தேவாரப் பாடல்களில் வள்ளிநாயகி*

 தேவாரப் பாடல்களில் வள்ளிநாயகி*



நன்றி குங்குமம் ஆன்மிகம்


முருகப் பெருமான், இந்திரன் மகள் தேவயானையைக் கற்புமணம் புரிந்ததோடு, மலைக்குறமகள் வள்ளியைக் களவு மணம் பூண்டு, இருபெருந்தேவியருடன் திகழ்பவனாவான். வள்ளியைத் தன் தேவியாக ஏற்றுக்கொண்ட காரணத்தினால், திருப்பரங்குன்றத்தில் கந்தனுடன் திகழ்ந்த தேவயானை வருத்தத்தால் தன் கண்களில் நீர் சொரிந்தாள். அதனைப் பரிபாடலின் ஒன்பதாம் பாடல் விவரிக்கின்றது. பரிபாடலின் பத்தொன்பதாம் பாடலில் கூறப்பெறும்.


தண்பரங்குன்றத்து இயலணி நின் மருங்கு

சாறுகொள் துறக்கத் தவளொடு

மாறு கொள்வது போலும் மயிற் கொடி வதுவை


என்ற அடிகள் நின் திருப்பரங்குன்றத்தில் நீ மணக்கோலத்துடன் அமர்ந்திருப்பவன் ஆயினை. நின் ஒரு பக்கத்தே உறைபவளான தேவயானைப் பிராட்டியோடும் நீதான் வீற்றிருந்தனை. மணவிழாக்கொண்டு முறையாகப் பெற்ற அப்பிராட்டியோடுங்கூட மயிலின் சாயலினையும் பூங்கொடியின் மென்மையினையும் கொண்ட வள்ளிநாயகியையும் நீ மணந்துகொண்டது. அத்திருமணத்திற்கு மாறுபட்ட களவு மணத்தையும் ஏற்றுக்கொள்வதற்காகவே போலும் என்ற கருத்தைத் தெரிவிப்பதாகும்.


பரிபாடலின் ஒன்பதாம் பாடலில் தேவயானைக்கும் வள்ளிக்கும் ஏற்படும் மோதல்கள் பற்றியும், நிறைவாக வள்ளியே வெற்றி பெறுபவளாகவும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் திருப்பரங்குன்றத்தில் கந்தனொடு தேவயானையையும், வள்ளியையும் போற்றி வணங்கிய திறத்தைப் பரிபாடல் தெற்றென உரைக்கின்றது.

நற்றிணை என்னும் சங்கத்தமிழ் நூலின் எண்பத்திரண்டாம் பாடலில், ஒரு தலைவியின் எழிலினைக் கூறுமிடத்து;


முருகு புணர்ந்தியன்ற வள்ளிபோல நின்

உருவு கண் எறிப்ப நோக்கலாற்றலென


என்று குறிக்கப்பெற்றுள்ளது. இப்பாடலடிகள், முருகனைக் கூடிய பின் செல்லுகின்ற வள்ளிநாயகியைப்போல, நின் உருவம் கண்ணைப் பறிக்கும் பேரொளியுடன் விளங்குகின்றது என உரைக்கின்றது. வள்ளியின் பேரெழில் இங்கு தலைவிக்கு ஒப்புமை யாகப் பேசப்பெற்றுள்ளது. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர்;


ஒருமுகங் குறவர் மடமகள் கொடிபோ

னுசுப்பின் மடவரல் வள்ளியொடு

நகையமர்ந்தன்றே


என முருகப்பெருமானின் கோலக்காட்சியினைச் சுட்டியுள்ளார். இவ்வடிகள், ஒரு முகம் குறவருடைய மடப்பத்தையுடைய மகளாகிய வல்லிக்கொடி போலும் இடையினையுடைய வள்ளியுடனே மகிழ்ச்சியைப் பொருந்திற்று என்று கூறுகின்றது. இந்திரன் மகள் தேவயானையினைவிட குறமகள் வள்ளியின் சிறப்புகளைத்தான் சங்கத் தமிழ்நூல்கள் எடுத்துரைக்கின்றன.மூவர் தேவாரப் பதிகப் பாடல்களைத் தொகுத்து நோக்கும்போது, வேழமுகக் கடவுள் பற்றியும், கடம்பனாகிய குமரன் பற்றியும் குறிப்பிடும் பாடல்கள் மிகக் குறைவே.


கந்தனைப் பற்றிக் குறிப்பிடப் பெறும் பனுவல்களிலோ அல்லது பிற பாடல் களிலோ கந்தனின் தேவியான தேவயானை பற்றிய குறிப்புகள் காணப்பெறவில்லை. ஆனால், திருஞானசம்பந்தரும், திருநாவுக் கரசரும், சுந்தரரும் வள்ளிநாயகி பற்றி மூன்று பனுவல்களில் குறிப்பிட்டுள்ளமை நோக்குதற்குரியதாகும்.


திரு அரிசிற்கரைப்புத்தூரில் (அழகாபுத்தூர்) பதிகம் பாடிய திருஞானசம்பந்தர்,


வள்ளிமுலை தோய் குமரன் தாதை வான்தோயும்

வௌ்ளிமலைபோல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர்

தௌ்ளி வருநீர் அரிசில் தென்பால் சிறைவண்டும்

புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே


 - என்று குறிப்பிட்டுள்ளார்.


இப்பாடலில், சிவபெருமானைக் குறிக்க குமரன் தாதை (தந்தை) எனக் குறிப்பிட்டிருக்கலாம். இருப்பினும், முருகப்பெருமானின் சிறப்பினை வள்ளியை மணந்த குமரனின் தந்தை எனச் சுட்டிக்காட்டி, குறமகள் வள்ளியின் பெருமையைப் பதிவு செய்துள்ளார். திருநாவுக்கரசு பெருமானார், திருமறைக்காட்டில் பாடிய திருக்குறுந்தொகையில்,


கள்ளி முதுகாட்டில் ஆடிக் கண்டாய்

காலனையும் காலால் கடந்தான் கண்டாய்

புள்ளியுழை மானின் தோலான் கண்டாய்

புலியுரி சேராடைப் புனிதன் கண்டாய்

வெள்ளி மிளிர் பிறை முடிமேல் சூடிக்கண்டாய்

வெண்ணீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய

வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்

மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.


 - எனப் பாடிப் பரவியுள்ளார்.


இப்பாடலில், “நம் செந்தில்மேய வள்ளி மணாளற்குத் தாதை” எனக் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கதாகும். செந்தில் என்றும், திருச்சீரலைவாய் என்றும், திருச்செந்தூர் என்றும் அழைக்கப்பெறும். முருகப்பெருமானின் படைவீட்டை உரிமையோடு “நம் செந்தில்” என அப்பர் பெருமான் குறித்துள்ளதோடு, அங்கு வள்ளி மணாளனான குமரன் கோயில்கொண்டுள்ளான் என்பதையும் சுட்டியுள்ளார். குமரன் தந்தை மறைக்காட்டு உறையும் சிவபெருமான் எனக் கூறாமல், வள்ளியின் கணவனான குமரன் எனக் கூறி குறமகள் வள்ளியின் பெருமையினை எடுத்துரைத்துள்ளார்.


திருத்துருத்தி மற்றும் திருவேள்விக்குடி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்துப் பாடிய சுந்தரர் “மூப்பதும் இல்லை” எனத் தொடங்கும் அப்பதிகத்தின் ஆறாம் பாடலில்,


குறவனார் தம் மகள் தம் மகனார் மணவாட்டி

கொல்லை

மறவனாராய் அங்கு ஓர் பன்றிப் பின்

போவதும் மாயம் கண்டீர்


என்று குறிப்பிட்டு குறவனாரின் மகளாகிய வள்ளி, ஈசனாரின் மகனான முருகப்பெருமானின் மனைவி என்று சுட்டுவதோடு, அப்பரமனே ஒரு வேடுவனாய் (கிராதமூர்த்தியாய்) பன்றி ஒன்றின் பின் சென்றார் என்றும் கூறியுள்ளார்.


திருஞானசம்பந்தரின் பதிகப் பாடலும், நாவுக்கரசரின் பதிகப் பாடலும், சுந்தரரின் பாடலும் குறமகள் வள்ளி பற்றிப் பேசும் தனித்துவம் பெற்ற தேவாரப் பாடல்கள் என்றால் மிகையன்று. கந்தபெருமானின் சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் பல்லவர் காலந்தொட்டு நமக்குக் கிடைக்கின்றன. முற்காலப் பாண்டியர் காலத்து மதுரையம்பதியின் ஆனை மலைக் குடைவரைக் கோயிலில் அமர்ந்த கோல குமரனுடன், வள்ளி மட்டுமே காணப்பெறுகின்றாள்.


துபோன்றே, திருப்பரங்குன்றத்து குடைவரைக் கோயிலில் முருகன் இடக்காலை மடக்கி வலக்காலைத் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் காணப்பெறுகின்றார். அவருக்கு வலப்பக்கம் நாரதர், மலர்க்கொத்து ஏந்தி நிற்கின்றார். இடப்புறம் வள்ளி நின்றுகொண்டிருக்கின்றாள். இவ்விரு குடைவரைக் கோயில்களும் எட்டாம் நூற்றாண்டில் எடுக்கப்பெற்றவை. பல்லவர் படைத்த பாங்குறு குடைவரைகளிலும், காஞ்சி கைலாசநாதர் கோயில் போன்ற கட்டுமானக் கோயில்களிலும் பெரும் பாலும் கந்தபெருமானின் திருவுருவம் தனித்தே காணப்பெறுகின்றன.


பிற்காலச் சோழர்களின் திருக்கோயில்களில் முருகப்பெருமானின் திருமேனி அட்டப் பரிவாரக் கோயில்களில் ஒன்றில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அங்கு முருகப் பெருமான் நடுவே திகழ அவருக்கு இடப் புறம் தேவயானையும் வலப்புறம் வள்ளியும் மலரேந்திய நிலையில் திகழ்வதைக் காணலாம். கல்லில் காணும் இக்கவினுறு திருமேனிகள்போல செப்புத் திருமேனிகளும் அக்கோயில்களில் இடம்பெற்றுள்ளன. இக்கலை மரபு, சோழர் காலத்திற்குப் பின்பு எடுக்கப்பெற்ற தமிழகக் கோயில்களில் தொடர்ந்து பின்பற்றப்பெற்று, அவர்தம் கலைநயம் மிகுந்த படைப்புகளை அங்குக் காண முடிகின்றது.


 வள்ளி திருமணத்தைப் பாங்குற விவரிக்கும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் மலர்வதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, குமரன் குறவள்ளியை எவ்வாறு மணந்தான் என்பதைக் காட்சியாகக் காட்டிடும் சிற்பத் தொடர் காட்சியினை மாமன்னன் இராஜராஜன்தான் எடுப்பித்த தஞ்சைப் பெரியகோயிலின் இரண்டாம் இராஜகோபுர அதிட்டானத்தில் இடம்பெறச் செய்துள்ளான். தமிழகத்தைப் பொறுத்தவரை வள்ளி திருமணக் காட்சியைக் காட்டிடும், காலத்தால் முந்தைய சிற்பப் படைப்பு இதுவேயாகும்.


இராஜராஜன் திருவாயில் எனப்பெறும் கிழக்கு இரண்டாம் கோபுர வாயிலின், இடப்புறம் வள்ளி தேவசேனா சகிதராக கந்தவேள் நின்ற கோலத்தில் காட்சி நல்குவதும், வள்ளியை மணம் புரிய வேடனாய் வந்த கந்தனின் லீலைகளும் சிற்பக் காட்சித் தொகுப்புகளாக உள்ளன. இக்காட்சித் தொகுப்பு இரண்டு பகுதிகளாகவும், நான்கு அடுக்குச் சிற்பங்களைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. இரண்டாம் பகுதியின் கீழடுக்கில் தொடங்கி முதல் தொகுதியின் கீழடுக்கில் கதை நிறைவு பெறும் வகையில் சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர்.


இரண்டாம் பகுதியின் கீழடுக்கில் முருகன் வேடுவன் வடிவில் அம்புடன் சென்று வில் தொடுக்கும் காட்சியுள்ளது. இங்கு மூன்று நிலைகளில் வேடுவனாக முருகப்பெருமான் காணப்பெறுகின்றார். அடுத்த காட்சியில், யானைமீது முருகன் ஏறிச் செல்ல வள்ளி பயந்து கையுயர்த்திக் கூக்குரலிடும் காட்சியுள்ளது. அதனை அடுத்து மூன்றாவது அடுக்கில் யானை அருகில் முருகன் வேடுவனாக நிற்க, யானை துதிக்கையைத் தூக்கியவாறு வள்ளியை நோக்கிச் செல்கின்றது. பயந்த வள்ளியோ, கையுயர்த்தி கந்தனை அழைக்கின்றாள். நான்காவதாகத் திகழும் மேலடுக்கில் ஆசனமொன்றில் வள்ளி அமர்ந்திருக்க, அவளை நோக்கிக் குடையுடன் தாடி மீசையுடைய கிழவர் ஒருவர் வேகமாக வந்து கொண்டிருக்கின்றார்.


முதற்பகுதியின் மேலடுக்கில் முருகன் வேடுவர் கோலத்தில் காணப் பெறுகின்றார். அதற்குக் கீழாகவுள்ள இரண்டாம் அடுக்கில் வள்ளி ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றாள். எதிரே, வில், அம்பு ஏந்தியவராக முருகப்பெருமான் நிற்கின்றார். இதற்குக் கீழாகவுள்ள மூன்றாம் அடுக்கில், மேலிரு கரங்களில் வச்சிரமும் சக்தியும் ஏந்தியவராக வலமுன் கரத்தால் அபயம் காட்டி, இடக்கரத்தைத் தொடைமீது இருத்தியவராய்க் கந்தவேள் நிற்க, இருமருங்கும் வள்ளியும் தேவசேனையும் நிற்கின்றனர்.


கீழேயுள்ள நான்காம் அடுக்கில் மயில் காணப்பெறுகின்றது. வள்ளி திருமணக் காட்சியைக் காட்டி, நிறைவாக இருபெரும் தேவியருடன் கந்தன் காட்சி தருவதோடு இச்சிற்பத்தொகுதி நிறைவு பெறுகின்றது. இக்காட்சியை 15-ஆம் நூற்றாண்டில் கண்டு தரிசித்த அருணகிரிநாதர் தஞ்சைப் பெரிய கோயிலில் பாடிய திருப்புகழில் “குறத்தி துஞ்சு மணிமார்பா” என விளித்து “இராஜகோபுரத்து அமர்ந்த பெருமானே” எனப் போற்றியுள்ளார்.


அருணகிரியார் காலத்திற்குப் பின்பு தஞ்சைப் பெரியகோயில் வளாகத்தில், செவ்வப்ப நாயக்கரால் (கி.பி. 16-ஆம் நூற்றாண்டில்) தனித்த கந்தகோட்டம் ஒன்று எடுக்கப்பெற்றது. தமிழகத்திலேயே இதனை ஒத்த பேரழகுடைய கந்தகோட்டம் வேறு ஒன்று இல்லை. இவ்வாலயத்துக் கருவறையின் மேற்குப்புறச் சுவரில் வள்ளியின் வரலாறு காட்டும் சிற்பத்தொகுதி ஒன்று உள்ளது. மூன்று அடுக்குகளாக இக்காட்சிச் சிற்பங்கள் காணப்பெறுகின்றன. மேலே உயரமான பரண்மீது நின்றவாறு வள்ளி கவண்கல் எறிய, அருகே தாடி மீசையுடைய வயோதிகர் கோலத்தில் முருகப்பெருமான் நிற்கிறார்.


எதிர்புறம் மரமொன்றுள்ளது. அடுத்து நடுவே திகழும் காட்சித் தொகுப்பில் யானை ஒன்று துரத்த, பயந்த வள்ளி அம்முதியவரைக் கட்டிப் பிடிக்கின்றாள். கீழேயுள்ள காட்சியில் நாரதர் கையில் ஒரு இசைக்கருவியைப் பிடித்தவாறு கை நீட்டிப் பாடுகிறார். இராஜகோபுரத்தில் இராஜராஜ சோழனின் சிற்பி படைத்த காட்சியின் தாக்கம்தான் இப்படைப்பு என்பது தெற்றெனப் புலப்படும்.

திருஞானசம்பந்தர் கூறிய “வள்ளி முலைதோய் குமரன்” என்பதும், நாவுக்கரசர் கூறும் “வள்ளி மணாளன்” என்பதும், சுந்தரர் போற்றும் “குரவனார் தம்மகள்” என்பதும் ஆகிய தேவாரப் பாடல்கள்தாம் இப்படைப்புக்களுக்கு ஆதாரமாய் இருந்திருத்தல் வேண்டும்.


தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி