ஜெகதீசனின் உலக சாதனை

 *விஜய் ஹசாரே கோப்பைத் தொடர்: ஜெகதீசனின் விளாசலால் ஒரே ஆட்டத்தில் பல உலக சாதனைகளை படைத்த தமிழ்நாடு அணி -



தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் தமிழ்நாடு அணியும்  ஒரு மாபெரும் மைல்கல்லை எட்டி உலக சாதனையை படைத்திருக்கிறது.  


 என்ன நடந்தது? 


 இந்தியாவில் 50 ஓவர்களை கொண்ட விஜய் ஹசாரே கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதியதில் தமிழ்நாடு அணி அருணாச்சல பிரதேச அணியை 435 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் பல்வேறு உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளதாக  இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ கூறுகிறது. 


 இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 50 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 506 ரன்கள் எடுத்தது. 


ஆடவர் கிரிக்கெட்டில் லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டிகளில் 50 ஓவர்களில் ஒரு அணி அடித்துள்ள அதிகபட்ச ரன்கள் இதுதான். 


 முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணி 498 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 


லிஸ்ட்-ஏ ஆட்டங்களை பொறுத்தவரையில் அந்த சாதனையை தமிழ்நாடு அணி நேற்று முறியடித்தது. 


 நேற்றைய ஆட்டத்தில் சாய்சுதர்சன் 102 பந்துகளில் 154 ரன்கள் அடித்தார். மற்றொரு துவக்க வீரர் நாராயண் ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பௌண்டரிகள், 15 சிக்ஸர்கள் விளாசி மொத்தம்  277 ரன்களை குவித்தார்.


 லிஸ்ட்-ஏ கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனிநபர் ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுதான். 


 இந்த போட்டியில் 114 பந்துகளில் இரட்டை சதத்தை தொட்டார் ஜெகதீசன். 


அதே போல முதல் விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஜோடி 416 ரன்களை குவித்தது.  லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எந்தவொரு விக்கெட்டுக்கும்  ஒரு ஜோடி சேர்த்த அதிகபட்ச ரன்கள் இதுதான் என கிரிக் இன்ஃபோ தளம் கூறுகிறது. 


 முன்னதாக, கடந்த 2015-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வே அணியுடன் விளையாடியபோது இரண்டாவது விக்கெட்டுக்கு கிறிஸ் கெயில், சாமுவேல் ஜோடி 372 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. 


நாராயண் ஜெகதீசன் விஜய் ஹசாரே தொடரில் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்துள்ளார். இது ஒரு சாதனையாகும். ஏனெனில் இதுவரை உலகிலேயே மூன்று கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் விளாசியிருந்தனர். இலங்கை வீரர் குமார் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இதைச் சாதித்தார். தென்னாப்பிரிக்க வீரர் அல்விரோ பீட்டர்சன் மற்றும் இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் லிஸ்ட்-ஏ போட்டிகளில் இதை சாதித்திருந்தனர். 


 தற்போது அந்த சாதனைகளை முறியடித்துள்ளார். இதன்மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் ஐந்து சதம் விளாசிய முதல் நபர் எனும் பெருமையை பெற்றுள்ளார். 


 அதேபோல விஜய் ஹசாரே தொடரில் இதுவரை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஐந்து சதம் அடித்ததே இல்லை. விராட் கோலி, தேவ்தத் படிக்கல், பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நான்கு சதங்களை விளாசி இருந்தனர். அதனை ஜெகதீசன் முறியடித்துவிட்டார். இன்னும் தமிழக அணிக்கு போட்டிகள் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 


 ஜெகதீசன் மற்றும் சாய்சுதர்சன் ஆட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு டீவீட்டை பகிர்ந்துள்ளார். 


இந்த போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி மெகா வெற்றி பெற்றது. அருனாச்சல பிரதேச அணி 71 ரன்களில் சுருண்டது.


 இதற்கு முன்பு உலகளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட வெற்றியை பெற்றதே இல்லை. 


 யார் இந்த நாராயண் ஜெகதீசன்?


 நாராயண் ஜெகதீசன் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். டிஎன்பிஎல் போட்டிகளின் மூலமாகப் பிரபலமடைந்தவர்.


 கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமெர்ஸ் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.


 ஜெகதீசன் ஒரு விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன். கடந்த 2016ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி, மத்திய பிரதேச அணிக்கு எதிராக விளையாடியபோது தான், முதன்முதலாக அவருக்கு ரஞ்சி கோப்பையில் இடம் கிடைத்தது.


அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில், ஏழாவது பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கிய ஜெகதீசன், முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.


1995ஆம் ஆண்டு பிறந்த வலது கை விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேனான நாராயண் ஜெகதீசனை 2018ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி.


ஆனால், இரண்டு சீசன் காத்திருப்புக்குப் பின்னர் 2020ஆம் ஆண்டு தான் அணியில் இடம் கிடைத்தது.


 சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கிறோம் என்பது குறித்து ஒரு பட்டியலை வெளியிட்டன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஜெகதீசன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

courtesy: BBC News தமிழ்*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி