பழநி பாரதி
பழநி பாரதி
இயக்குநர் விக்ரமனின் அறிமுகம் கிடைத்தது. அவரது முதல் படம் ‘புது வசந்தம்’. அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘பெரும்புள்ளி’ என்கிற படத்தின் கதை ஆலோசனையில் இருந்தார். அப்போது எனது நண்பன் பேரமனூர் சந்தானம் ஒரு பிரபல வார இதழில் ஃப்ரீலான்சர் ஆக பணியாற்றிக் கொண்டிருந்தான். ஒரு புதுமைக்காக அந்த வார இதழை சில வாரங்கள் சில பிரபலங்கள் தயாரித்தார்கள். அதில் ஒரு வாரம் விக்ரமன். அந்த இதழின் எழுத்துப் பணிகளுக்கு நான் சந்தானத்திற்கு உதவினேன்.
விக்கிரமனுடைய பதில் இப்படி இருந்தது: “ஒரு சிலர் நல்லா கவிதை எழுதுவாங்க; ஆனா, மெட்டுக்குப் பாட்டு எழுதச் சொன்னால் சிரமப்படுவாங்க, அந்த மாதிரி ஆகிடக்கூடாது...”கவிதைப் புத்தகத்தைப் பார்த்தவர் அடுத்த நாளே என்னை அழைத்து வரச் சொல்லியிருந்தார். போனவுடன் எனக்கு ஒரு மெட்டைக் கொடுத்து, ‘‘நம்பிக்கையோடு எழுதுங்க. நல்லா இருந்தா நிச்சயம் படத்தில் பயன்படுத்துவேன்...’’ என்று சொல்லி அனுப்பினார்.
அவரது இரண்டாவது படமான ‘பெரும்புள்ளி’யில்தான் முதல் பாடல் வாய்ப்பு.மரபுக் கவிதைகளில் பயிற்சி இருந்தபோதும் திரை மெட்டுக்கு எழுதுவது சவாலாக இருந்தது. அதில் என் கவித்துவத்தை நிரூபிக்க திரும்பத் திரும்ப எழுதினேன். மெட்டுக்கு எழுதுவது மெதுவாக வசப்பட்டது.
‘இளமையின் விழிகளில் வளர்பிறைக் கனவுகள்பௌர்ணமி ஆகிறதேமரங்களின் கிளைகளில் குயில்களின் சுரங்களில்சூரியன் மலர்கிறதே...’எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் பாடல் நன்றாகவே வந்திருந்தது. விக்ரமன் பாராட்டினார். படத்தின் நாயகன் ‘என்னுயிர்த் தோழன்’ பாபு விபத்தில் சிக்கியதால் எனது பாடலைப் படம்பிடிக்க முடியவில்லை. படத்தின் டைட்டிலில் பெயர் வந்தது; பாடல் வரவில்லை.
திரும்பவும் பத்திரிகைகளிலும் பதிப்பகங்களிலும் பிழைதிருத்தும் பணி தொடர்ந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு விக்ரமனின் அடுத்த படம் ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, பொன்வண்ணனின் ‘அன்னை வயல்’ இரண்டு படங்களிலும் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தேன். ‘அன்னை வய’லின் ‘மல்லிகைப் பூவழகில்...’ என்கிற பாடலை ஒரு பூங்காவில் உட்கார்ந்து ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தேன்.
அங்கிருந்து பொன்வண்ணன் அலுவலகத்திற்குச் சென்று அவரிடம் காட்டினேன். அப்படியே இசையமைப்பாளர் சிற்பியிடம் கொடுத்துப் பாடச் சொல்லிக் கேட்டார். ஒரு சொல்லைக்கூட மாற்றச் சொல்லவில்லை. அடுத்த சில மணி நேரத்தில் எஸ்.பி.பியும் ஜானகியும் இணைந்து பாட என் சொற்களுக்குச் சிறகுகள் முளைத்தன. பாடல் எழுதுவதில் மிகுந்த நம்பிக்கை பிறந்தது. ஆனால், படம் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை.
தாமதமாக வெளியானாலும் ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ படமும் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. எல்லாராலும் பேசப்பட்டன. பிறகு என் மீது நம்பிக்கை வைத்து விக்ரமன் ‘கோகுலம்’ படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதச் சொன்னார். சிற்பியின் இசையில் பாடல்கள் மெகா ஹிட்.
‘புதிய மன்னர்கள்’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை வரை என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தவர் விக்ரமன்தான். அந்தப் படத்தில் ‘நீ கட்டும் சேல மடிப்பில நான் கசங்கிப் போனேன்டி...’ என்கிற பாடல் மிகவும் பிரபலமாகி, பள்ளி, கல்லூரிகளின் ஆண்டு விழாக்களில் ஆடிப் பாடத் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
அந்த நாட்களில் நான் பணிபுரிந்த ‘அரங்கேற்றம்’ பத்திரிகையின் அச்சகம் தியாகராயர் நகர் ஹபிபுல்லா சாலையில் இருந்தது. அதே சாலையில் அண்ணன் அறிவுமதி இயக்கவிருந்த, ‘உள்ளேன் அய்யா’ படத்தின் அலுவலகமும் அமைந்தது. அந்த அலுவலகம், திரைப்பட வாய்ப்பு தேடி சென்னை வந்த இளைஞர்களுக்கு ஒரு வேடந்தாங்கல்.
நானும் என் பெரும்பாலான பொழுதுகளை அங்கே கழித்திருக்கிறேன். இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த சுந்தர்.சி, நண்பர் செல்வ பாரதியைச் சந்திக்க அங்கு வருவார். அந்நேரம் ‘முறை மாமன்’ படத்தை அவர் இயக்குவதாக இருந்தார். ‘புதிய மன்னர்கள்’ படத்தின் பாடல்கள் வெளியாகியிருந்த நேரம் அது. பாடல்கள் சுந்தர்.சிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது படத்திலும் வாய்ப்பு தருவதாகச் சொன்னார்.
சொன்னபடி ‘முறை மாமன்’ படத்தில் இரண்டு பாடல்களையும் அடுத்த படமான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் அள்ளித் தந்தார்.
1995ம் ஆண்டு இறுதியில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ வெளிவந்தது.வாலி, வைரமுத்து என்ற இரு ஆளுமைகளுக்கு இடையில் அந்தப் படத்தின் பாடல்கள் எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தின. அடுத்து 1996 ஆரம்பத்தில் விக்ரமனின் ‘பூவே உனக்காக’. இந்த இரண்டு படத்தின் பாடல்கள்தான் அந்தக் காலகட்டத்தில் எல்லா திசைகளிலும் ஒலித்தன. பத்திரிகையாளரா, பாடலாசிரியரா எனப் பரிதவித்த நான் முழுநேரப் பாடலாசிரியரானேன்.
1996, 97ம் ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ நாற்பது படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறேன். இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளி வந்த ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் பாடல்கள் தனி மரியாதையை ஏற்படுத்தின. அந்தப் பாடல்களுக்குத் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை அன்றைய முதல்வர் கலைஞர் கரங்களிலிருந்து பெற்றுக்கொண்டேன். கலைமாமணி விருது, கலைவித்தகர் கண்ணதாசன் விருது என அது தொடர்ந்தது.
இசைஞானி இளையராஜா ஒரு தந்தையின் அன்போடு, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘மனசெல்லாம்’, ‘ரமணா’, ‘பிதாமகன்’ போன்ற படங்களில் எனக்கு அளித்த வாய்ப்புகள் எனது புகழ் பெற்ற பாடல்களாக அமைந்துவிட்டன.
1991ல் ‘பெரும்புள்ளி’ படத்தில் தொடங்கிய எனது பாட்டுப் பயணம் ஆயிரம் பாடல்களுக்கு மேலாக நீண்டு கொண்டிருக்கிறது. எத்தனை இயக்குநர்கள், எத்தனை இசையமைப்பாளர்கள், எத்தனை பாடகர்கள், எத்தனை ரசிகர்கள்.... பாடல்கள் நிரம்பிய வாழ்க்கையை யாரால் நிராகரிக்க
முடியும்!
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
நன்றி: குங்குமம்
Comments