*வேண்டியதை எல்லாம் தரும் வேங்கடவன்*

 


*வேண்டியதை எல்லாம் தரும் வேங்கடவன்*


வாடபல்லி (கிழக்கு கோதாவரி)


கிருஷ்ணா நதிக் கரையில் ``வாடபல்லி’’ என்னும் பெயரில் இரண்டு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று தீபாலய லட்சுமி நரசிம்மர் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநரசிம்ம ஷேத்திரமாகும். மற்றொன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. இந்த வாடபல்லிதான் வெங்கடேச திருத்தலமாகும்.

 

ஏறக்குறைய, நானூற்றைம்பது வருடங்கலான பழைமை வாய்ந்த திருத்தலமாகும். இங்கு பெருமாளின் திருநாமம், ``ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி’’ ஆகும். இத்திருத்தலம், சின்னத் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.


அலர்மேல்மங்கைத் தாயாருடன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். ஆந்திரப் பிரதேசம் மாநிலம், விஜயவாடாவிலிருந்து சுமார் 180 கி.மீ., தொலைவில் வாடபல்லி உள்ளது.

 

காடிடம்


மருத நிலமாகிய வயல்வெளிகளிலும், முல்லையும் - குறிஞ்சியும் மயங்கிய நிலமாகிய சிறிய குன்றுகளும் செறிந்த பகுதியில், ``ஸ்ரீலட்சுமி வெங்கடரமணப் பெருமாள்’’ திருக்கோயில் அமைந்துள்ளது.

 

ரங்க மண்டபம், முக மண்டபம், அந்தராளம் ஆகியவற்றைக் கடந்து கருவறையை அடையவேண்டும். கருவறையில், எம்பெருமான், ஸ்ரீ தேவி - பூதேவியுடன் ஸ்ரீவெங்கடரமணனாக எழுந்தருளியிருக்கிறார். இங்கு, ஏழு நிலைகளைக்கொண்ட ராஜகோபுரம் உள்ளது.


சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர் இந்தத் திருக்கோவிலுக்கு பல திருப்பணிகளைச் செய்து கோவிலை விரிவு படுத்தியுள்ளனர். மேலும், இந்த கோவிலுக்குள் கஜானனர் என்னும் தும்பிக்கையாழ்வார், அழகிய சிங்கர் (நரசிம்மர்), கருடாழ்வார், அனுமன் ஆகிய தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர்.


கர்நாடக மாநிலம், பாகேபள்ளியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் காடிடம் திருத்தலத்திற்கு வந்துவிடலாம்.


மந்திராலயம்


மகான் ஸ்ரீ ராகவேந்திரரால், பிரதிஷ்டை செய்யப்பட்ட ``ஸ்ரீ வெங்கடரமணர் ஆலயம்’’ உள்ளது. இந்த ஆலயம், ராகவேந்திரரின் மூல பிருந்தாவனமான மந்திராலயத்தில்தான் உள்ளது. ராகவேந்திரரைத் தரிசித்தவுடன், அங்கிருக்கும் மடத்தின் ஊழியர்களிடத்திலோ, அல்லது உள்ளூர் மக்களிடத்திலோ இந்த ஸ்ரீவெங்கடரமணர் கோவிலுக்கு வழிக்கேட்டால் சொல்வார்கள் நடந்தே செல்லலாம்.


மகான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிக்கு, திருப்பதி வெங்கடாஜலபதியே குலதெய்வமாவார். அதனால் மகான் ஸ்ரீ ராகவேந்திரர், வெங்கடரமணரைப் பிரதிஷ்டை செய்த பின்னரே, மாஞ்சாலத்தில் மற்ற பணிகளைத் தொடங்கினார். ஆகவே, மந்திராலயம் சென்று வெங்கடரமணரை தவறாமல் தரிசிப்பது சிறப்பானதாகும்.


ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து 283 கி.மீ., தொலைவில் மந்திராலயம் உள்ளது.


தரமணி


ராகவபட்டாச்சாரியார் என்பவர் திருமலை திருப்பதியிலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் பல்லாண்டுகள் கைங்கர்யம் செய்து வந்தார். வயது மூப்பு காரணமாக, அவரால் தொடர்ந்து திருப்பதியில் கைங்கர்யம் செய்ய முடியவில்லை. எனவே, அவருடைய வேண்டுகோளின்படி அன்பர்கள், தரமணியில் இந்தத் திருவேங்கடவன் ஆலயத்தினை நிர்மாணித்தார்கள். சுமார் 1976-ல் கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமானுக்கு, ``ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள்’’ என்கின்ற திருநாமமாகும்.


‘‘பென்னை மாமணியை அணியார்ந்ததோர்


மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்


என்னை யாருடை ஈசனை எம்பிரான்


தன்னை யாம் சென்று காண்டும் தண்காவிலே’’


என்று திருமங்கையாழ்வார் அருளும், அழகை தரமணியிலும் சேவிக்கலாம்.


சென்னை, தரமணி பேருந்து நிறுத்தத்திலிருந்து 2.கி.மீ. தொலைவில் இராஜாஜி தெருவில், இத்திருக்கோவில் அமைந்துள்ளது.


கோட்டூர்


‘கோடு’ எனில் தந்தத்தின் பெயர்களில் ஒன்று. வராகப் பெருமாள், தம் தந்தத்தின் மூலம்தான் கடல் நீரிலிருந்து பூமியை எடுத்துக் காத்தார். அத்தகைய தந்தத்தின் பெருமை தோன்றும்படி இத்திருத்தலத்திற்கு, `கோட்டூர்’ என்று பெயர் ஏற்பட்டது. தற்போது இந்த திருத்தலம், கோட்டூர்புரம் என்று அழைக்கப்படுகிறது. ``ஸ்ரீநிவாசப் பெருமாள்’’ இங்கு அலர்மேல்மங்கைத் தாயாருடன் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.


ஸ்ரீராம நவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, சித்ரா பௌர்ணமி, ஆகிய முக்கியமான நாட்களாக இவ்வாலயத்தில் கொண்டாடப்படுகிறது. மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பழங்காலக் கோவில் இது என்று கூறப்படுகிறது.


இந்தக் கோவில் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சி.எல்.ஆர்.ஐ) பின்புறம் அமைந்துள்ளது.


சித்திரவாடி


மதுராந்தகத்திலிருந்து கூவத்தூர் செல்லும் வழியில் 8.கி.மீ., தொலைவில் முதுகரைக்கு அருகில் இந்த அழகான சித்திரவாடி சிற்றூர் உள்ளது. இங்கே, `` பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்’’ கோவில் அமைந்திருக்கிறது. இங்கே வேங்கடவன் அன்பர்களுக்காக மனமுவந்து கோவில் கொண்டிருக்கிறார்.


சனிக்கிழமை தோறும் விளக்கேற்றி பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை வழிபட்டால், பக்தர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதாக ஐதீகம் உள்ளது.


திருப்பாற்கடல்


``ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி’’ எனும் திருநாமத்துடன் காஞ்சிபுரம் அருகிலிருக்கும் திருப்பாற்கடலில், பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இந்த திருத்தலம் முந்தைய காலத்தில் விஜய கண்ட கோபாலபுரம் எனவும், அவனி நாராயண சதுர்வேத மங்கலம் என்றும் அழைக்கப்பட்டது. புண்டலீகரெனும் திருமாலடியாரான முனிவர், இந்த ஊருக்கு அருகில் வரும் பொழுது, ஆவுடையார் மேலிருந்த ஸ்ரீ மந்நாராயணனைக் கண்டார்.


முனியே நான்முகனே! முக்கண்ணப்பா! என்று நம்மாழ்வார் விளித்தபடி, நாராயணனின் திருமேனியில் அங்கமாக சிவபெருமானைத் தரிசித்தார். ஸர்வாந்தர்யாமியை, அர்ச்சாவதாரமாக சேவித்தார். அன்று முதல், இந்த பெருமானுக்கு ‘புண்டலீகவரதன்’ என்று மற்றொரு திருநாமம் ஏற்பட்டது.


