திரைக் கலைஞர் ரோகிணி
திரைக் கலைஞர் ரோகிணி அவர்களை இருபத்தி ஐந்து ஆண்டுகளாய் அறிவேன் என்றாலும் பல வருடங்கள் ஆயிற்று அவரை நேரில் சந்தித்து.
நேற்று 'பிகினிங்' (#begining ) பட ப்ரமோஷனுக்காக தொலைக்காட்சி ஒளிப்பதிவு ஒரு
ஒன்றுக்கு 'திருப்பதி பிரதர்ஸ்' அலுவலகம் வந்திருந்த அவரைச் சந்திக்க முடிந்தது.
பல ஆண்டுகள் ஆன போதும் நேற்று விட்ட இடத்தில் இருந்து இன்று உரையாடலைத் தொடங்குவதைப் போன்ற உணர்வு சிலரிடம் மட்டும்தான் உருவாகும். அது நேற்று கிடைத்தது.
என் தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது என்றார் . இப்போது நானும் ஒரு நடிகன் என்றேன். வாய்விட்டு சிரித்து 'வாங்க வாங்க' என்றார்.
'புத்தகக் கண்காட்சிக்கு என்ன கொண்டு வருகிறீர்கள்?'
ஒரு கவிதைத் தொகுப்பு மேடம்... தலைப்பு 'முக்கோண மனிதன் '
'வாழ்த்துக்கள் பிருந்தா '
மேலும் நீண்ட உரையாடலில் அவரது பிறந்த நாளில் நான் எழுதிய வாழ்த்தை நினைவு கூர்ந்து நேற்று நன்றி தெரிவித்தார்.
சென்ற ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றான 'விட்னஸ்' திரைப்படத்தில் பங்கேற்றதற்காக அவரைப் பாராட்டினேன்.
கைக்குழந்தையாகப் பார்த்த அவரது மகன் இப்போது அட்லாண்டாவில் PhD படிக்கிறான் . கேட்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. நிழல் அம்மா மட்டும் அல்ல... ரோகிணி அவர்கள் நிஜ அம்மாவும் கூட ...
தனக்கு வருகிற வாய்ப்புகளில் தகுதியானவற்றைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இயல்பு கொண்டவர் ரோகினி அவர்கள். அண்மையில் பார்த்த 'விட்னசு'ம் சரி இப்போது அவர் நடித்து வருகிற ஜனவரியில் வெளிவர இருக்கிற 'பிகினிங்கு'ம் சரி... கதாபாத்திரத் தேர்வில் அவர் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பது தெரிந்தது.
இரண்டிலும் 20- களில் இருக்கும் நாயகர்களின் அம்மாவாக நடித்திருப்பவர் ரோகிணி. இரண்டுக்கும் இடையில் அவ்வளவு அழகான நுட்பமான வேறுபாடு தெரிந்தது.
தென்னிந்திய மொழிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவ்வளவு பொருத்தமான இயல்பான முகம்.
இயக்குனர், குரல் பதிவுக் கலைஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர், தீவிர வாசகர், எழுத்தாளர், நடிகை எனப் பன்முக பரிமாணம் கொண்ட ரோகிணி அவர்களுக்கு என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெற்றேன்.
*
அன்புடன் ,
பிருந்தா சாரதி
*
Comments