வைணவ திவ்ய தேச உலா - 73 | துவாரகா துவாரகாதீசர் கோயில்*
108 வைணவ திவ்ய தேச உலா - 73 | துவாரகா துவாரகாதீசர் கோயில்*
108 வைணவ திவ்ய தேசங்களில், குஜராத் மாநிலம் துவாரகை மாவட்டத்தில் உள்ள துவாரகாதீசர் கோயில் 73-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. கருப்புநிறம் கொண்ட கிருஷ்ணர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
ஒகா துறைமுகத்துக்கு அருகில் கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகியோரால் 13 பாசுரங்களைக் கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
பெரியாழ்வார் பாசுரம்:
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்கானத்தே இருந்தானைக் கண்டார் உளர்.
மூலவர் : கிருஷ்ணர், துவாரகாநாதர் (துவாரகாதீசர்) | தாயார் : பாமா, ருக்மணி, ராதை | தீர்த்தம் : கோமதி ஆறு, ஸ்ரீசமுத்ர சங்கமம் | விமானம் : ஹேமகூட விமானம்
தல வரலாறு: கம்ச வதம் முடிந்ததும் மதுராவுக்கு உக்ரசேனன் அரசனாக்கப்பட்டான். இச்செயல் மகஜ தேசத்து மகாராஜாவாக இருந்த ஜராசந்தனுக்கு கோபத்தை உண்டாக்கியது. (கம்சனின் மாமனார் ஜராசங்கு) இவர் கிருஷ்ணர் மீது 16 முறை படையெடுத்து தோற்றுப் போனார். இத்தகவலை நாரத மகரிஷி மூலம் அறிந்த காலயவனன் என்ற அரசன், மதுராவைத் தாக்க வந்தான். மீண்டும் கிருஷ்ணரோடு போரிட ஜராசங்கு வந்தபோது, இரண்டு எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிக்க இயலாது என்பதை உணர்ந்த கிருஷ்ணர், மதுராவில் இருந்த மக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டார்.
யாதவ சேனைகளையும் மக்களையும் அழைத்துக் கொண்டு மேற்குக் கடற்கரைப் பக்கம் வர முடிவு செய்தார் கிருஷ்ணர். சமுத்திர ராஜனிடம் பன்னிரண்டு யோசனை தூரம் கடலில் இடம் வேண்டும் என்று கேட்டார். அதன்படி 12 யோசனை தூரம் கடல் உள்வாங்கியது.
அவ்விடத்தில் தேவதச்சன் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரே இரவில் அந்தப் பகுதியை தங்கத்தால் ஆன நகராக துவாரகாவை உருவாக்கினார் கிருஷ்ணர். சௌராஷ்டிரா தேசம் ஜாம் நகர் அருகில் கடலோரத்தில் ஆட்சி புரிந்து வந்த மகாராஜாவின் மகள் ருக்மணியை மணமுடித்து 100 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அதனால் இப்பகுதி மக்கள் கிருஷ்ணரை மன்னராகவும் போற்றி, இறைவனாகவும் வணங்குகின்றனர்.
கோயில் அமைப்பும் சிறப்பும்: சோமநாதர் கோயில் போன்ற அமைப்பில் துவாரகாதீசர் கோயில் உள்ளது. கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு பல படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். நான்கு நிலை கொண்ட 51.8 மீட்டர் உயர கோபுரத்துடன் அமைந்துள்ள கோயிலுக்குள் 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபம் உள்ளது.
மென்மையான சுண்ணாம்புக் கற்கலால் ஆன இக்கோயில் கருவறை, ரேழி, பெரிய மண்டபம், அதைச் சுற்றி மூன்று தலைவாசல்களையும் கொண்டுள்ளது. கருவறையில் சங்கு, சக்ர, கதாபாணியாக தாமரையுடன் ராஜ அலங்காரத்தில், தலையில் முண்டாசுடன் துவாரகாதீசர் அருள்பாலிக்கிறார். கோயிலின் பின்வாயில் வழியாக 56 படிகள் இறங்கினால் கோமதி நதியை அடையலாம்.
ஜெகத் மந்திர் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் முக்கோண வடிவிலான சிவப்புப் பட்டுத் துணியாலான சூரிய – சந்திர உருவங்கள் பதித்த 82 மீட்டர் நீளமுள்ள பெரிய கொடி தினமும் மூன்று முறை ஏற்றி இறக்கப்படுகிறது. கோபுர உச்சியில் உள்ள வட்டமான இடத்தில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.
கோமதி நதியில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 5,000 ஆண்டுகள் பழமையான கோயில் இதுவே என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சாரதா பீடம் இத்தலத்தில் உள்ளது.
காலையில் பாலகிருஷ்ணனாகவும் பகலில் அரசரைப் போலவும், மாலையில் பூஜிக்கத்தக்க அலங்காரத்துடனும் துவாரகாதீசர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். துவாரகா நகருக்கு அருகில் உள்ள துவாரகா தீவில் உள்ள அரண்மனையிலும் கிருஷ்ணர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இங்கு கிருஷ்ணரின் பட்டத்தரசிகள், அண்ணன் பலராமர், குரு துர்வாசர், தேவகி, கல்யாண ராமர், சுதாமர், துளசி, திரிவிக்கிரம மூர்த்தி, லட்சுமி நாராயணர் கோயில்கள் உள்ளன.
இங்கிருந்து 3 கிமீ தொலைவில் சங்க தீர்த்தம் அமைந்துள்ளது. தீவு துவாரகையில் ருக்மணிக்கு தனிக் கோயில் உள்ளது. இங்கு நின்ற நிலையில் ருக்மணி தாயார் அருள்பாலிக்கிறார்.
துவாரகா கற்கள்: கோமதி நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் துவாரகா கற்கள் கிடைக்கின்றன. அவற்றின் மேல்பாகம் தேன் அடைபோல் இருக்கும். சில கற்களில் விஷ்ணு சக்கரம் காணப்படும். இந்தக் கற்களில் நாராயண சின்னம், மகாலட்சுமி சின்னம் (பிரதீக்) இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்தக் கற்களை பக்தர்கள் எடுத்துச் சென்று பூஜித்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவிழாக்கள்: ஆண்டு முழுவதும் துவாரகாவிலும், தீவு துவாரகாவிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணருக்கு மணிக்கு ஒரு முறை விதவிதமான ஆடை அலங்காரம் செய்யப்பட்டு, 11 விதமான பிரசாதங்கள் படைக்கப்படும். ஒரு நாளைக்கு 17 முறை உணவு படைக்கப்படுகிறது. அந்த தினத்தில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து துவாரகாதீசரையும் ருக்மணி தாயாரையும் சேவிக்கின்றனர். அன்று பெண்கள் பாவன் பேடா என்ற நடனம் ஆடுவது வழக்கம்.
தீபாவளி, ஹோலி, குஜராத் புத்தாண்டு, மட்கோபாட் (உறியடித் திருநாள்) நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
Comments