ஷியாம் பெனகல் (Shyam Benegal)

 


உலகப் புகழ்பெற்ற இந்தி திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளரான ஷியாம் பெனகல் (Shyam Benegal) பிறந்தநாளின்று
🎥செகந்திராபாத்தில் (1934) பிறந்தவர். தந்தை புகழ்பெற்ற புகைப்பட நிபுணர். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் நடிகருமான குருதத், இவரது மாமா. இயல்பாகவே இவருக்கு திரைப்படத் துறையில் ஆர்வம் பிறந்தது. அப்பா கொடுத்த கேமராவைக் கொண்டு 12 வயதில் சினிமா எடுத்தார்.
🎥ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். பின்னாளில் இங்கு ஹைதராபாத் ஃபிலிம் சொசைட்டி தொடங்கினார். பம்பாயில் உள்ள விளம்பர ஏஜென்ஸியில் 1959-ல் காப்பி ரைட்டராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார். விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் படங்கள் தயாரித்து வந்தார். 900-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள் தயாரித்துள்ளார்.
🎥புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவராக 2 முறை இருந்தார். அப்போதே ஆவணப்படங்கள் தயாரிக்கத் தொடங்கினார். இவரது ‘எ சைல்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ்’ ஆவணப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, சத்யஜித் ரே குறித்த ஆவணப் படங்கள் உட்பட பல ஆவணப்படங்கள் எடுத்தார்.
🎥ஹோமிபாபா ஃபெலோஷிப் பெற்று நியூயார்க்கில் உள்ள சில்ட்ரன்ஸ் டெலிவிஷன் பயிற்சிப் பட்டறையில் பணியாற்றினார். பம்பாய் திரும்பியவர், 1973-ல் அங்க்கூர் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது சிறந்த தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.
🎥அடுத்தடுத்து வந்த இவரது திரைப்படங்களின் வர்த்தக ரீதியிலான வெற்றி, இந்தியத் திரையுலகில் ‘இணை திரைப்பட இயக்கம்’ உருவாகக் களம் அமைத்துக் கொடுத்தது. அங்க்கூர், நிஷாந்த், மந்த்தன், பூமிகா என இவர் இயக்கிய முதல் 4 திரைப்படங்கள் இந்தி திரையுலகில் ஒரு புதிய பாணியை உருவாக்கின.
🎥தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி பாலிவுட்டில் தனி முத்திரை பதித்தார். 1978-ல் இவர் தயாரித்து இயக்கிய ‘மந்த்தன்’ திரைப்படத்துக்கான திரைக்கதையை இவரும் இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியனும் இணைந்து எழுதினர்.
🎥பல குறும்படங்களையும் தயாரித்துள்ளார். 1980-களில் தூர்தர்ஷனுக்காக ‘யாத்ரா’, ‘கதா சாகர்’, ‘பாரத் ஏக் கோஜ்’ உள்ளிட்ட பல தொடர்களையும் தயாரித்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான வரலாறு தொடர்பாக ‘சம்விதான்’ என்ற திரைப்படத்தை எடுத்தார்.
🎥மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் பணியாற்றினார். பத்ம, பத்மபூஷண், தாதா சாஹேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். அங்க்கூர், மந்த்தன், நிஷாந்த், ஜுனூன், ஆரோஹன் உள்ளிட்ட இவரது 7 படைப்புகளுக்கு சிறந்த இந்தி திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.
🎥கேன்ஸ், பெர்லின், மாஸ்கோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகள் வென்றுள்ளார். 2012-ல் லண்டனில் உள்ள சவுத் ஏஷியன் சினிமா ஃபவுண்டேஷன், எக்ஸலன்ஸ் இன் சினிமா அவார்ட் என்ற விருதினை வழங்கியது.
🎥சிறந்த இந்தி இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை பெற்ற ஒரே இயக்குநர் என்ற தனிப்பெருமை பெற்றவர். இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகப் புகழ்பெற்றுள்ள ஷியாம் பெனகல் இன்று 88-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்

From the Desk of கட்டிங் கண்ணையா!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி