ஒரு யானையை ரசித்துக்கொண்டே மண்புழுவையும் தேடுபவன் தான் கவிஞனாக இருக்கமுடியும்.
என்னுடைய கவிதை மொழி பறவையின் மொழியல்ல, பறவை உதிர்த்த சிறகின் மொழி. அது வனத்தின் மொழியல்ல, வீட்டுத் தாவரத்தின் மொழி. அது சர்வதேச மொழியல்ல, என் தெருவின் மொழி. அந்தத் தெருவிலிருந்து தான் எனது கவிதைகள் தோன்றியுள்ளன. என் மொழி பிரபலமானவனின் மொழியல்ல எளிய மனிதர்களின் உண்மையான மொழி. நான் வெளிச்சங்களில் நிற்பவன் இல்லை. என் மொழி, முடிதிருத்தகங்களின் பழைய, காலாவதியான இதழ்களின் மொழி. நெருக்கடி மிகுந்த கடைவீதிகளில் குடும்ப அட்டைக்கான உறைகளை விற்பவனின் மொழி என் மொழி. இன்றைய சூழலில் ஆடம்பரங்களை விட எளிமையைப் பத்திரப்படுத்துவதுதான் மிகுந்த சிரமமாக இருக்கிறது. நீ இருக்கும் திசைக்குத் தேடி வராது பூ. நீ தான் பூக்களைத் தேடிச் செல்ல வேண்டும். பூப் பூப்பது அதன் இஷ்டம். போய்ப் பார்ப்பது உன் இஷ்டம். தேக்கும் பூக்கும் என்று ஒரு கவிதையை எழுதியிருக்கிறேன். இவ்வளவு தானா கவிதை? கவிதை நுட்பமானது. கடிதங்களின் காலம், தபால்காரர்களின் காலம் அநேகமாகக் கடந்து விட்டது. துருப்பிடித்து, சிகப்பு வண்ணம் பூசப்பட்ட அஞ்சல்பெட்டி இன்னும் எங்கள் வீட்டில் வெறுமையாக இருக்கிறது. ஒரு பறவை தன் சிறகை அப்பெட்டிக்குள் கடிதமாகப் போட்டுவிட்டுச் சென்றது. அ முதல் ஃ வரை தெரியும் எனக்கு, ஆகாயம் முழுதும் தெரியும் குருவிக்கு. ஒரு கவிதையை ஒரு கவிஞன் தன் குரலில் தரும்போது வாசகனை அவன் கட்டித் தழுவிக் கொள்கிறான்.
ஒரு யானையை ரசித்துக்கொண்டே மண்புழுவையும் தேடுபவன் தான் கவிஞனாக இருக்கமுடியும். சக மனிதர்கள் மீதான அக்கறையில்லாதவர்கள் படைப்பாளியாக, ஏன் மனிதனாகக் கூட இருக்க முடியாது.
- வண்ணதாசன்
இணையத்தில் படித்தது
Comments