தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை நமக்கெல்லாம் ஒருநாள் கொண்டாட்டம் தான்; ஆனால், வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தித்திக்கும் தீபாவளியை உவகையோடு கொண்டாடி வருகிறோம். புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் என்று, தமிழ்நாட்டில் மட்டும்தான் தீபாவளிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமா? இல்லை, இல்லைவே இல்லை. நாடு முழுவதுமே தீபாவளி பண்டிகை, உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், மாநிலங்களுக்கு மாநிலம், கொண்டாடுவதில்தான் சற்று மாறுபடுகிறது.
உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் என எல்லா மாநிலங்களிலும் தத்தமது பாரம்பரிய முறைப்படி தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் வணிகம் செய்யும் வட இந்தியர்கள், புது கணக்கு துவங்கி லட்சுமி பூஜை செய்வதுண்டு. வட இந்தியாவில் ராம ராவண யுத்தம் முடிந்து, ராமர் தசரத மன்னராக பட்டாபிஷேகம் செய்யும் நாள் என்ற வகையில், தீபாவளி கொண்டாடப்படுகிறது.
5 நாட்கள் வட இந்தியாவில் அமர்களம்பொதுவாக வட இந்தியாவில், 5 நாள் பண்டிகையாக தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, முதல்நாள், திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம் என்ற வகையில் பண்டிகை தொடங்குகிறது. இதை 'தந்தேரஸ்' எனவும் அழைப்பதுண்டு. இந்த நாளில், வீட்டிற்கு உலோகங்கள் வாங்குவதற்கு உகந்த நாளாகும். எனவே, தங்க நகை தொடங்கி, வெள்ளி மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் வரை வாங்குவர். அன்றைய தினம் மாலையில், வீட்டில் வைத்து லஷ்மியின் பெயரில் பூஜை செய்வர்.
இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று, நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள். இதனை, சோட்டி தீபாவளி அல்லது சின்ன தீபாவளி என்பர். அன்றைய நாளில், வீட்டிற்குள் லட்சுமி நுழைவார் என்பது ஐதீகம் ஆகும். இதற்காக லஷ்மியை வரவேற்க அவர்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைப்பர். தீபாவளி திருநாளின் மூன்றாம் நாள், கேதார கௌரி விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் தான், புத்தாடைகளை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடுகின்றனர்.
நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம் என்பர். 'கோவர்தன் பூஜை' நாளாகும். அன்றைய தினத்தில் பசுக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அவற்றை நீரட்டி, பூஜை செய்வர். அதேபோல், நிறுவனங்கள், கடைகள், வர்த்தக கடைகளில் பூஜை போட்டு புதுக்கணக்கு துவங்குவர்.
தீபாவளி பண்டிக்கையின் ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை என்பர். இதனை, 'பைய்யா தோஜ்' என்றும் கூறுவர். இந்த நாளில், பெண்கள் தம் சகோதரர் வீடுகளுக்கு செல்வர். விருந்துண்டு மகிழ்வர்.
பஞ்சாபில் தீபாவளி உற்சாகமாக கொண்டாடுவர். பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதும் அந்த நாளில் தான் என்பது விசேசமானது. மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினம் என்பதால், சமணர்களும் தீபாவளி தினத்தை கொண்டாடுகின்றனர். குஜராத்தில், தீபாவளி நாளின் போது சொத்துக்களை வாங்குவது சிறப்பு என்று கருதுகின்றனர். தீபாவளி நாளில் தியா என்ற பெயரில், நம்மூர் கார்த்திகை தீபம் போல், விளக்கேற்றி வழிபாடு நடத்துகின்றனர்.
மேற்கு வங்கத்தில் தீபாவளி நாளில் காளி கோவில்கள் களைகட்டி இருக்கும். மேற்கு வங்க மாநிலத்தில் ஹுப்ளி நதியின் மேல் அமைந்துள்ள ஹவுரா பாலம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். காளியின் சிலைகள் பொது இடங்களில் வைத்து, சிறப்பு பூஜை செய்கின்றனர். தங்களது முன்னோர்கள், தீபாவளி நாளில் சொர்க்கத்திற்கு செல்வர் என்றும் இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
கர் நாடகாவில் தீபாவளி மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.
எது எப்படியானாலும் பண்டிகைகள் நம்மை குதூகலப்படுத்தக்கூடியவை. நம் மரபுகளை, பாரம்பரியங்களை நம் சந்ததியினருக்கு சொல்லித்தருபவை. மாறுபாடுகளை மறந்து, வேறுபாடுகளை களைந்து, தீப ஒளித்திரு நாளை மகிழ்வோடு கொண்டாடுவோம். தீபாவளி நாளில் நம் எல்லோருக்கும் வளமும் நலமும் வந்து சேரட்டும்.
Comments