தாமரையின் புதிய நறுமணம் தரும் பாடல் வரிகள்

 

 புதிய நறுமணம் தரும் பாடல் வரிகள்





புதிய நறுமணம் தரும் பாடல் வரிகளால் திரைப் பாடல்களை கவிதை கேட்கும் அனுபவங்களாக்கி வரும் கவிஞர் தாமரை அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐

*

இன்றைய மழைநாளை தன் பாடல்களால் இனிதாக்கிக்கொண்டிருகிறார் 

கவிஞர் தாமரை .


என்ன ஒரு இதம்....என்ன ஒரு சுகம்... சொற்களில்?


மொழி உருகி உருகி ஓடுகிறது தாமரையின் எழுதுகோளில் இருந்து...


நாகரிகமான வரிகளில் வெளிப்படும்

நளினமான காதல் மொழிகள் ....


அதுவும் பெண் மனக் காதல் உணர்வுகளின் கற்பனைகள் அவர் எழுதும்வரை  நாம் அறியாதவை.


'வசீகரா...'


'செந்தூரா....'


எனக் காதலனை அழைக்க நாயகிகளுக்கு அவர் வழங்கி வரும் சொற்களில்

ஆண் மனம் அடையும் ஆனந்தம் சொல்லுக்கு அப்பாற்பட்டது. 


"நிதா நிதா நிதானமாக…

யோசித்தாலும்…

நில்லா நில்லா நில்லாமல் ஓடி 

யோசித்தாலும்…


நீ தான் மனம் தேடும்

மாண்பாளன்…

பூவாய் எனையேந்தும் பூபாலன்…


என் மடியின் மணவாளன்

என தோன்றுதே… 


செந்தூரா ஆ… ஆ…

சோ்ந்தே செல்வோம்…

செந்தூரா ஆ… ஆ…

செங்காந்தள் பூ…

உன் தேரா ஆ.. ஆ…


மாறன் அம்பு ஐந்தும் வைத்து…

ஒன்றாய் காற்றில் எய்தாயா…


நடக்கையில்…

அணைத்தவாறு போக வேண்டும்…


விரல்களை பிணைத்தவாறு…

பேச வேண்டும்…


காலை எழும் போது…

நீ வேண்டும்…

தூக்கம் வரும் போதுன்…

தோள் வேண்டும்…


நீ பிரியா வரம் தந்தால்…

அதுவே போதும்… ம்ம்…. ம்ம்…

 ('போகன்' பட செந்தூரா... பாடல்)


ஒரு பெண்ணின் உணர்வை ஒரு பெண்ணே எழுதினால் எப்படிப் பொங்கி வருகின்றன கற்பனைகள்? 


'மாண்பாளன் 'என்று இதுவரை யார் அழைத்தார்கள் காதலனை? 


'வசீகரா' என்று காதலியால்  அழைக்கப்படும்போது ஏற்படும் கிளர்ச்சி, 'மாண்பாளன்' என்று அழைக்கப்படும்போது வரும் பெருமிதம் இவற்றை எல்லாம் அகவாழ்வில் பெற்றால் புறவாழ்வில் ஓர் ஆண் எத்தகைய வெற்றிகளைப் பெற முடியும்? அவன் எத்தனைக் கம்பீரமாக வெளியுலகில் நடந்துகொள்வான்?  


ஆண்கள் கனவு காண்பது இத்தகைய ஒரு காதலி தனக்குக் கிடைக்க மாட்டாளா ? என்பதைத்தான். ஆனால் கவிஞர் குறிப்பால் உணர்த்துவது எப்படி எல்லாம் அவன் நடந்துகொண்டால் இப்படியெல்லாம் அவள் தன்னைக் கொண்டாடுவாள் என்பதையும் ஆண்கள் அறியவேண்டும்.


அதுவும் அவர் பயன்படுத்தும் சொற்கள் அவ்வளவு புதியதாய் இருக்கின்றன.  அகழாய்வில் கண்டெடுத்த அபூர்வ முத்துமணிச் சொற்களை எதிர்பாராது பாடலில் கண்டெடுக்கும் வியப்பை வழங்குகிறார். சொல் புதிது சுவை புதிது எனும் பாரதியின் இலக்கணத்தைப் பாடல் எழுதுவதில் பயன்படுத்துவதால்  தனித்துத் தெரிகிறார் தாமரை.

*


"அடைமழை வரும் 

அதில் நனைவோமே


குளிர் காய்ச்சலோடு சினேகம்

ஒரு போர்வைக்குள் 

இரு தூக்கம்


குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்

அது தெரிந்தும் கூட அன்பே

மனம் அதையேதான் எதிர்பார்க்கும்


எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்

சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குளே நான் வேண்டும்"


இவை எல்லாம் கவிதைப் புத்தகத்தில் படித்தவை அல்ல... காற்றில் மிதந்து வந்து நம்  காதுகளில் தினம் ஒலிக்கும் பாடல் வரிகள். 


