சாப விமோசனம் தந்த கைசிக ராகம்*

 சாப விமோசனம் தந்த கைசிக ராகம்*



ஸ்ரீவைஷ்ணவ கைசிக ஏகாதசி (4.12.2022 - ஞாயிறு)


கார்த்திகை வளர்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு கைசிக ஏகாதசி என்று பெயர். ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடங்களில் 25 ஏகாதசிகள் கூட வரலாம். ஆனால் இதில் பிரதானமான ஏகாதசிகள் இரண்டு. ஒன்று மார்கழியில் வரும் மோட்ச ஏகாதசி எனப்படும் வைகுண்ட ஏகாதசி, இரண்டு கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் கைசிக ஏகாதசி.


மோட்ச ஏகாதசி என்பது பல புண்ணியங்கள் இந்த உலகத்திலே செய்து, பகவானுடைய கருணையைப் பெற்று, மோட்சம் அடைய வேண்டிய ஆத்மாவை, பகவான் தானே வந்து தனது பதத்திற்கு அழைத்துச் செல்லும் அமைப்பில் அமைந்தது. வைகுண்ட ஏகாதசி அன்று பல வைணவ ஆலயங்களில் வடக்கு வாசல் திறந்து இருக்கும். அதனை மோட்ச வாசல் அல்லது பரமபதவாசல் என்று அழைப்பார்கள்.


யாகமும் ஹோமமும் செய்வது எளிதான காரியமல்ல


ஆனால் கைசிக ஏகாதசி என்பது ஒரு பண்ணின் பெயரோடு அமைந்த ஏகாதசி. அந்தணர் ஒருவர் யாகம் செய்யும் பொழுது பல்வேறு தவறுகளினால் பிரம்ம ராட்சசனாக மாறி வழியில் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் துன்புறுத்துகிறார். இங்கே கவனிக்க வேண்டியது ஒரு யாகமும் ஹோமமும் செய்வது எளிதான காரியமல்ல.


தவறான பொருள்களை சரிவர யாகத்தில் உபயோகபடுத்தாவிட்டாலும், அல்லது தவறான பொருள்களை உபயோகப்படுத்தினாலும், மந்திர உச்சரிப்பு சரிவர செய்யாவிட்டாலும், அல்லது சிரத்தை இன்றி செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யாமல் விட்டாலும் யாகம் பயன் தராது என்பது மட்டுமல்ல, எதிர்விளைவுகளை தந்துவிடும்.


இதற்கு ஒரு சிறந்த உதாரணம்


ஒரு காரை இயக்க தெரியாத ஒருவர் தவறாக இயக்கினாலும் அலட்சியமாக இயக்கினாலும் விபத்து நேரிடும் அல்லவா அதைப் போலத்தான். இது. இதில் காரும் பயனற்றுப் போய்விடும். கார் ஓட்டுனருக்கும் ஆபத்து வந்து விடும். உள்ளே அமர்ந்து இருப்பவருக்கும் ஆபத்து வந்து விடும். யாகங்களை முறையற்று செய்தாலும் யாகம் பயனற்று போகும். செய்த வருக்கும், செய்ய சொன்னவருக்கும் பல துன்பங்கள் ஏற்படும். அப்படித்தான் பேராசையோடு ஆத்ம சுத்தி இல்லாமல் அலட்சியமாக செய்த யாகம் பிரம்மராட்சசனாக மாற்றிவிட்டது.


திருக்குறுங்குடி


இது நடந்தது திருநெல்வேலிக்கு அருகில் திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசத்தில். இங்கே தான் திருமங்கையாழ்வார் பரமபதித்தார். அவருடைய திருவரசு இங்கு உண்டு. இதே திருக்குறுங்குடியில் பாணர் குலத்தில் நம்பாடுவான் என்ற ஒரு எளிய பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் பேர் கூடச் சரியாகத் தெரியவில்லை.


