பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாளின்று
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாளின்று
குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, பால்ய விவாகம் என பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் களைத் தடுக்கும் முயற்சியாகக் கொண்டு வரப்பட்டதே ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்’. இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது மற்றும் கண்டிப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முன்னேற்றம், தனிப்பட்ட குடும்பத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தின் முன்னேற்றம், அதில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தில் அடங்கியுள்ளது. இதை உணர்ந்து, வருங்கால தலைமுறைக்குப் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை புரியவைத்து வளர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நல்லவற்றை போதித்து வளர்ப்பதில் பெரும்பங்கு தாயைச் சார்ந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்ப்பது, பெண்களை மதித்து நடப்பது போன்றவற்றை, ஆண் குழந்தைகளுக்கு பெண்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாற்றத்துக்கான செயல்பாடு நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்.
Comments