திருத்தலத்தின் புஷ்கரணீருக்குப் புண்டலீக தீர்த்தம் என்றே பெயர்.காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 33 கி.மீ., தொலைவிலும், வேலூரிலிருந்து 42 கி.மீ., தொலைவிலும் திருப்பாற்கடல் திருத்தலத்திற்கு வந்தடையலாம்.


வெண்பாக்கம்


அலர்மேல் மங்கைத் தாயாருடன் ``ஸ்ரீனிவாசப் பெருமாள்’’ எழுந்தருளியிருக்கும் அழகான திருக்கோவில்தான் வெண்பாக்கத்தில் அமைந்திருக்கிறது. பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.


பல ஆச்சாரியப் புருஷர்கள் இப்பெருமாளைச் சேவித்திருக்கிறார்கள். மிகுந்த பழங்காலத் திருக்கோயிலாகும்.


காஞ்சிபுரத்திலிருந்து, வடமேற்கில் 16 கி.மீ. தொலைவில் வெண்பாக்கம் உள்ளது. சிங்கப் பெருமாள் கோயிலிலிருந்தும் செல்லலாம். சிங்கப்பெருமாள் கோயிலில் பாடலாத்ரி நரசிம்மரைச் சேவித்துவிட்டு வெண்பாக்கம் செல்லலாம்.


செஞ்சி


செஞ்சிக்கோட்டை என்றே புகழ் பெற்றிருக்கும் பெரியகோட்டை இங்குள்ளது. மேலும், ஏறத்தாழ இரண்டு ஏக்கர் பரப்பளவில் செஞ்சி ``ஸ்ரீ  வெங்கடரமணப் பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. தொல்லியல் துறையினரின் பாதுகாப்பின் கீழ் இந்த திருக்கோயில் உள்ளது.


ஓவியர்கள், சிற்பிகள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், தொல் பொருள் அறிஞர்கள் போன்றவர்களுக்கு மட்டுமின்றி, பக்தர்களுக்கும் இந்தக் கோவில் மிகவும் முக்கியமானதாகும். வந்து பாருங்கள் மீண்டும் மீண்டும் வரத்தோன்றும் அழகிய திருக்கோவில்.


திருவண்ணாமலையிலிருந்து, 35 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் செஞ்சி ஸ்ரீ வெங்கடரமணப் பெருமாள் கோவில் உள்ளது.


 அரியக்குடி


முன்னொருகாலத்தில், காரைக்குடி பகுதியிலிருந்த அடியவர் ஒருவர், திருவேங்கடமுடையானைத் தினமும் சேவிக்க ஆவல் கொண்டார். முதிர்ந்த வயது காரணமாக அவரால் திருமலைக்குச் சென்று சேவிக்க முடியவில்லை. தினமும் உறங்கும் முன், திருமலையப்பனை நினைத்துக் கொண்டே அவர் உறங்கினர்.


ஒருநாள், அவரின் கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான், அரியக் குடியிலேயே தம்மை எழுந்தருளச் செய்யுமாறு உத்தரவு கொடுத்தார். அதன்படி, அரியக்குடியில் வெங்கடாசலபதி திருக்கோவில் எழுப்பப்பட்டது. அன்று முதல் அந்த அடியவர், இந்த வெங்கடாசலபதியை வணங்கி மகிழ்ந்தார்.

 

ஆகையால், வயதானவர்கள் மற்றும்  திருமலைக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து தரிசிக்கலாம். பக்தர்கள் வேண்டிக்கொள்ளும் காரியங்கள் உடனடியாக நிறைவேறுவதாக உள்ளூர் பக்தர்கள் கூறுகிறார்கள்.

 

காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ, தொலைவில் அரியக்குடி கிராமம் உள்ளது.



...

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி