பிறந்த நாள் வாழ்த்துகள் திரைக்கதை ஆசிரியரே
இந்த வருடம் பிறந்தநாள் வாழ்த்துகள் திரைக்கதையாசிரியர் கமல்ஹாசன் அவர்களுக்கு.
திரைக்கதை எழுதுவதென்பது புனைவு ஆக்கம் அறிந்தால் மட்டும் கைகூடுவதல்ல. அது ஒரு கைவினை - craft...இப்படி அவர் சொல்வது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.
தினமும் எழுதி எழுதி பெற்றுக்கொள்ள வேண்டிய உழைப்பு என்பதும் அவர் கருத்தே. ஒரு ஒன்லைன் கதையாக உருவெடுத்து அது திரைக்கதையாக மாற்றம் பெறுவது எளிதல்ல. பயிற்சியல்லாத ஒருவரால் அது செம்மை பெறாது என்பதை இத்தனை வருட கால துறைசார் அனுபவம் கொண்ட ஒருவர் வற்புறுத்துவதை முக்கியமானதாக கருதுகிறேன்.
கமல்ஹாசன் திரைக்கதை எழுதிய படங்கள் ஒவ்வொன்றுமே தனித்தனியான முத்திரைகள் கொண்டவை. அந்தப் படங்களின் கதையை சும்மாவேனும் சொல்லிப்பார்க்கிற போது 'ஏதோ கதையில இருக்கு ...ஆனா ஒர்க் அவுட் ஆகுமானு தெரியல' என்று தான் கேட்டவர்களுக்குத் தோன்றியிருக்கும். விருமாண்டி , அன்பே சிவம் இவற்றை உதாரணங்களுக்காக சொல்லலாம். ஆனால் அதை திரைக்கதையாக சாத்தியப்படுத்த முடியும் என்று அவர் நினைத்த காரணம். அந்த craft ஐ அவர் உள்வாங்கிய விதமே.
தீவிர திரைப்பட ரசிகராக இருக்கும். எவரையும் சட்டென நிறுத்தி ஹேராம் கதையை மட்டும் சொல்லச்சொன்னால். சேகரித்து சொல்வதற்கு சில நொடிகள் ஆகும். கதையாகவே அது ஒரு வளைந்து நெளிந்த பாதை. அதற்கு கொடுத்திருந்த திரைக்கதை வடிவமே குறிப்பிடத்தக்க படமாக நிலைநிறுத்தியிருக்கிறது.
திருஷ்யம் படத்தினை தமிழ் மக்களும் பார்த்த பிறகும் அதனை தமிழில் கமல் நடிக்கக் காரணம் நடிப்புத்திறமையைக் காட்டலாம் என்கிற சாதாரண காரணத்திற்காக இருக்காது. இது போன்ற sentimental thriller திரைக்கதையில் தான் நடித்து ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கும்.
இவரது திரைக்கதை குறித்து எந்த அம்சங்களிலும் பேசலாம் என்ற போதும் இரண்டு அம்சங்கள் என்னை ஈர்க்கக்கூடியன.
ஒன்று வசனங்கள். மற்றொன்று பாடல் இடம்பெறும் காட்சி சூழல்கள்.
நடிகராக அவர் பெற்றுக்கொண்ட பயிற்சியைத் காட்டிலும் திரைக்கதை எழுதுபவராக கமல்ஹாசன் மாறுகையில் மிகுந்த அக்கறையும் பணிவும் கற்றுக்கொள்ளலையும் கைகொண்டிருக்கிறார் எனத் தோன்றுகிறது.
இது இந்தத் தலைமுறை திரைப்பட படைப்பாளர்களுக்கும் பயிற்சி பெறுபவர்களுக்கும் அவர் சொல்கிற செய்தி.
Comments