 - ('மின்னலே' பட 'வசீகரா...' பாடலில்)

*

'சந்தித்தோமே கனாக்களில்

சில முறையா 

பல முறையா

அந்தி வானில் உலாவினோம்

அது உனக்கு நினைவில்லையா

இரு கரைகளை உடைத்திடவே

பெருகிடுவாய் கடல்அலையாய்

இரு இரு உயிர் தத்தளிக்கையில்

வழிசொல்லுமா கலங்கரையே

உனதலைகள் 

எனை அடித்து

கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட...


அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இவை தானே இவள் இனி"


 - (வாரணம் ஆயிரம் பட  ' அனல் மேலே பனித்துளி பாடலில்)

*

ஒரு நாள் சிரித்தேன்

மறு நாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல்

கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா

மன்னிப்பாயா…"


அலைகழிப்பை எவ்வளவு தத்தளிப்போடு எழுதியிருக்கிறார்?


"தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே..."


(விண்ணைத் தாண்டி வருவாயா' பட ஒரு நாள் சிரித்தேன்

மறு நாள் வெறுத்தேன் பாடல்)

*

கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற

வேண்டாமா வேண்டாமா…


கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேர

வேண்டாமா வேண்டாமா


கை கோர்க்கும் போதெல்லாம் கைரேகை தேயட்டும்

முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றிப் போகட்டும்


தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே


கடிகாரம் எத்தனை முறை வந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய காதல் நொடிகள் அவற்றில் நிரம்பியிருக்கும். புதிய காலம் காட்டும் .


 (அன்பு பட 'தவமின்றி கிடைத்த வரமே' பாடலில் )

*


மறுவார்த்தை பேசாதே

மடி மீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே

விரல் உன்னை வருடும்

மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக

இமைத்தாண்ட கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை

நினைக்காத நாளில்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய்யில்லையே'


(என்னை நோக்கிப் பாயும் தோட்டா பட மறுவார்த்தை பேசாதே... பாடல்)

*

அடுத்த வருவது...

இதுதான்இன்றைய காதல் தேசிய கீதம்.... என்று சொல்லும்படி பரவலாகப் பற்றி எரியும் பாடல். வாட்ஸ் அப் , இன்ஸ்டா ரீல்ஸ் என லட்சக்கணக்கான பகிர்வுகள்...


"மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே

அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

மச்சான் எப்போ வர போற

மச்சான் எப்போ வர போற


பத்து தல பாம்பா

வந்து முத்தம் தர போற..."


'பத்து தல பாம்பா

வந்து முத்தம் தர போற...' 


வீரயுகம் முதல் மென்பொருள் காலம் வரை தலைவிகளின் தாகத்தை,  தாபத்தை அல்லி மலரின் இதழ் அடுக்கைப் போல்அழகாக எழுதியிருக்கிறார் தாமரை .


(வெந்து தணிந்தது காடு பட மல்லிப்பூ பாடல்.)


ஏராளமான பாடல்கள்...

எக்கச்சக்கமான வரிகள்...


எடுத்துக் கூறினால்

எண்ணற்ற கவித்துவக் கற்பனைகள் .... 


எழுத எழுதத் தொடரும் சொல்லாட்சிகள்... 


எதைச் சொல்ல? எதை விட?


'ஒன்றா... இரண்டா... பாடல்கள்?'


ஒரு நாள் போதுமா? எனும் 'திருவிளையாடல்' படப் பாடல்தான் நினைவில் மிதக்கிறது. நீங்களே போய் you tube இல் கேளுங்கள்.


'கண்கள் நீயே ' எனும் முப்பொழுதும் உன் கற்பனைகள் ' படத்தின் 

ஒரு தாய்மைப் பாடலும் ,

'கண்ணான கண்ணே ' எனும் விஸ்வாசம் படத்தின்  தந்தையின் ஏக்கக் குரலும் உயிரைப் பிளந்து போடும் உளிகள். 


வெள்ளித்திரைக்கு வந்த வெள்ளிவீதியா?

நவீன நப்பின்னையா? 

அதியமானின் நட்பில் அகம் நெகிழ்ந்த ஔவையின் ஆவியா? என வியக்கவைக்கும் வரிகள் தாமரையின் தேன் மொழிகள்....

 

வரலாறு படைக்கும் தாமரைக்கு மனம் நிறைந்த 

வாழ்த்துக்கள் 💐

*

அன்புடன்,

பிருந்தா சாரதி

2022 , நவம்பர் 10 .




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி