனை நோக்கி நாம் செல்வோமாக' என்பதாகும்.
ராமாயணத்திலும் சூரிய வழிபாடு இடம்பெற்று இருக்கிறது. ராவணனுடன் நடந்த போரில் ராமர் மிகவும் சோர்வடைந்து இருந்த நிலையில் அவருக்கு அகத்திய முனிவர் உபதேசித்தது ஆதித்ய ஹ்ருதயம் என்ற மந்திரம். சூரியனை வணங்கும் வகையில் அமைந்துள்ள இந்த மந்திரம், இந்துக்கள் வழிபாட்டில் முக்கிய இடம்பிடித்து இருக்கிறது.
இந்தியாவின் பழங்கால வானசாஸ்திரத்தில், சூரிய வழிபாடு, 'சவுரம்' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே சூரியனின் நகர்வையொட்டி உருவாக்கப்பட்ட பஞ்சாங்கம் 'சவுமாரம்' எனப்பட்டது.
கி.பி. 2-ம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் காப்பியத்தில், பூம்புகாரில் 'உச்சி கிழான் கோட்டம்' என்ற பெயரில் சூரியனுக்கு கோவில் இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிலப்பதிகாரம் கனாத் திறம் உரைத்த காதையில் இது பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கடல்கோளால் பூம்புகார் அழிந்தபோது, அந்த கோவிலும் கடலில் மூழ்கி இருக்கலாம்.
அதுபோல இந்தியாவின் பல பாகங்களில் சூரியனுக்காக கட்டப்பட்ட பல கோவில்கள், காலத்தால் அழிந்துவிட்டன.
ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற இடத்திலும், குஜராத் மாநிலம் மொதெரா என்ற இடத்திலும், காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் நகர் அருகேயும், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகேயும், கேரள மாநிலம் கோட்டயம் அருகேயும், தமிழகத்தில் கும்பகோணம் அருகே திருமங்கலக்குடி என்ற ஊரிலும் கட்டப்பட்ட சூரியக் கோவில்கள் போன்றவை இப்போது காணப்படுகின்றன.
கொனார்க் சூரியக் கோவில் ஒடிசா மாநிலத்தில் வங்க கடலோரம் அமைந்து இருக்கிறது. கங்கப்பேரரசன் நரசிம்மதேவரால் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலின் சில பகுதிகள் சேதம் அடைந்து இருந்தாலும், கோவிலின் மற்ற பகுதிகள் கலை அழகோடு காட்சி அளிக்கின்றன. இங்கு இருந்து மீட்கப்பட்ட சூரிய பகவான் சிலை, டெல்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. கொனார்க் கோவிலின் அழகிய தேர்ச்சக்கரத்தின் படம், பத்து ரூபாய் நோட்டில் காட்சி அளிக்கிறது.
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் நகர் அருகே இருப்பது, 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மார்த்தாண்ட சூரியக் கோவில் ஆகும். இங்கு இருந்த சூரிய பகவான் சிலை, இப்போது அமெரிக்காவில் கிளீவ்லேண்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே இருக்கும் அரசவல்லி என்ற சூரியன் கோவில், 7-ம் நூற்றாண்டில் தேவேந்திரவர்மன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. சிதிலமடைந்த இந்த கோவில் இப்போது புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.
குஜராத் மாநிலம் மொதெரா என்ற இடத்தில் 1026-ம் ஆண்டு கட்டப்பட்ட சூரியன் கோவில், ராவணனைக் கொன்ற ராமர், பிரம்மஹத்தி தோஷம் நீங்க பிரார்த்தனை செய்த தலம் என்று கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கதார்மல் என்ற சூரியன் கோவில் இருக்கிறது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே ரவிமங்கலம் என்ற ஊரில் ஆதித்ய சிவன் என்ற சூரியனார் கோவில் இருந்தது. பின்னர் இந்த கோவில், சிவன் கோவிலாக மாற்றப்பட்டுவிட்டது.
ஒடிசா, காஷ்மீர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சூரிய பகவான் கோவில்கள் இப்போது சிதிலமடைந்து உள்ளன. அங்கு வழிபாடு ஏதும் கிடையாது.
சென்னை செங்குன்றம் அருகே ஞாயிறு என்ற கிராமத்திலும் சூரியன் கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள சூரியன் கோவில்களிலும் ஆந்திரா, குஜராத்தில் உள்ள கோவில்களிலும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலின் மூலவர் சிவசூரியன் என்றும், தாயார் தெய்வங்கள் உஷா தேவி, சாயா தேவி என்றும் அழைக்கப்படுகிறார்கள். சூரிய பகவானின் இடதுபுறம் அவரது மனைவிகளில் ஒருவரான உஷா தேவியும், வலதுபுறம் மற்றொரு மனைவி சாயா தேவியும் காணப்படுகிறார்கள்.
காவிரியின் வடகரையில், கும்பகோணத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த கோவிலை, முதலாம் குலோத்துங்க சோழன் (1070-1122) கட்டியதாக தெரிகிறது.
திருமணக்கோலத்தில் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் சூரிய பகவான் உக்கிரமானவர் என்பதால், அவரது உக்கிரத்தைத் தணிக்க, எதிரே குரு பகவான் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கிறார். சிவன் கோவில்களில் நந்தி இருப்பதுபோல இந்த கோவிலில் சூரியனின் வாகனமான அசுவம் (குதிரை) உருவம் காணப்படுகிறது.
தமிழகத்தை உள்ளடக்கிய இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சூரிய வழிபாடு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் ஏராளம் இருக்கின்றன. உலக நாகரிகங்களில் மிகவும் பழமையானவை சிந்து சமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், எகிப்து நாகரிகம், இன்கா நாகரிகம், மாயன் கலாசாரம் போன்றவை என அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
சிந்து சமவெளி நாகரிகத்தில் கடவுள் வழிபாடு இருந்தது என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் அங்கே கிடைத்த சூரியன் முத்திரை, பெண் சிலை போன்றவற்றை கொண்டு, அங்கு வாழ்ந்த மக்கள் சூரிய வழிபாடு மற்றும் தாய் தெய்வ வழிபாடு ஆகியவற்றை மேற்கொண்டு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
5 ஆயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட எகிப்தில் வாழ்ந்த மக்கள், ஏராளமான கடவுள்களை வழிபாடு செய்து வந்தனர். இந்த கடவுள்களின் எண்ணிக்கை 1,400 என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், இந்த கடவுள்களில் முதன்மையான இடத்தைப் பிடித்து இருக்கும் கடவுள், 'ரெ' அல்லது 'ரா' என்ற பெயரைக் கொண்ட சூரியக் கடவுள் ஆகும்.
கருடத் தலை முகத்துடனும், அதன் மீது சூரியனைக் குறிக்கும் வட்ட வடிவம் மற்றும் பாம்பு உருவம் ஆகியவற்றைத் தாங்கி இருக்கும் கடவுள் 'ரெ' மக்கள் அனைவரையும் படைத்தவர் என்பதும், அந்த கடவுளின் வழிவந்தவர்கள்தான் எகிப்து மன்னர்கள் என்பதும் பண்டையகால எகிப்து மக்களின் நம்பிக்கை.
உலகின் முதல் நாகரிகம் என்று மேற்கத்திய நாடுகளின் ஆய்வாளர்களால் கருதப்படும் சுமேரியன் நாகரிகம் என்பது, தற்போதைய ஈரான், ஈராக் பகுதிகளை உள்ளடக்கிய மெசபொடோமியாவில் கி.மு.2,500-ம் ஆண்டில் இருந்ததாக தெரிகிறது. டைக்ரீஸ், யூப்ரட்டீஸ் ஆகிய நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள், சூரியனை உதயம் என்பதைக் குறிக்கும் வகையில் 'உது' என்று அழைத்தனர். அங்கு 'ஊர்' என்ற இடத்தில் இருந்த கோவில் 'இ' என குறிப்பிடப்பட்டது.
கி.மு.2500-ம் ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்த மாயன் நாகரிகம், மெக்சிகோ நாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கே வாழ்ந்த மக்கள், சூரியக் கடவுளை 'கினிச் அஹா' என்ற பெயரில் வழிபட்டனர். சூரியக் கடவுளுக்காக அங்கே கட்டப்பட்ட பிரமிடில், ஆண்டின் 365 நாட்களைக் குறிக்கும் வகையில் 365 படிகளை அமைத்தார்கள். சூரியன் திசையை நோக்கியே அந்த கட்டிடத்தின் அனைத்து பகுதிகளும் அமைந்து இருக்கின்றன. சூரிய கிரகணத்தின்போது அங்கே உயிர்ப்பலி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அதேபோல, மத்திய மெக்சிகோவில் இருந்த பழமையான அஸ்டெக் நாகரிகத்திலும் சூரிய வழிபாடு முக்கிய இடம்பெற்று இருந்தது. அவர்களது சூரியக் கடவுளின் பெயர், 'டொனாடிவ்' என்பதாகும்.
மற்றொரு பழமையான நாகரிகமான, தென் அமெரிக்காவின் இன்கா நாகரிக மக்கள், சூரியக் கடவுளை 'இண்டி' என்ற பெயரில் அழைத்தனர், சூரியனில் இருந்து பூமி தொலைவில் காணப்படும் ஜூன் 22-ந் தேதி அன்று 'இண்டி ராய்மி' என்ற பெயரில் புத்தாண்டைக் கொண்டாடினார்கள்.
கிரேக்கத்தில், சூரியனை பெண் கடவுளாக உருவகப்படுத்தினார்கள். அந்த கடவுள், ஹெலியஸ் என்றும், டைட்டன் என்றும் அழைக்கப்பட்டது. 5-ம் நூற்றாண்டிற்கு பிறகு சூரியக் கடவுள், அப்போலோ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். 4 குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியக் கடவுள் கிழக்கே இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்வதாக அந்த நாட்டு மக்கள் நம்பினார்கள்.
பழங்கால ரோம் பேரரசில், சூரியக்கடவுள், 'சோல் இண்டிக்ஸ்' என்று அழைக்கப்பட்டார். 274-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதிக்கு பிறகு, அந்த கடவுளுக்கு ஹெலியஸ் என்றும், 'சோல் இண்டிக்ஸ்' என்றும் பெயர் சூட்டப்பட்டது. 387-ம் ஆண்டிற்கு பிறகு அங்கே கிறிஸ்தவம் பின்பற்றப்பட்டதால் சூரிய வழிபாடு குறைந்தது.
தற்போது அரபு நாடாக இருக்கும் ஜோர்டான் நாட்டில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் கடவுள் 'துசாரா' என்ற பெயரில் வழிபடப்பட்டார். கி.மு.400-ம் ஆண்டுக்கு முன்பு வரை அங்கே பல கோவில்கள் இருந்தன. அந்த நாட்டில் வெளியிடப்பட்ட நாணயங்களில் சூரியன் உருவம் இடம் பெற்ற அளவுக்கு அங்கே சூரிய வழிபாடு இருந்தது.
மிகப் பழங்காலத்தில் இருந்தே ஜப்பான் நாட்டில் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அந்த நாட்டில் சூரியனை, 'அமாதெரசு' என்ற பெயரில் பெண் தெய்வமாக வழிபட்டார்கள். ஆசியாவின் கிழக்கே இருப்பதால், தங்கள் நாட்டில்தான் சூரியன் உதிப்பதாக அந்த நாட்டு மக்கள் நம்பினார்கள். அங்கு ஹோன்சூ என்ற தீவு உள்பட பல இடங்களில் சூரியக் கோவில்கள் இருந்தன. ஜப்பான் மன்னர்கள், சூரியனின் வழி வந்தவர்கள் என்பது அந்த நாட்டு மக்களின் நம்பிக்கை. ஜப்பான் தேசிய கொடியின் மத்தியில் வட்ட வடிவம் இடம் பெற்று இருக்கிறது. அது சூரியனைக் குறிக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு, சூரியனின் கதிர்களைக் கொண்ட வட்ட வடிவம் அந்த கொடியில் பொறிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டில் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முந்திய 'ஸ்டோன்ஹென்ச்' என்ற பாறை அமைப்பு உள்ளது. வட்ட வடிவிலான அந்த பாறை அமைப்பின் ரகசியம் என்ன என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த பாறை அமைப்பு, சூரிய வழிபாட்டைக் குறிக்கிறது என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.
ஜெர்மனி நாட்டில், சூரியக் கடவுளை பெண்ணாக சித்தரித்து அந்த கடவுளுக்கு 'சோல்' என்ற பெயரைச் சூட்டி இருந்தனர்.
இதேபோல பல ஐரோப்பிய நாடுகளிலும் சூரிய வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து இருக்கின்றன. ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதியன்று அவர்கள் சூரிய வழிபாடு நடத்தினார்கள். ஆனால் பிற்காலத்தில் அந்த தேதியை கிறிஸ்தவம் தனதாக்கிக்கொண்டது.
வரும் காலத்தில் மனித இனம், நாகரிகத்தில் எப்படிப்பட்ட பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், வானத்தில் சூரியன் ஜொலித்துக்கொண்டு இருக்கும் வரை, சூரிய வழிபாடும் இருந்து கொண்டேதான் இருக்கும்.
Comments