*பதினெட்டு படிகள்*
*பதினெட்டு படிகள்*
நன்றி குங்குமம் ஆன்மிகம்
பதினெட்டு என்ற எண், போராட்டம், உண்மைநிலை, உயர்வு, தீமைகளை அழித்தல் போன்றவற்றோடு தொடர்புடையதாகும். பங்காளிகளுக்கு இடையே நடந்த போராட்டத்தையும் உண்மையின் உயர்வையும் போதிப்பது, தீமையை அழிப்பது போன்றவற்றை விளக்கிக் கூறும் மகாபாரதம், 18 அத்தியாயங்களைக் கொண்டது. அதன் முடிவான யுத்தம், பதினெட்டு நாள் நடந்தது. அதில், பேருண்மையை விளக்கிக் கூறும் பகுதியான கீதை, பதினெட்டு அத்தியாயங்களை உடையது. இவற்றைக் கருத்தில்கொண்டு பதினெட்டு படிகளை அமைத்து, அதன் மீது தெய்வங்களை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் உள்ளது.
தமிழகத்தில், அழகர்கோயில் என்னும் பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள ராஜகோபுரத்தின் முன்புறம், பதினெட்டு படிகள் அமைந்துள்ளன. இதன் காவல்தெய்வமாக கருப்பண்ணசுவாமி இருக்கிறார். இவை சத்தியப்படிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் மீது ஏறி நின்று பொய்ச்சத்தியம் செய்தால், கருப்பண்ணன் தண்டிப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இதுபோல், சபரிமலை ஐயப்பன் சந்நதியிலும் பதினெட்டு படிகள் உள்ளது. இருமுடி கட்டிக்கொண்டு விரதமிருந்து வரும் பக்தர்கள், இந்தப் படியினை வணங்கி அதன் மீது ஏறிச் சென்று ஐயப்பனை வணங்குகின்றனர். இந்த பதினெட்டு படிகளுக்குத் தங்கக் கவசம் இடப்பட்டுள்ளது. சிறப்பு நாட்களில் இந்த பதினெட்டு படிகளையும் அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் பதினெட்டு படிகளை சிறிய அளவில் செய்து வைத்து, படி பூஜை செய்கின்றனர். அன்பர்கள் தங்கள் பகுதியில் அமைக்கும் ஆலயங்களில், பதினெட்டு படிகளை அமைக்கின்றனர். அவற்றில் உரிய நாட்களில் படிபூஜை செய்கின்றனர். இந்த பதினெட்டு படிகளும், ஐம்புலன்கள் - எட்டு சித்திகள் மூன்று குணங்கள் வித்தை அவித்தை என்ற பதினெட்டையும் குறிப்பதாகக் கூறுகின்றனர். ஐயப்பன் ஐதீகப் படங்களில், ஆலயத்தின் முன்பாகப் பதினெட்டு படிகளையும் சேர்த்தே அச்சிட்டுள்ளனர்.
ஐயப்ப வழிபாட்டில் பதினெட்டு படிகளும் அதன் பூஜைகளும் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கின்றன.பதினெட்டு படிகளையும் போற்றிப் பாடும் பாடல்கள் உள்ளன. ``ஒண்ணாம் திருப்படி சரணம் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா’’ என்று தொடங்கி பதினெட்டாம்படி வரை படிகளைப் புகழ்ந்து பாடுகின்றனர். சபரிமலையில், படிபூஜை செய்யும்போது இவற்றின் ஓரங்களில் நடுவிலும் விளக்கேற்றி வைத்து பூக்களால் அலங்கரித்து ஆரத்திகளைக் காட்டி வழிபடுகின்றனர்.
ஐயப்பன் தன்னிடமிருந்த பதினெட்டு ஆயுதங்களையே படியாக அமைத்துள்ளார் என்று பழைய நூல்கள் கூறுகின்றன.பதினெட்டு படிகளை அமைத்தவர் பரசுராமர். இந்த பதினெட்டு
படிகளிலும், அவர் அனேக தேவதைகளை நிலைப்படுத்தியுள்ளார். அவர்கள் மீது பக்தன் ஏறிச் செல்லும் வேளையில் ஐயப்பனாகவே இருக்கிறார். அதனாலேயே விரதம் இருக்காதவர்கள் அதன் மீது ஏறிச் செல்லக் கூடாது என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
தொகுப்பு: அருள் ஜோதி
Comments