புகைப்படச் சிரிப்பில் நம்பிக்கை இழந்தவன்

 


நா.முத்துக்குமார்

புகைப்படச் சிரிப்பில் நம்பிக்கை இழந்தவன்
பாடல் எழுத வருவதற்கு முன்பு பள்ளி, கல்லூரிக் காலங்களில் பல தொழில்களையும் முயன்று பார்த்திருக்கிறார். அவர் தந்தையின் அறிவுறுத்தலின் பேரில், சென்னையின் சிறுதொழில் பயிலரங்குக்குச் சென்று வந்து மிட்டாய்க்கடை வைத்தார். உருகியது. ஊதுவத்தி செய்து விற்றார். புகைந்தது. 10-ம் வகுப்பு படிக்கையில், தூர்தர்ஷனில் கேமராக் கவிஞர் பாலுமகேந்திராவின் நேர்காணல் ஒன்றைப் பார்த்தபோது, புகைப்படக் கலையின் மீதான ஆர்வம் மீண்டும் வளர்ந்து எழுந்தது.
‘‘எனக்கு ஒரு கேமரா வேணும். நான் போட்டோகிராஃபர் ஆகப்போறேன்'' என்று வீட்டில் நச்சரிக்கத் தொடங்க, யாஷிகா ஆட்டோமேட்டிக் கேமரா ஒன்றை வாங்கிக் கொடுத்தார் தந்தை. ஆறடிக்குள் மட்டும்தான் அது காலத்தைக் காட்சிப்படுத்தும். ஜூம் வசதியும் கிடையாது. அப்போதுதான் தொழில்நுட்பத்தின் முதல் படிக்கட்டில் இருந்தவர் அதைப் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை. பின்னாளில் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றப்போகிறோம் என்பதை அறியாமலேயே, ஒரு கிராமத்து பாலுமகேந்திராவாகத் தன்னை நினைத்துக்கொண்டு சுற்றித் திரிந்திருக்கிறார்.
ஒருநாள் காலையில் அவசரமாக வந்த ஒருவர், ‘முத்தண்ணே... ஒரு படம் எடுக்கணும்ணே...' எனக் கூட்டிப்போயிருக்கிறார். சைக்கிளில் ஏறி, பக்கத்து ஊரின் ஓர் ஓலைக்குடிசைக்கு அருகில் நிறுத்த அங்கே, பறை சத்தங்களின் மத்தியில் ஐந்து வயது சிறுவனின் சடலம். ‘‘அய்யா, வாய்யா போட்டோ புடிச்சா ஆயுசு குறையும்னு எம் பேரனை போட்டோ புடிக்காமயே விட்டுட்டோம். பேர் தெரியாத காய்ச்சல் வந்து செத்துப்புட்டான். உயிரோட்டமா இருக்கணும்னுதான் இன்னும் கண்ணைக்கூட மூடல. எங்க குலக்கொழுந்து, ஒரே வாரிசு, எப்பவும் எங்க ஞாபகத்துல இருக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்துக் குடு ராசா'' - என அந்தப் பாட்டி கேட்க, கடைசியாக முத்தண்ணனின் கேமரா கண்களைத் திறந்து மூடியது. கண் மூடப்படாத அந்தக் குழந்தையின் கண்களில், அதிர்ச்சியையும் உலகின் மீதான அவநம்பிக்கையையும் கடவுளையும் ஒருசேரச் சந்தித்தார். முத்தண்ணன் அன்றிலிருந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும்போதெல்லாம் அந்தப் பையனின் முகம் வந்து போகுமாம்.
- விக்னேஷ்
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி