இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளர் என்ற பெருமைக்குரியவர் ஹோமை வியாரவல்லா
இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளர் என்ற பெருமைக்குரியவர் ஹோமை வியாரவல்லா.
ஹோமை வியாரவல்லா குஜராத்திலுள்ள நவ்சாரி பகுதியில், 1913 ம் ஆண்டு டிசம்பர் 9-தேதி பார்சி குடும்பத்தில் பிறந்தார். அதன் பிறகு மும்பையிலுள்ள சேவியர் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.
காலப் போக்கில் புகைப்படம் எடுப்பதில் சிறந்த நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். பெண்களை பள்ளிக் கூடத்திற்கே அனுப்பாத அந்தக் காலத்திலேயே மும்பையில் புகழ்பெற்ற ஜெ.ஜெ.ஆர்ட்ஸ் கல்லூரியில் பட்டயப் படிப்பைமுடித்தார். பள்ளிப் பருவத்தில் தனக்கு கேமரா கொடுத்து ஊக்குவித்த சக மாணவர் மானெக் ஷாவையே பிற்காலத்தில் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இங்கிலாந்து தூதரகத்தின் செய்திப் பிரிவில் போட்டோகிராபர் வேலை கிடைத்தது.
1942ம் வருடம் டெல்லிக்கு குடி பெயர்ந்த இவர் பிரிட்டிஷ் இன்ஃபர்மேஷன் சர்வீசஸில் பணிபுரிந்தார்.
இரண்டு தோள்களிலும் ‘ரோலி பிளக்ஸ்’ கேமராவை மாட்டிக் கொண்டு நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, காத்திருந்து அவர் படம் எடுத்தவிதம் அனைவரையும் ஈர்த்தது. இந்திய விடுதலைக்கு முன்பான ஆயத்த நிலையையும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலகம் மற்றும் கலவரங்களையும் துணிச்சலுடன் சென்று போட்டோ எடுத்தார். அந்தக் கலையில் அவருக்கிருந்த ஆர்வம் பலவிதமான ஆபத்துகளையும் எதிர்கொள்ளும் தைரியத்தை கொடுத்திருந்தது.
இந்தக் காலக்கட்டங்களில் மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் பிரபலமான புகைப்படங்களை எடுத்தார் ஹோமை.
ஹோமை, கணவரின் மறைவிற்கு பிறகு புகைப்படம் எடுப்பதை நிறுத்திக் கொண் டார். சுதந்திர இந்திய வரலாற்றை புகைப்படமாக ஆவணப்படுத்திக் கொடுத்த இவருக்கு போதுமான அங்கீ காரம் கிடைக்கவில்லை.
பின்பு தன் சொந்த ஊருக்கு சென்று எளிமையாக வாழ்ந்தார். அவர் வசித்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் தவிர யாருக்கும் இவரைத் தெரியவில்லை. தனிமையிலிருந்த ஹோமை, தன்னிடமிருந்த முக்கிய போட்டோக்களை எல்லாம் இனி இது யாருக்கும் பயனில்லை என கருதி வீதியில் தூக்கி எறிந்து விட்டார். பிறகு தனது செயலுக்காக தன் சுயசரிதையில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு காலம் கடந்து 2011-ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதை இவருக்கு வழங்கியது. அந்த நேரம் அவர் தன்னை புதுப்பித்துக் கொண்டதாக அறிவித்தார். அதன் பின்னர் 2012-ல் ஜனவரி 15ல் மறைந்தார். இந்தியா ஒரு நல்ல புகைப்படக் கலைஞரைச் சரியான நேரத்தில் கௌரவப்படுத்தத் தவறி விட்டது.
இணையத்தில் படித்தது
Comments