கிராம_நீதி_மன்றம் என்றால் என்ன? கிராம நீதிமன்றங்கள்…!

 #கிராம_நீதி_மன்றம் என்றால் என்ன?



கிராம நீதிமன்றங்கள்…!


இந்திய கிராமப்புற மக்களின் 2 கோடியே 86 லட்சம் வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன....!


வரப்பு, வாய்க்கால் தகராறு, வாய்ச்சொல் தகராறு உள்ளிட்ட சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கு கூட வருடக் கணக்கில் கிராமத்து எளிய மனிதர்கள் மாவட்ட தலைநகரங்களுக்கு அலையோ, அலையென்று அலைந்து கஷ்டப்படுகிறார்கள்! இதற்கு முடிவுகட்டவும், கிராம மக்களுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே நீதி வழங்கவும் கொண்டு வரப்பட்டது தான் ‘கிராம நீதியாலயா- 2008’ என்ற சட்டமாகும், இதுவே கிராம நீதிமன்றம் என்று குறிப்பிடப்படுகிறது.


கிராமப்புற மக்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் நீதி கிடைக்க வழிவகை செய்வதே சட்ட கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட இந்த சட்டத்தின் நோக்கம் என்று வியாக்கியானமும் தரப்பட்டது. இது சட்டமாக்கப்பட்ட ஆண்டு 2008. நடைமுறைக்கு வந்த தேதி அக்டோபர் 2, 2009. இதற்காக யு.என்.டி.பி. எனப்படும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி முகமை 2009 ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை ரூ.44 கோடியே 60 லட்சம் நிதி உதவியும் தந்துள்ளது. ஆனால், இந்த அற்புதமான சட்டம் இது வரை இந்தியாவில் சரியாக  நடைமுறைபடுத்தப்படாமல் உள்ளது. பலருக்கும் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட விவரமே தெரியவில்லை!


இதன்படி கிராமங்களில் முதல்கட்டமாக 5,000 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், அதற்காக 1,400 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை சுமார் 200 கிராம நீதிமன்றங்களே அமைக்கப்பட்டுள்ளன.


*நிதி ஒதுக்கீடு*


ஒரு கிராம நீதிமன்றத்திற்கான கட்டமைப்பு செலவாக மத்திய அரசு ஒதுக்கிய நிதி மொத்தம் ரூ.18 லட்சமாகும். அதில் ரூ.10 லட்சம் நீதிமன்றக் கட்டிடத்திற்கானது. ரூ.5 லட்சம் வாகனத்திற்கானது. ரூ.3 லட்சம் டேபிள், சேர் உள்ளிட்ட செலவுகளுக்கானது.


ஒரு நீதிபதி, ஒரு தலைமை கிளார்க் மற்றும் ஒரு ஊழியர் ஆகியோரைக் கொண்ட சிறிய நீதிமன்றமாக இது செயல்படும்.


இவர்களுக்கான சம்பளங்களை மாநில அரசுகள் தரவேண்டும். நீதிபதிக்கு முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு வழங்கப்படும் சம்பளம் தர வேண்டும்.


*அமல்படுத்தியுள்ள மாநிலங்கள்*


இந்தியாவில் இது வரை இந்த சட்டத்தை 11 மாநிலங்கள் மட்டுமே அமல்படுத்தியுள்ளன. மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், கோவா ஆகிய பதினோரு மாநிலங்களில் அமலாகியுள்ளது. அந்த வகையில் அமல்படுத்தாமல் இருக்கும் மாநிலங்கள் தமிழகத்தையும் சேர்த்து 18 என்பது தான் கவலைக்குரியது. அமல்படுத்திய மாநிலங்களிலும் கேரளா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகியவை தவிர்த்து மற்றவை அவ்வளவு வெற்றிகரமாக செயல்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகிறார்கள். சில இடங்களில் சிறிய நீதிமன்றக் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற சில இடங்களில் நடமாடும் நீதிமன்றங்களாக வாரத்திற்கு இரு நாட்கள் நீதிபதி வந்து செல்வதாக ஏற்பாடாகியுள்ளது. ஆனால், நீதிபதிகள் மாதத்திற்கு ஒன்றிரண்டு முறைதான் வருகிறார்களாம்!


*தடங்கலுக்கான காரணங்கள்*


நிதி பற்றாக்குறை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை. அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். அத்துடன் வக்கீல்கள் பல இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை எதிர்த்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு கூட சில இடங்களில் நடத்தியுள்ளனர். கிராமங்களில் சாதி ஆதிக்க சக்திகள், அரசியல் செல்வாக்குள்ளவர்கள் நீதித்துறையில் அதிக தலையீடு செய்ய வாய்ப்புள்ளது என்பது வக்கீல்கள் வைக்கும் குற்றச்சாட்டாகும்!


ஆனால், இந்த சட்டம் வக்கீல் இல்லாமலே வாதாட வகை செய்வதுதான் முக்கிய வக்கீல்கள் எதிர்க்க காரணம் என சமூக ஆர்வலர்கள் வாதம் வைக்கின்றனர். ஆயினும், எளிய மக்களுக்கு எதற்கும் அடிபணியாமல் பாரபட்சமற்ற நீதியை பெற்றுத் தரக்கூடிய நேர்மையான நீதிபதிகளைக் கண்டறிவது ஒரு முக்கியமான சவாலாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், மாவட்ட நீதிபதிகளில் தற்போது சரிபாதிக்கும் மேலானவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.


*நீதிபதிகள் பற்றாக்குறை*


தற்போது இந்திய உயர்நீதிமன்றங்களின் நீதிபதி பணியிடங்களில் 38 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாத நிலை உள்ளது. மாவட்ட நீதிமன்றங்களுக்கோ சுமார் 5,000 நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மத்திய அரசும், மாநில அரசும் தற்போது நீதித்துறைக்கு போதுமான நிதியை ஒதுக்குவதில்லை. இன்றும்கூட சில நீதிமன்றங்களில் அடிப்படை கட்டமைப்புகள், தேவைகள் கூட சரியாக இல்லை. இதனால்தான் இந்திய உயர்நீதிமன்றங்களில் 43.5 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. விரைவாக நீதிகிடைக்க ஏற்படுத்தப்பட்ட விரைவு நீதிமன்றங்களிலேயே கூட சுமார் ஆறு லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன.


*மகாத்மா காந்தியின் கனவு*


நமது கிராமங்கள் முழு சுயாட்சி பெற்ற அமைப்புகளாக, தற்சார்புடன் செயல்பட வேண்டும் என்பது நமது தேசத் தந்தை காந்தியின் லட்சியக்கனவாகும். முந்தைய காலத்தில் எல்லாம் கிராம வழக்குகள் அந்தந்த கிராம எல்லைக்குள்ளேயே சம்மந்தப்பட்ட ஊர் பெரியவர்களின் தலைமையில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நல்ல அணுகுமுறையும் இருந்தது. சாதியப்பாகுபாடுடன் கூடிய கொடூர அணுகுமுறைகளும் இருந்தன. ஆகவே, கிராமங்களில் வழங்கப்பட்டு வந்த மரத்தடி நீதிமன்றத் தீர்ப்புகள் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அனைவருக்கும் பொதுவான இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், இதனால் கிராம மக்களுக்கு நீதி என்பது சுலபத்தில் பெறமுடியாத எட்டாக்கனியாகவே தொடருகிறது.


*பிரவீன் பட்டேல்* (தலைவர்- விரைவு நீதிக்கான சமூக அமைப்புகளின் சங்கம்) கூறுகையில், கிராம நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று சுமார் 140 சமூக அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறோம். இதற்காக விரைவு நீதிக்கான சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளோம். நாங்கள் பிரசாந்த்பூஷனை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்! இதையடுத்து உச்சநீதிமன்றமும் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கேட்டுள்ளது. தெலுங்கானா கவர்னரிடம் மனு கொடுத்தோம். அவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பினார். அவர் தலைமை செயலாளருக்கு விரைவில் கிராம நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். சத்தீஷ்காரில் முதல்-மந்திரியிிடம் மனு கொடுத்தோம். அவர் மத்திய மந்திரியை கேட்க சொன்னார். மத்திய மந்திரியான ரவிசங்கர் பிரசாத்தோ இதில் மாநில அரசே முடிவெடுக்கலாம் என திருப்பி அனுப்பிவிட்டார். ஒன்றும் நடக்கவில்லை. மொத்தத்தில் இதில் ஒரு அலட்சியம் சகலதரப்பிலும் உள்ளது!


ஆனால், வர்த்தக நீதிமன்றச் சட்டம் அமைப்பதற்கான அறிவிக்கை டிசம்பர் 31,2015-ம் ஆண்டு தான் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த சட்டத்தை முன்தேதியிட்டு அக்டோபர் 2015 முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவித்து, உடனடியாக நடைமுறைப்படுத்தினர். இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகவும் உதவிகரமான சட்டமாகும். நல்லது. அதே சமயம், பதினோரு ஆண்டுகளாகியும் கிராம நீதிமன்றங்கள் மட்டும் ஏன் நடைமுறைக்கு வராமல் உள்ளது? என்னுடைய வேண்டுகோள் எல்லாம் இந்த அரசு   அடித்தளத்தில் வாழும் விளிம்புநிலை மக்களான எளிய கிராம மக்கள் விஷயத்திலும் காட்டவேண்டும் என்பதே! ஏனெனில், அனைத்து மக்களுக்கும் நீதியை சாத்தியமாக்குவதே உண்மையான ஜனநாயகத்திற்கு அர்த்தமாகும் என்றும்.


இந்த தேசிய அமைப்பின் கிளை தமிழ்நாடு விரைவு நீதிக்கான சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் *எஸ்.ரமேஷ்* கூறுகையில், “தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தமிழக அரசிடம் கிராம நீதிமன்றங்கள் பற்றி கேள்வி கேட்டோம், தமிழக அரசு இங்கே எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ என தெரிவித்துவிட்டது என்று கூறியுள்ளார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி