தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்
கார்த்திகை விழா குறித்து புராணங்கள் பல்வித காரணங்களைச் சொன்னாலும் மூன்று காரணங்கள் முக்கியமாக போற்றப் பெறுகின்றன. மலையாய் அமர்ந்த மகாதேவன்.* அடி - முடிகாண முடியா வண்ணம் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் காட்சித்தந்து அவர்கள் அறியாமையை நீக்கி சிவபொருமான் நெருப்பு ஜோதியாய் காட்சித் தந்து அண்ணாமலையாக அருள்பாலித்த திருநாள் திருக்கார்த்திகை திருநாள் ஆகும்.
தீப்பொறியாய் உதித்த சரவணன். ஈசனின் ஆறுமுகங்களிலிருந்து தீப்பொறியாய் உதித்த சண்முகக்கடவுளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள்.
அவர்களுக்குரிய கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை கார்த்திகேயனாக வழிபட நற்பேறுகள் யாவும் கிடைக்கும் என்பது முருகப்பெருமான் தந்தருளிய வரம்.
அதன்படி இந்நாள் கார்த்திகேயக் கடவுளுக்குரிய நாளாகவும் போற்றப்பெறுகிறது.
தீபமாக நின்ற திருமால் ஒருமுறை கலைவாணிக்கு தெரியாமல் பிரம்மன் யாகம் ஒன்று நடத்தினான்.
இதனால் சினந்த சரஸ்வதி யாகத்தை அழிக்க மாய நலன் என்ற அசுரனை ஏவினாள்.
அவன் யாகத்தை தடுக்கும் பொருட்டு உலகம் முழுமையும் இருட்டாக்கினான். உடன் பிரம்மன் திருமாலை வேண்டி நிற்க, பகவான் ஜோதியாய் ஒளிர்ந்து இருளை விரட்டி யாகத்தை காத்தருளினார். இப்படி ஜோதியாய் தோன்றிய விஷ்ணுவை தீப உருவில் வணங்குவர் வைணவர்கள்.
திருக்கார்த்திகை வழிபாடு
கார்த்திகை மாதம் பெளர்ணமி திருநாளன்று திருக்கார்த்திகை நட்சத்திரத்தோடு பொருந்தியிருக்கும்போது தீபத்திருக்கார்த்திகை தொடங்கி தொடர்ந்து சிவகார்த்திகை, பெருமாள் கார்த்திகை குப்பைக் கார்த்திகை என மூன்று நாட்கள் கொண்டாடப்படும்.
பொதுவாக திருக்கார்த்திகை ஒளி விழா ஆகையால் மாலையில் முழுநிலவு தோன்றிய பின்னர் விளக்கேற்றி கொண்டாடினால் சிறப்பு.
எனவே கார்த்திகை விரதமிருப்போர் காலை நேரத்தில் வீட்டை நன்றாகக் கழுவி, மாவிலைத் தோரணம் கட்டி மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும்.
பின்னர் கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட மனைகளில் தெய்வப் படங்களை வைத்து சந்தன, குங்குமத்திலகமிட்டு, பூச்சூட வேண்டும்.
பின்னர் தலைவாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து கார்த்திகைப் பட்சணங்களாகிய கொழுக்கட்டை, கார்த்திகைப் பொறி பிரசாதங்களோடு, பழ வகைகளும் படைத்து மாவிளக்கும் ஏற்றி வைத்து பூஜிக்கவேண்டும்.
முதலாவதாக கணபதியை வணங்கிவிட்டு தீப மங்கள ஜோதி நமோ நம என தீப வழிபாட்டு பாடல் பாடி பூஜை செய்து முடித்து வீடெங்கிலும் தீபங்கள் ஏற்றி வைத்து இறையருள் பெறலாம்.
கிருத்திகை நட்சத்திரத்திற்கு அதிஷ்டான தேவதை அக்னி. எனவே கிருத்திகை நட்சத்திரத்துடன் கூடிய கார்த்திகைப் பெளர்ணமி தினத்தில் பகவானுக்கு தீபம் ஏற்றுவது நல்லது. தெரிந்து கொள்வோமா தீபங்களை பற்றி.
தீபங்கள் பதினாறு
1. துபம்,
2. தீபம்,
3. அலங்கார தீபம்,
4. நாக தீபம்,
5. விருஷப தீபம்,
6. புருஷாமிருக தீபம்,
7. சூல தீபம்,
8. கமடதி (ஆமை) தீபம்,
9. கஜ (யானை) தீபம்,
10. வியாக்ர (புலி) தீபம்,
11. சிம்ஹ தீபம்,
12. துவஜ (கொடி) தீபம்,
13. மயூர (மயில்) தீபம்,
14. பூரண கும்ப (ஐந்து) தட்டு தீபம்,
15. நட்சத்திர தீபம்,
16. மேரு தீபம்.
தீபம் ஏற்றும் முறைகள் பத்து
1. தரையில் வரிசையாக ஏற்றுதல்,
2. தரைமீது கோலம் போட்டு வட்டமாக தீபம் ஏற்றுதல்
3. சித்ர தீபம்,
4. மாலா தீபம்,
5. அடுக்கு தீபம்,
6. ஆகாச தீபம்,
7. ஜல தீபம் (நீரில் மிதக்கவிடுவது)
8. நெளகாதீபம் (படகு போன்று கட்டி பெரிய தீபமாக ஏற்றி நீரில் மிதக்க விடுவது)
9. கோபுர தீபம் (கோயில் கோபுரங்களின் மீது தீபம் ஏற்றுதல்)
10. ஸர்வ தீபம் (இல்லத்தில் முழுவதும் தீபம் ஏற்றுதல்)
தீப விளக்கம்:பரணி தீபம், ரோஹிணி தீபம், கிருத்திகா தீபம் என விளக்கேற்றுவது வழக்கம். கிருத்திகா தீபம் தனி விசேடமானது.
கார்த்திகை மாத மூர்த்தியான தாமோதரனுக்கு, ஸ்நானம் செய்த பிறகு அர்க்கியம் அளிப்பது சிறப்பு. இம்மாதத்தில் துளசி தளங்களால் லட்சார்ச்சனை செய்தால் மிகவும் புண்ணியம் என்று மாத மகாத்மியம் கூறுகிறது.
கார்த்திகையில் கரகசதுர்த்தி என்னும் நாளில் ஆகாச தீபம் ஏற்றி வழி படலாம். ஆகாச தீபம் வீட்டின் மாடியிலோ உயரமான இடத்திலோ ஏற்றப் பட்டால் யம பயம், கெட்ட கனவு ஆகியவற்றி லிருந்து விடுபடலாம்.
Comments