மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்*
*108 வைணவ திவ்ய தேச உலா - 63 | மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்*
108 வைணவ திவ்ய தேசங்களில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில், 63-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலம் பூதத்தாழ்வாரின் அவதாரத் தலமாகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த கடற்கரை நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் சிறப்பாக போற்றப்படுகின்றன.
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திருமங்கையாழ்வார் பாசுரம்:
பாராய துண்டு மிழ்ந்த பவளத் தூனை
படுகடலில் அமுதத்தைப் பர்வாய்க்கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போரெற்றினைப்
தீர்த்தம்: புண்டரீக புஷ்கரிணி
விமானம்: கனகாக்ருதி விமானம்
தல வரலாறு
மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஏழாம் அரசனான மல்லேஸ்வரனின் ஆட்சியின் தினமும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஒருநாள் திடீரென்று இத்திட்டம் நிறுத்தப்பட்டதால், மக்கள் பசியால் வாடினர். கோபமடைந்த அடியார்கள், மன்னரை முதலையாக மாறும்படி சபித்தனர். அதன்படி புண்டரீக புஷ்கரிணியில் முதலையாக வாழ்ந்து வந்தார் அரசர்.
அப்போது இப்பகுதிக்கு வந்து, புண்டரீக மகரிஷி தவம் புரிந்து வந்தார். தவம் செய்து முடித்ததும், அருகில் உள்ள தடாகத்தில் இருந்து தாமரை மலர்களைப் பறித்து, திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க எண்ணினார். அப்போது மகரிஷியிடம், தனது சாபத்துக்கு விமோசனம் அருளும்படி அரசர் (முதலை) வேண்டினார். மகரிஷி தாமரை மலர்களைப் பறித்துத் தருமாறு அரசரிடம் கூறினார். அரசரும் பூக்களைப் பறித்து மகரிஷியிடம் கொடுத்தார். அதன்படி பூக்களைப் பறித்து ஒரு கூடையில் நிரப்பி, அதை எடுத்துக் கொண்டு கிளம்பினார். செல்லும்வழியில் கடல் குறுக்கே இருந்ததால், இரவு பகலாக தன் கைகளால் கடல்நீரை வெளியே இறைக்கத் தொடங்கினார்.
கை சோர்ந்த நிலையில் இருக்கும்போது, “பரந்தாமா! நான் கொண்ட பக்தி உண்மையானால் கடல்நீர் வற்றி, எனக்கு பாதை கிடைக்கட்டும். அதுவரை இந்தப் பூக்கள் வாடாமல் இருக்கட்டும்” என்று திருமாலை வேண்டினார் மகரிஷி. அப்போது ஒரு முதியவர் அவர் முன்னர் வந்து, “கடல்நீரை இறைப்பது சாத்தியம் அன்று. எனக்கு பசிக்கிறது. உணவு தாருங்கள்” என்று கேட்கிறார்.
உடனே மகரிஷி, உணவு கொண்டு வருவதாகக் கூறி, மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். மகரிஷி திரும்பி வருவதற்குள், அவர் கொடுத்துச் சென்ற பூக்களையெல்லாம் சூடிக் கொண்டு, கடலிலேயே ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில் முதியவர் காட்சியளித்தார்.
திருமாலைக் கண்டு ஆனந்தமடைந்த மகரிஷி, தான் என்றும் அவரது திருவடி அருகே அமர வேண்டும் என்றும், உலகில் அனைத்து உயிர்களும் பசி இல்லாமல் சுகமாக வாழ வேண்டும் என்றும், மல்லேஸ்வரனின் சாபம் நீங்க வேண்டும் என்றும் வேண்டினார். அவ்வாறே வரமளித்தார் திருமால். மல்லேஸ்வரனும் சாப விமோசனம் பெற்று மீண்டும் தினமும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியைத் தொடங்கினார். மகரிஷிக்கு சயன கோலத்தில் காட்சி அளித்ததால் இத்தல பெருமாள் ‘தலசயனப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார் என்று பிரம்மாண்ட புராண வாக்கியத்தில் சேத்ர காண்டம் பகுதியில் கூறப்பட்டுள்ளது.
ஏழு கோயில் நகரம்
ஒரு காலத்தில் இவ்விடத்தில் 7 கோயில்கள் இருந்ததால், இத்தலம் ஏழு கோயில் நகரம் என்று அழைக்கப்பட்டது. கடல் சீற்றத்தால், நகரம் முழுவதும் அழிந்துவிட்டதால், பல ஆண்டுகள் கழித்து பல்லவ மன்னர் ராஜசிம்மன் 3 கோயில்களைக் கட்டினார். அதில் 2 கோயில்கள் கடல் சீற்றத்தில் அழிந்துவிட்டன. மீதமுள்ளது இக்கோயில் மட்டுமே. 14-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலைக் கட்டியுள்ளார். கருங்கல் தூண்கள் (ஸ்தூபி) அமைத்து கட்டப்பட்ட இக்கோயிலில் நான்கு கரத்துடன் சயன கோலத்தில் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாள் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். உற்சவர் தாமரை மொட்டுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பெருமாளின் இருபுறமும் நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். 12 ஆழ்வார்கள், ஆஞ்சநேயர், ராமபிரான், லட்சுமி நரசிம்மர், கருடன் ஆகியோருக்கு இக்கோயிலில் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
இத்தல பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்டநாதனை தரிசித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி விழா, சித்திரை பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படும். திருமணத் தடை நீங்க ஏராளமான பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்வது வழக்கம். புண்டரீக புஷ்கரிணி தீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்ப உற்சவம் நடைபெறும். மகாளய அமாவாசை தினத்தில் பக்தர்கள் பலர் வந்திருத்து, தம் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பர்.
பிரதோஷம், சுவாமி நட்சத்திர தினம், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளைகளில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ருணவிமோசன ஸ்தோத்திரம்’கூறினால் வாழ்வு சிறக்கும். கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம்.
:
Comments