*பலவித நன்மைகள் தரும் பள்ளியறை பூஜை*

*பலவித நன்மைகள் தரும் பள்ளியறை பூஜை*



இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை என்பது மிகவும் விசேஷமானது. சிவபெருமானின் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு, பல்வேறு பலன்கள் கிடைக்கப்பெறும்.

ஆலயங்களில் நடக்கும் அனைத்து பூஜைகளுமே சிறப்புக்குரியதுதான். ஆனால் இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை என்பது மிகவும் விசேஷமானது. அனைத்து ஆலயங்களிலும் பள்ளியறை பூஜை நடைபெறும். அதே நேரம் சிவபெருமானின் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு, பல்வேறு பலன்கள் கிடைக்கப்பெறும். கணவன்-மனைவி ஒற்றுமை, உயர் பதவி கிடைக்க, விரைவில் திருமணம் நடந்தேற, நீண்டநாள் நோய் அகல, கல்வியில் மேம்பட என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த பள்ளியறை பூஜை தீர்வாக அமையக்கூடும்.


கோவில் மூலவருக்கு அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு, சுவாமி தன்னுடைய சன்னிதியில் இருந்து புறப்பட்டு, அம்பாள் சன்னதிக்கு எழுந்தருள்வார். சுவாமியும், அம்பாளும் ஒரே சன்னிதியில் எழுந்தருளும், சிவ சக்தி ஐயக்கியமாக நடத்தப்படுவதுதான் 'பள்ளியறை பூஜை' ஆகும். இரவு கால பூஜை நிறைவுற்ற பின், ஈசனின் திருப்பாதத்திற்கு அலங்காரம் செய்வார்கள். அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லக்கில் வைத்து கோவிலுக்குள் வலம் வருவார்கள். அப்படி வலம் வரும்போது, நாதஸ்வரம், சங்கு, உடுக்கை, பேரிகை, துந்துபி, மத்தளம் மற்றும் திருக்கயிலாய வாத்தியம் என்று அழைக்கப்படும் பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்படும். பஞ்ச வாத்தியங்களை யார் ஒருவர் ஊதியம் பெறாமல் தன்னுடைய பிறவி முழுவதும் இசைக்கின்றாரோ, அவருக்கு சிவலோகத்தில் கணங்களாக இருக்கும் பாக்கியம் கிடைக்கும்.


பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசனை வைத்து வலம்வரும்போது, சிவபுராணம், பதிகங்கள் பாட வேண்டும். இந்த வலம் வரும் வேளையில் தரிசனம் செய்தாலே, வளமான வாழ்க்கை நமக்கு அமையும். பல்லக்கை தூக்கி வருபவர்கள், மறுபிறப்பில் செல்வ வளம் பொருந்தியவர்களாக இருப்பர் என்பது ஐதீகம். அதே போல் பள்ளியறை பூஜைக்கு பூக்கள், பூச்சரங்களை நிவேதனமாக கொடுப்பவர்களுக்கு, அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறும். பள்ளியறை பூஜைக்கு பசும்பால் தருபவர்களுக்கு, இந்தப் பிறவியிலேயே போற்றுதலுக்குரிய வாரிசு அமையும். எண்ணெய், நெய், மின்விளக்கு தானம் செய்பவர்கள், அடுத்த பிறவியில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியம் பெறுவர்.


திங்கட்கிழமை அன்று பள்ளியறை பூஜைக்குரிய பொருட்களை தானம் செய்து, அதில் கலந்துகொள்பவர்கள், அதன் பிறகு தங்களின் வாழ்க்கையில் மகத்தான திட்டங்களை தடையின்றி செயல்படுத்தி வெற்றி காண்பார்கள். ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணை அமைவதில் சிரமம் இருக்கலாம். அவர்கள் ஒரு வருட காலம் தினமும், பள்ளியறை பூஜையில் கலந்துகொள்வது சிறப்பான பலனைப் பெற்றுத்தரும். அதோடு தங்களின் நட்சத்திரம் வரும் நாளில் பள்ளியறை பூஜைக்கான பொருட்களை வாங்கிக்கொடுப்பது நல்லது.


பள்ளியறை பூைஜயில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்துகொண்டு, பூஜையின் முடிவில் ஆலயத்தில் உள்ள பசுவுக்கு பழங்கள் கொடுத்து வந்தாலும். பள்ளியறை பூஜையில் வழங்கப்படும் நைவேத்திய பாலை, கர்ப்பிணிகளுக்கு தந்தாலும் சுகப்பிரசவம் உண்டாகும். குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை ஏற்படும். பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவிலும் அன்னதானம் செய்பவர்கள், தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண்பார்கள். லாபம் பல மடங்காக வந்துசேரும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி