வெற்றியை ஈட்டித்தரும் ஜெயந்திநாதர்-சூரசம்ஹார விழா*
*வெற்றியை ஈட்டித்தரும் ஜெயந்திநாதர்-சூரசம்ஹார விழா*
தமிழர்கள் வாழ்வு காதல், வீரம் என்ற இரண்டும் சுவைபடக் கலந்ததாகும். தமிழ் மக்கள் காதலைப் போலவே வீரத்தையும் அதிக அளவிற்குப் போற்றினர். போர்க்களத்தில் வீரர்கள் செய்த சாகசங்களையும் பெற்ற விழுப்புண்களையும்,வெற்றிகளையும் திரும்பத் திரும்பச் சொல்லக் கேட்டு மகிழ்ந்தனர். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை முதலான நூல்கள் தமிழர்தம் வீரத்தையும், தனி மனித மனோதிடத்தையும் விரிவாகக்கூறுகின்றன. பரணி என்னும் இலக்கியம் வீரத்தைப் பாடவே விளைந்த இலக்கிய வடிவம் ஆகும்.
மக்கள், வீரர்கள் தீரத்துடன் போரிட்டு வீர மரணமடைந்து வீரசொர்க்கம் அடைந்த களங்களைக் காண்பதில் பெரு மகிழ்வு கண்டனர். அதைப் புலவர்கள் தனிச் சிறப்புடன் பாடினர். அதற்குக் களம் பாடியது என்பது பெயர்.
போர்க்களங்களைக் கண்டு தொழுவதிலும் அங்குள்ள காளியை வாழ்த்திப் பாடுவதிலும் புலவர்கள் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். போர்களை விவரித்துப் பாடுவதற்காகவே பல நூல்கள் எழுந்துள்ளன. அர்ச்சுனன் - வேடன் சண்டை, மயில் ராவணன் சண்டை, வாலி வதம் முதலியவை சண்டைகளைக் கூறும் நூல்களாகும்.
அருணகிரிநாதர் பாடிய போர்க்களத்தலகை வகுப்பு, பூத வேதாள வகுப்பு முதலிய நூல்கள் போர்க்களத்தைப் பாடும் நூல்களேயாகும். கிராமிய தெய்வங்களில் சிலவற்றின் வழிபாட்டில் படுகளம் அமைத்தல் என்பது சமயச் சடங்காக உள்ளது. போர் நடந்ததாகவும் அப்போரில் வீரர்கள் வீழ்ந்து கிடக்கும் காட்சியைத் தேவி நேரில் கண்டு வருவதாகக் கூறும் வகையாக இச்சடங்கு அமைகிறது.
இதுபோன்றதோர் போர்க்களச் சடங்குத் திருவிழாவின் மாற்று வடிவே சூரசம்ஹார விழாவாகும். இந்நாளில் இது பல்வேறு மாறுதல்களுடன் நிகழ்ந்து வருகின்றது. இது முருகன் ஆலயங்களில் சிறப்புடன் நடைபெறுகிறது. இதை இங்கே கண்டு தமிழர் வீரர்களின் தலைமைத் தனித் தெய்வமான முருகப் பெருமானின் வீரதீரங்களை வெகுவாகக் கொண்டாடினர். சூரபதுமனை வென்று வாகை சூடியதைப் பெரியவிழாவாகக் கொண்டாடுகின்றனர். அதுவே சூரசம்ஹார ஐதீக விழாவாகும்.
தீபாவளிக்கு மறுநாள் அமாவாசையிலிருந்து விரதமிருந்து காப்பு கட்டிக் கொண்டு விழாவைத் தொடங்குகின்றனர். முருகனைக் குறிக்க ஒருவரும் நவவீரர்களைக் குறிக்க ஒன்பதினரும் முருகனுக்குத் துணைவர்களுமாக காப்புக் கட்டிக் கொண்டு விரதம் மேற்கொள்ளுகின்றனர். அன்று முதல் தினமும் இவர்கள் காலையிலும் மாலையிலும் ஆலயத்திற்கு வந்து வழிபடுவர். சுவாமி புறப்பாடு நடந்தால் அவருடன் வீதி வலம் வருவர். இவர்கள் தலைப்பாகை உருத்திராட்ச கண்டிகை நீண்ட அங்கி மலர் மலைகள் அணிந்து உடன் வருவர். அப்போது சத்ரு சங்கார வேற் பதிகம், ஆறுமுகன் பதிகம் முதலிய பதிகங்களையும் விருத்தங்களையும் ஓதுவர்.
ஐந்தாம் நாள் விழா தனிச் சிறப்பு மிக்கதாகும். சூரனை வெல்ல முருகன் அன்னையிடம் வேல் வாங்குவதைக் குறிக்கும் விழா. முருகன் (வேடம் பூண்டவர்) நவவீரர் (வேடம் பூண்டவர்கள்) சூழ, அன்பர்களுடன் கூடி அம்பிகை சந்நதியை அடைவார். முருகன் உலாத்திருமேனியும் அலங்கரித்து உடன் எடுத்துவரப்படும்.) அங்கு முருகன் தோன்றுதல், திருவிளையாடல் புரிந்தது, அன்னையின் அருளைப் பெற்று சூரனை வெல்ல ஆசி வாங்குதல் ஆகியவை பாடல்களாகவும் விருத்தங்களாகவும் பாடப்படும்.
அம்பிகையின் கரத்தில் வேலை சாத்தியிருப்பர். இப்பாடல்கள் முடிந்ததும் வேல் வாங்கும் ஐதீகம் நடைபெறும். அம்பிகையின் கரத்திலிருக்கும் வேலை அர்ச்சகர் எடுத்து வந்து (உலாத் திருமேனியான) முருகனுக்குச் சார்த்துவார். வேறு ஒரு வேலை அம்பிகையிடமிருந்து எடுத்து முருகன் வேடம் பூண்டவரிடம் அளிப்பார்கள். பின்னர் அனைவருடன் வீதி வலம் வந்து முருகனைக் கொலு மண்டபத்தில் வைப்பர்.
அடுத்தநாள் காலை முருகனுக்கு அபிஷேகம் நடைபெறும். அப்போது வேலுக்கு சிறப்பான அபிஷேகம் நடைபெறும். மாலை சூரசம்ஹார விழா நடக்கும். பெரிய சூரன் உருவை வைக்கோல் காகிதம் மூங்கில் சிம்புகள் முதலியவற்றைக் கொண்டு தயாரிப்பார். அதை வண்டியில் ஏற்றி உலா வருவர். அதனுடன் சூரபத்மன், பானுகோபன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி வேடம் தரித்தவர்கள் உடன் வருவர். அப்போது சூரன் திக்குவிஜயம் செய்து; தேவர்களை அடக்கி ஆள்வது; ஜெயந்தனைச் சிறையில் இடுவது; முதலிய காட்சிகளை விளக்கும் பாடல்கள் பாடப்படும்.
அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் நிற்பர். முருகனும் (வேடமிட்டவர்) பரிவாரங்களுடன் அங்கு வருவார். முருகனை, குதிரை அல்லது ஆட்டு வாகனத்தில் அல்லது தேரில் அங்கு எழுந்தருளச் செய்வர். முருகன் மற்றும் நவவீரர் வேடம் தாங்கியவர்களும் உடன் வருவர். அங்குச் சண்டை தொடங்கும். அஜமுகி வருதல்; அவளை ஐயனார் தடுத்தல்; அவள் சூரனிடம் முறையிடுதல்; சூரன் மகன் இந்திரன் மகன் ஜெயந்தனைச் சிறை செய்வது; வீரபாகுதேவர் முருகனின் தூதுவனாக தூது செல்லுதல்; போர் அறிவித்தல் முதலானவை வசனமாகவும் பாடல்களாகவும் கூறப்படும். முதலில் யானை முகம் கொண்ட தாரகன் போருக்கு வருவான். வீரவாகு தேவர் அவனை வென்று தலையை வெட்டுவார்.
அடுத்ததாக, சிங்க முகம் கொண்ட சிங்கமுகன் வருவான். அவனுடைய தலையையும் வீரபாகுதேவன் வெட்டுவார். இப்படியே அஜமுகன், சிருங்கமுகன், புலிமுகன் ஆகியோர் போரிட வருவர். அவர்களையும் அவர் வெல்லுவார். இறுதியில் சூரபத்மன் வருவான். அவனுடன் வீரபாகுதேவர் போர் புரிவார். முருகனும் (வேடம் பூண்டவர்) அவனுடன் போரிட வருவார். அவன் மாமரமாகி நிற்பான். அவர் வேலால் அவனைப் பிளக்க, அப்போது அவன் மயிலும் சேவலும் ஆனதைக் குறிக்கும் வகையில் சூரன் வடிவை மறைத்து மயில் சேவல் உருவங்களை வைத்து நடனமாடியபடி முருகனிடம் கொண்டு வந்து தீபாராதனை செய்வர். முருகனுடைய வேலுக்கு அபிஷேகம் செய்து அவர் கரத்தில் வைப்பர். முருகனை அப்போது மயில் வாகனத்தில் அமர்த்தி எஞ்சிய வீதியுலாவை முடிப்பர். அசுரனை வெற்றி கொண்ட முருகனை ஜெயந்திநாதர் என்றழைப்பர்.
மறுநாள் சப்தமியன்று சாந்தி அபிஷேகமும் தெய்வானை திருமணமும் நடைபெறும்.திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரப் பெருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். வங்கக் கடலோரக் கடற்கரை மணலில் சூரனும் முருகனும் யுத்த களத்தில் சந்திப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது ஏராளமான மக்கள் கடலில் நீராடுகின்றனர்.
சென்னை - கந்தகோட்டத்திலும் இப்போரிடும் காட்சியை சிறப்பான வர்ணனையுடனும் கலை நயம் மிகுந்த அலங்காரத்துடனும் அன்பர்கள் நடத்துகின்றனர். இது கண்கவர் திருவிழாவாக இன்றும் நடைபெறுகிறது.
பூசை. ஆட்சிலிங்கம்
...
Comments