பெருமாள் நம்மை தினமும் பாடுகின்றவன் என்பதனால் பிரியத்தோடு நம்பாடுவான் என்று பெயர் சூட்டினார். வராக புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மகாத்மியம் இப்படித்தான் கூறுகின்றது. இவர் ஒவ்வொரு ஏகாதசிக்கும் முழுமையாக உபவாசமிருந்து, இரவெல்லாம் திருக்குறுங்குடி கோயில் நம்பியை பாடி, காலையில் துவாதசி பாரணை செய்வார்.


பிரம்மராட்சஸ்


இப்படி ஒரு கார்த்திகை வளர்பிறை ஏகாதசி அன்று இவர் கோயிலுக்குப் பாடச் சென்ற போது வழியில் பிரம்மராட்சஸ் பிடித்துக் கொண்டது. ‘‘எனக்கு பசிக்கிறது. உன்னைச் சாப்பிடப் போகிறேன்’’ என்று பயமுறுத்தியது. நம்பாடுவான், ஒரு உயிருக்கு தான் உணவாவது குறித்து எந்தக் கவலையும் படவில்லை. ஆனால் பெருமாள் கைங்கரியம் அதாவது பாடும் தொண்டுக்கு தடை வருமே என்று வருத்தப்பட்டார். தான் கோயிலுக்குச் சென்று பாடி முடித்து விட்டு வந்தவுடன், உனக்கு உணவாகிறேன் என்று சத்தியம் செய்து விட்டு, கோயிலுக்குச் சென்று விடுகிறார் நம்பாடுவான்.


இவர் செய்த சத்தியம் குறித்து அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சாஸ்திர நிர்ணய விஷயங்கள் வெகு அழகாகச் சொல்லப்பட்டுள்ளன.

நம்பாடுவான் பாடிவிட்டு திரும்பி வருகின்ற பொழுது, பிரம்ம ராட்ஸசன் நம்பாடுவான் பெருமையைப் புரிந்து கொண்டு, ‘‘தனக்கு சாபவிமோசனம் செய்யும்படி’’ வேண்டுகிறான். நம்பாடுவான் பலவாறு மறுத்து, கடைசியில் தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்து, பிரம்ம ராட்சசை சாபத்திலிருந்து விடுவிக்கிறார்.


இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்


வேதம் ஓதிய அந்தணர் தவறான செயலால் பிரம்மராட்சஸாக மாறினார். ஆனால் கானம் பாடிய பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவான் தான் பாடிய ஒரே ஒரு பண்ணின் பலனைத் தந்து சாபவிமோசனம் தந்தார் என்று சொன்னால் பகவான்.


1.  ஒருவர் பிறந்த குலத்தைப் பார்ப்பதில்லை; பக்தியை மட்டுமே பார்க்கின்றான்.


2. பகவான் தமிழ்பண்களைக் கேட்பதில் பிரியமானவனாக இருக்கின்றான். கைசிக ஏகாதசி அன்று இரவு கண் விழித்து பகவானைப் பாட வேண்டும். அது நமக்கான புண்ணியங்களைத்  தருவது மட்டுமல்ல, பிறருடைய பாவங்களையும் எரிக்க வல்லது.


இன்றைக்கும் திருகுறுங்குடியில் கைசிக ஏகாதசி தினத்தன்று இரவில் கோயில் மண்டபத்தில் நம்பாடுவான் சரித்திரம் அபாரமாக நடைபெறும். இந்த நாடகத்தை பார்ப்பதற்கென்றே திருக்குறுங்குடியில் ஆயிரக்கணக்கானவர் வந்து சேருவார்கள்.


கைசிக புராண படனம்


இது தவிர அன்றைக்கு எல்லா வைணவ ஆலயங்களிலும் கைசிக புராண படனம் நடைபெறும். இந்த ஏகாதசியின் மற்றொரு பெருமை, ஆனி மாத வளர்பிறை ஏகாதசியில் ஜேஷ்டாபிஷேகம் செய்து கொண்டு, ஆவணி வளர்பிறை ஏகாதசியில் சயனத்திற்கு செல்லும் (யோக துயில்) பெருமாள், கார்த்திகை வளர்பிறை ஏகாதசியில் சாதுர்மாஸ்ய யோக நித்திரையில் இருந்து எழுகிறார். அதனால் இந்த ஏகாதசிக்கு உத்தான ஏகாதசி என்றும் பெயர் உண்டு.


இந்த ஏகாதசி இரவில் பகவானுடைய புண்ணிய கதைகளையும் புராணங்களையும் படிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்லியிருக்கின்றன. வராக புராணத்தில் சொல்லப்பட்டுள்ள கைசிக மகாத்மியத்தை வியாக்கியானத்தோடு எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் படிப்பார்கள்.


பிரம்ம ரதம்


அதன்பிறகு நம்பெருமாளுக்கு வேத விண்ணப்பம் நடக்கும். கட தீபம் ஆகும். நம்பெருமாள் ஆஸ்தான புறப்பாடு நடக்கும். அப்பொழுது பராசரபட்டர் தமது பாரம்பரிய அங்கி பட்டு குல்லாய் அணிந்து கொண்டு சந்நதிக்கு வருவார். அரையர்கள் பாடும் இன்னிசையை நம்பெருமாள் கேட்பார். அப்பொழுது அரங்கனின் திருமுடியிலும் திரு மேனியிலும் பச்சை கற்பூரப் பொடிகள் வாரி இறைப்பார்கள். புஷ்பங்களை சமர்ப்பிப்பார்கள்.


ஆஸ்தான மேல் படியில் நம்பெருமாளுக்கு திருவந்திக்காப்பு ஆகும். கைசிக புராணம் அவதரித்த நாளில், புராணம் வாசித்த “நம் பட்டரை திருமாளிகையில் (வீட்டில்) விட்டு வா” என்ற பெருமாள் உத்தரவு வாங்கி அர்ச்சகர் சொல்வார். ஸ்தானிகர் அதை கோயில் மணியக்காரரிடம் சொல்லுவார். நம்பெருமாள் தம்முடைய திருமேனியில் சாத்தி இருந்த மாலையை களைந்து பட்டருக்குச் சாதிப்பார்.


ஸ்ரீசடாரி, அபயஹஸ்த மரியாதைகள் நடைபெறும். பட்டர் உள்ளே சென்று பெரிய பெருமாளை சேவித்து, வெளியே ஆர்யபடாள் வாசல் வந்தவுடன், வாத்தியங்களோடு புறப்படுவார். பெரிய பெருமாளை வலம் வந்து ஆலய வாசலில் இருக்கும் ரதம் போன்ற ஒரு கேடயத்தில் தம்முடைய திருமாளிகைக்கு பட்டர் செல்வார். இதற்கு பிரம்மரதம் என்று பெயர்.


இந்த பிரம்ம ரதம் ஏறிய பட்டர், தாயார் சந்நதி வரை உள்ள பல சந்நதிகளில் நின்று ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் இவர்களின் மாலையைப் பெற்றுக் கொண்டு நாச்சியார் சந்நதி வாசலில் மேட்டழகிய சிங்கர் மாலையையும் பெற்றுக் கொண்டு தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருள்வார்.


இதைப்போலவே பிரம்மா ரதம் நிகழ்ச்சி திருக்கோவிலூரிலும் திருச்சித்ரகூடம் முதலிய பல்வேறு திவ்ய தேசங்களிலும் நடைபெறும். கைசிக புராணம் புத்தகத்தை பார்த்து பெருமாளுக்கு முன்னால் படிக்கப்படும். பெருமாள் சந்நதியில் அவரவர்களுக்கு மரியாதை செய்த பிறகு கோயில் மரியாதையோடு திருமாளிகையில் (வீட்டில்) விட்டு வரச் செய்வர்.


மேளதாளங்களோடு கோயிலில் இருந்து புறப்பட்டு தங்கள் வீடுகளுக்கு வந்து சேர்வார்கள். நம்பாடுவான் சரித்திரமும், கைசிக புராணம் படித்தலும், பிரம்ம ரத மரியா தையும் கைசிக ஏகாதசியில் நடைபெறும் மகத்தான விசேஷங்கள் ஆகும்.


தொகுப்பு : சுதர்சன்...

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி