200 ஆண்டுகளாக ‘சுவையில் அள்ளும் திருச்சி பூந்தி’*

 200 ஆண்டுகளாக ‘சுவையில் அள்ளும் திருச்சி பூந்தி’*



மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை எப்போதும் இனிப்புகளுடன் கொண்டாடி பழகியவன். அதிலும் அவனுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே அந்த இனிப்பான பலகாரங்களுடன் ஒன்றித்து இருக்கும்.  கண்ணை கவரும் மஞ்சள் நிறத்தில் எத்தனை தொலைவில் இருந்தாலும் சட்டென்று சுண்டி இழுக்கும் அந்த நிறம் இன்றும் மாறாமல் தொடர்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது திருச்சியில். 200 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி காந்திமார்க்கெட் வளைவில் இருந்து மலைக்கோட்டை நோக்கி செல்லும் சாலையில் அமைந்துள்ள மிக பாரம்பரியமான கோவிந்தசாமி  பூந்திக் கடையை இன்று நிர்வகித்து வரும் மோகன் என்பவரை சந்தித்துபூந்தியின் வரலாறையும் அது பெரிய சைசில் உருவெடுத்த கதையையும் கேட்டோம்.


 நான் அந்த காலத்து பழைய பியூசி படித்து விட்டு, என்னுடைய பெரியப்பாவின் தொழிலை கற்றுக்கொண்டு இந்த கடையை நடத்திட்டு வறேன். அந்த காலத்தில் கிராமப்புறங்கள், சிறு நகரங்கள்ல கோவில் திருவிழாக்கள்ல பெரிய கட மிட்டாய்னு, சீனில செய்த பலகாரத்தை ஏணிமாதிரி படிக்கட்டு செஞ்சு அடுக்கி வைத்து விற்பனை செய்வாங்க. பாக்கவே வண்ணமயமா இருக்கும். அதில முதல் படிகட்டுல பெரிய சைஸ் பூந்திய சுடசுட செஞ்சு விற்பனை செய்வாங்க. திருவிழாவுல பெருவெட்டு பூந்தியும் சீனி மிட்டாயும் வாங்கிட்டு போறது பெருமையான விஷயம். மக்களிடமும் பெரிய வரவேற்பு இருந்ததால், திருச்சியிலயே கடை போட்டோம். இன்று வரை நாங்களும் எங்க முன்னோர்கள் சொன்ன முறையில பூந்தியைத் தயார் செய்து விற்பனை செய்துட்டு வர்றோம்.


‘‘1800-ம் வருஷம் எங்கள் தாத்தா கோவிந்த சாமியால ஆரம்பிக்கப்பட்டது இந்தக் கடை. ரொம்ப நாள் வரைக்கும் போர்டு கூட இல்லாம இயங்குச்சு. இப்போ என்னுடைய தாத்தாவின் பெயரில் கோவிந்த சாமி நாயுடு பூந்தினு செயல்பட்டுவருகிறது. அப்போ ஆரம்பிச்ச அதே இடத்துலதான் இப்போ  வரைக்கும் தொடர்ந்து நடத்திட்டு வர்றோம். அவர் ஆரம்பித்த போது மக்களுக்கு வித்தியாசமாகவும், சுவையாகவும், ஆரோக்கியமாகவும் உணவுப்பொருள் கொடுக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக வீட்டிலேயே தயார் செய்யப்படும் நெய்யினைக்  கொண்டு ‘பூந்தி’ செய்யலாம் என யோசித்தார். வழக்கமான சைஸ் பூந்தியாக  இல்லாமல், பெருவெட்டாகச் செய்தார்.


பூந்தியில் கடலை மாவுடன் அரிசி மாவும்  கலப்பதால், சீனிப் பாகு அதிகளவு உறிஞ்சு வதால் பூந்தி பெரிதாக வருகிறது.  சாதாரண பூந்தியில், அரிசிமாவு கலக்க மாட்டாங்க. அப்பறம் மாவு அரைக்குற பக்குவம் ரொம்ப முக்கியம். திருச்சி பூந்திக்குனு ஒரு பக்குவம் இருக்கு. அந்த பதத்துல காவேரி தண்ணியும் சேர்ந்து கூடுதல் சுவையை தருது என்கிறார் மோகன். தொடர்ந்து தங்கள் கடையின் சுவை ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்.


எத்தனையோ கடைகள், எத்தனையோ இனிப்பு வகைகள் என்று புதிதாக கண்டுபிடித்தாலும், திருச்சி பூந்திக்குனு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு. சிறிய மூங்கில் கூடையில்  வைத்துதான் இன்றளவும் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்காகவே தனியாக  மூங்கில் கூடைகளைச் செய்யச் சொல்லி வாங்கி பயன்படுத்துகிறார்கள். காமராசர், கருணாநிதி, நடிகர் சிவாஜி  கணேசன், வைகோ எனப் பல அரசியல் தலைவர்கள்,  சினிமா பிரபலங்கள் என யார்  திருச்சிக்கு வந்தாலும் பெரிய கடை பூந்தியை சாப்பிட்டுவிட்டு தான்  செல்வார்கள்.


‘‘அன்றுமுதல் இன்றுவரை அதே பழமை மாறாமல், அதே கைப்பக்குவத்துடன் பூந்தி தயாரித்து வருகின்றோம். பூந்தியை பொறுத்தவரை நல்ல தரமான கடலைப்பருப்பு, அரிசி உள்ளிட்டவற்றை பக்குவமாக அரைத்து சரியான அளவில் பிசைய வேண்டும், கட்டாயமாக ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை அடுத்தமுறை பயன்படுத்த கூடாது. இந்த மாவுகளை பதமாக கலந்து  பொரித்தெடுக்க வேண்டும். பின்பு சர்க்கரை ஜீராவில் ஊறவைக்க வேண்டும். என்னுடைய தாத்தா மிக அருமையாக பூந்தி செய்வார். என்னுடைய பெரியப்பா பதம் நாமம் விடம் இருந்து, மற்றொரு பெரியப்பா சின்னிகிருஷ்ணன் கற்றுக்கொண்டார். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.


என்னுடைய அப்பா விஜயராகவலு ரயில்வேயில் பணியாற்றியதால், இந்த தொழிலுக்கு வரவில்லை. ஆனால் அவ்வப்போது வந்து கடையைப் பார்த்துக்கொள்வார். இருப்பினும் எனக்கு குரு என்றால் என்னுடைய இரண்டு பெரியப்பாக்களும் தான். அவர்களிடம் இருந்துதான் இந்த கைப்பக்குவத்தை கற்றுக்கொண்டேன். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நான் தான் பூந்தி போட்டு வருகின்றேன். தற்போது வயது முதிர்வு காரணமாக என்னால் செய்ய முடியவில்லை. ஆனால் அந்த பக்குவத்தை என்னிடம் உள்ள ஒருவருக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்.


கடந்த இருபது வருடமாக அவர்தான் இந்த பூந்தியை சுட்டு வருகிறார். ஆங்கிலேயர்கள் இருந்தபோது எந்த விசேஷமாக இருந்தாலும், நம்ம கடை பூந்திதான். அதிலும் அன்றைய திருச்சி ஜில்லாவை சுற்றியுள்ள பல ஊர்களுக்கு நம்ம கடை சுவீட் தான். இருந்தும் இந்த கடைக்கு தான் வருவார்கள். இந்த கடையின் அடையாளம் கூட இன்றும் மாற்றப்படாமல் அப்படியே அதே இடத்தில் உள்ளது. அன்று ஒரு கிலோ பூந்தி 1 அணா இருந்தது. இன்று விலைவாசியேற்றத்தால் கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றோம்.


எத்தனையோ தீபாவளி, ஊர் திருவிழாக்கள் என்று பல பண்டிகைகளில் நம்முடைய கடை பூந்திதான் முதல் இடம் பிடிக்கும். கடந்த கொரோனா காலகட்டம் வரை நாள் ஒன்றுக்கு கிலோ கணக்குல பூந்தி விற்பனையாகும். இப்போ கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் தொழிலை விட்டுவிடாமல் அதே தரத்துல நடத்திவருகிறோம். அதற்கு காரணம் எங்களோட பாரம்பரியமான முறை தான். கடந்த பத்து வருட காலமாக அந்த கைக்கு அடக்கமான கூடைகள் செய்ய ஆள் இல்லை. அந்த கூடைகளை செய்தவர்கள் பலர் இன்று உயிரோடு இல்லை. ஆனால் ஒருவர் மட்டும் உயிருடன் இருக்கிறார். அவரிடம் இருந்து தற்போது கொஞ்சம் கூடைகள் மட்டும் வாங்கிக்கொள்கிறோம்.


ஒரு கிலோ பூந்தி வாங்குபவர்களுக்கு நாங்கள் அந்த கூடையில்தான் கட்டி தருவோம். இந்த தொழில் என்னுடன் முடிந்துவிடாது. நான் என்னுடைய இரண்டு மகன்களையும் தயார் செய்துள்ளேன். அவர்கள் ஒவ்வொருவரும் நன்றாக படித்து பெரிய வேலைக்கு சென்றாலும், நாளை இந்த தொழிலை விட்டுவிடாமல் நடத்த வேண்டும் என்றும் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அவர்களும் இதில் ஆர்வமாக உள்ளனர். என்னுடைய மூத்த மகன் விஜய் அரவிந்த், இளைய மகன் அஷ்வந்த் எனக்கு பிறகு இந்தத் தொழிலை நடத்துவார்கள்.”


வீட்டில் தயாராகும் நெய்யுடன் அரிசிமாவு, கடலை மாவு கலந்து சீனியுடன் செய்யப்படும் பெருவெட்டுப் பூந்திக்கு பல ஊர்களில் இருந்து வாடிக்கையாளர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட காற்று உட்புகும்படி வைத்தால் ஏழு நாள்கள் வரை கெடாமல் இருக்கும். இங்கிருந்து வருடாவருடம் துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா, செல்லும் பூந்தி கூடைகளும் உண்டு. திருச்சியின் பெருமைகளில் பூந்தியும் ஒன்று. மண்ணச்ச நல்லூர் பச்சை பொன்னி அரிசியில் செய்த மணப்பாறை முறுக்கும், திருச்சி பூந்தியும் அடுத்தடுத்து சாப்பிட்டால் அப்படி ஒரு காம்பினேசன் சுவை. இதன் அபார ருசி திருச்சிக்காரர்களின் உடலோடும் குடலோடும் கலந்த ருசிபக்குவம் என்று சொல்லலாம்....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி