wonder women /அஞ்சலி மேனன்
இயக்குனர் அஞ்சலி மேனனை எனக்குப் பிடிக்கும். அவர் இயக்கிய wonder women படத்தினை SONY LIV- ல் பார்த்தேன்.
எழுதும்போதே அஞ்சலி முடிவு செய்திருக்க வேண்டும், இந்தப் படத்திற்கென்று ஒரு கதை தேவையில்லை என்று. நதியா, நித்யா மேனன், பார்வதி, பத்மப்ரியா , சயனோரா, அம்ருதா என எல்லாரும் தெரிந்த முகங்கள். பிரபலமானவர்கள். இவர்களைக் கொண்டு எல்லோருக்கும் சம அளவில் இடமும் தருகிற களத்தையும் அஞ்சலி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர்களிடம் தான் நினைப்பதைப் பெற்றுவிட முடியும் என்பதும் தன்னுடைய இயக்கத்தின் மீதும் கொண்ட நம்பிக்கையிலேயே இதை அவர் எடுத்திருக்க வேண்டும். பல காட்சிகளில் வசனங்கள் இல்லை. எந்தக் காட்சிக்கும் முன்பின் தொடர்பில்லை. யாரைச் சுற்றியும் கதையில்லை.
‘எதை எவ்வளவு சொல்ல வேண்டுமோ அதை சொல்லிவிட்டு அமைதியாகிவிடுகிறார் இயக்குனர். அது எனக்குப் பிடித்திருந்தது.
பார்வதி ஒரு உணவகத்தில் தனிமையில் அமர்ந்து சாப்பிடும் அந்தக் காட்சி...கர்ப்ப காலத்தில் உணவின் மீது கொண்டிருக்கும் craving..
“எனக்குள் எதோ நடக்கிறது..என் தலைக்குள் என்னவெல்லாமோ ஓடுகிறது..அடிக்கடி சிறுநீர் முட்டுகிறது..கொஞ்சம் என்னைக் கவனிக்காமல் விலகித் தான் இரேன்’ என எரிச்சலில் எரிந்துவிழும் சயனோரா..
“என் அம்மாவிடம் பேசும்போது இப்போதும் அதீத பணிவுடன் நடந்து கொள்கிறேன்..” என்று பத்மப்ரியாவை ஏக்கமாக பார்க்கும் நித்யா மேனன்..
“நான் வேணி” என்று முழுப்பெயரும் கணவன் பெயரையும் சொல்லாமல் தன்னை அறிமுகம் செய்து கொண்டு மாமியாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் பத்மப்ரியா.
I KNOW SOMETHING..YOU KNOW NOTHING’ என்கிற கிரேசி ..
இவர்களுடன் மற்றொரு கதை சொல்லியும் படத்தில் உண்டு. அது கோவிந்த் வசந்தின் இசை..
இந்தப் படத்தில் ஒரு கதை அல்ல, பல கதைகள் உண்டு. அவை சொல்லப்படுவதில்லை. உணர்த்தப்படுகின்றன.
Comments