தமிழ்’ உங்களை என்றும் கைவிடாது’
மதன்
விகடன் இணையாசிரியராக அவரை விகடன் பொன்விழா முதற்கொண்டு பல சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறேன். மறக்கமுடியாத நிகழ்ச்சி என்றால் ஒருமுறை அவர் ஆட்சியில் இருந்த சமயத்தில், விகடன் சார்பாக தமிழ்நாட்டின் சிறந்த ஓவியர்களைக் கொண்டு அவரை ஓவியமாக வரைவதற்கு அனுமதி கேட்டிருந்தேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். சிறந்த ஓவியர்கள் தன்னை வரைவதற்கு
ஏதுவாக ஒரு மாடல் போல அமர்ந்திருந்தார். எதிரே பல ஓவியர்களும் அவரை சீரியஸாக வரைந்து கொண்டிருந்தார்கள். ‘நான் கொஞ்சம் அசையலாமா?’ என பவ்யமாகக் கேட்டவரிடம் ‘உங்கள் இஷ்டம் போல் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யுங்கள்... அவர்கள் வரைந்து கொள்வார்கள்!’ என்றேன். அவரருகே அமர்ந்து நானும் ஓவியர்களின் பணியை ரசித்துக் கொண்டிருந்தேன். என் பக்கம் திரும்பியவர்,
‘நீங்கள் என்னை வரையமாட்டீர்களா? நீங்களும் ஓவியர்தானே?!’ என்றார்.
‘நான் ஒரு கார்ட்டூனிஸ்ட். இவர்களைப் போல தொழில் முறையில் படித்து ஓவியனானவனல்ல... எனக்கு கார்ட்டூன்தான் போடத்தெரியும்' என்றேன். உடனே, ‘அதைத்தான் செய்யுங்களேன்’ என்றார்.
சொன்னதோடு நில்லாமல் உள்ளிருந்து பேப்பரும் பேனாவும் வரவழைத்து என்னிடம் நீட்டினார். அவரது அன்பை ஏற்று வரைந்தேன்.
இரு பெரிய கரங்கள் ஒன்று மேல்புறத்திலும், மற்றொன்றை கீழ் புறத்திலுமாக வரைந்து இரண்டுக்கும் நடுவே அவர் சிறு உருவமாக நிற்பது போல் அமைத்திருந்தேன். மேலே குடைபோல் இருந்த கரத்திற்கு ‘பதவி’ என பெயரிட்டு கீழே அவரைத் தாங்கி நின்ற கரத்திற்கு ‘தமிழ்’ என பெயரிட்டிருந்தேன். அவரிடம் நீட்டி ‘மேலே உள்ள பதவிக்கரம் வரும்...போகும்... ஆனால் கீழே உங்களை தாங்கிப் பிடிக்கும் ‘தமிழ்’ உங்களை என்றும் கைவிடாது’ என்றேன்.
கலைஞர் முகத்தில் பெரியபுன்னகை மலர்ந்தது. ‘ரொம்ப நல்லார்க்கு’என்று சொல்லியபடி கார்ட்டூனை மிகவும் ரசித்தார்.
நன்றி: விகடகவி
Comments