இயக்குனர் என். லிங்குசாமி
என் இனிய நண்பர் இயக்குனர் என். லிங்குசாமி அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
*
எல்லாச் சொல்லுக்கும்
எதிர்ச் சொல் உண்டு.
இன்பம் × துன்பம்
உயரம் × பள்ளம்
வெளிச்சம் × இருட்டு
நம்பிக்கை × துரோகம்
உறவு × பிரிவு .... என்று.
ஆனால் எதிர்ச் சொல் இல்லாத ஒரு சொல் ஆனந்தம்.
அந்நிலை அடைந்தோர்
அதிலேயே நீந்துகிறார்கள்.
மேலே சொன்ன இருமைகளில் நேர்மறை எதிர்மறை இரண்டையும்
இளம் வயதிலேயே பார்த்து அனுபவித்துக் கடந்துவிட்டவர் நண்பர் லிங்குசாமி.
வெற்றி தோல்வி
எல்லாவற்றுக்கும் அதே சிரிப்புதான். 'சுற்றி நில்லாதே பகையே துள்ளி வருகுது வேல் ' என்று எதிர்வரும் துன்பங்களைப் பார்த்து சவால் விடுவது அவரது புன்னகை.
அவர் செய்த உதவிகளுக்கு விளம்பரமில்லை. ஆனால் தக்க சமயத்தில் அவரைக் காத்தது. அது நிஜம்.
மாதம் எழுநூற்றைம்பது ரூபாய் சம்பளம் வாங்கிய அதே லிங்குசாமியைத்தான் இப்போதும் பார்க்கிறேன். இருவரும் உதவி இயக்குனராகப் பணியாற்றியபோது பார்த்த அதே லிங்குசாமியைத்தான் அவர் இயக்குனராகவும் நான் வசனகர்த்தாவாகப் பணியாற்றும் இந்நாட்களிலும் காண்கிறேன்.
கல்லூரிக் காலங்களில் கவிதை எழுதிவிட்டு அதைப் பகிர்ந்துகொள்ள எவ்வளவு ஆர்வத்தோடு வருவாரோ அந்த ஆர்வம்தான் இப்போதும்... ஒரு புதிய காட்சி தோன்றிவிட்டால் அர்த்த ராத்திரி ஆனாலும் அலைபேசியில் அழைப்பார். படைப்பார்வம்தான் தன் சொத்து என மனதால் நம்புகிறவர். அன்று முதல் இன்று வரை அதில் எந்த மாற்றமும் இல்லை.
அதே உழைப்பு
அதே நேரம் தவறாமை
அதே ஈடுபாடு
அதே படைப்பார்வம்
அதே ரசனை
அதே நட்பு
அதே ஆனந்தம்.
முதல் படம் ஆனந்தம் இயக்கியபோதும்
பத்தாவது படம் இயக்கும்போதும்
பல படங்களைத் தயாரித்தபோதும்
அதே லிங்குசாமிதான்.
வெற்றியையும் தோல்வியையும் கடந்து செல்லும் பக்குவம் அவர் பலம்.
குழந்தைகள் தினத்தில் பிறந்ததாலோ என்னவோ குழந்தைத்தனமான அந்த சிரிப்பு மட்டும் அவரை விட்டு விலகவில்லை. காரணம் அவர் உதடுகளால் சிரிக்கவில்லை. மனதால் சிரிக்கிறார். மனதால் உலகைப் பார்க்கத் தெரிந்துவிட்டால் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்று நம்மை அணுகுமா என்ன? அதுதான் லிங்குசாமி.
வாழ்க நண்பா
மேலும் பல வெற்றிகள் கண்டு
மாறாப் புன்னகையோடு
மலை போல் வாழ்க....
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
*
அன்புடன்
பிருந்தா சாரதி
*
Comments