அணையாது சூரிய தீபம் எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம்
அணையாது சூரிய தீபம்🔥
*
எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம் மறைந்தார் எனும் செய்தியைப் படித்து அதிர்ச்சியுற்றேன்.
மண்ணையும் மக்களையும் எழுத்தில் வடித்தவர். ஒரு ஜெருசலேம், காடு, இரவுகள் உடையும் முதலான சிறுகதைத் தொகுதிகள் தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷங்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் படைத்தவர் பா. ஜெயப்பிரகாசம். அவரது ஒரு சிறுகதையின் தலைப்பு 'தாலியில் பூச்சூடியவர்கள்'. தெற்கத்தி மக்களின் பண்பாடு அது. ஒரு அழியாத ஓவியக் காட்சி அது. ஒரு காலகட்டத்தின் பதிவு அது.
ஒரு கதையில் கிழங்கு பறித்துச் சுட்டுத் தின்ன வயல்காட்டு மண்ணைத் தோண்டிக் கொண்டிருப்பார்கள் சிறுவர்கள். ஓரிடத்தைத் தோண்டும்போது 'அங்கு மட்டும் தோண்டாதே' என்று ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனோடு சண்டை போடுவான். அது அவன் அம்மாவை புதைத்த இடம்.
இப்படிக் கரிசல் மண்ணின் கண்ணீர் ஓவியங்கள் பலவற்றை வரைந்தவர் ஜெயப்பிரகாசம். நாட்டுப்புறத்தின் எளிய மனிதர்கள் இவர் உலகின் நாயகர்கள்.
கரிசல் பிதாமகர் கி.ரா.வால் கொண்டாடப்பட்ட எழுத்து பா. ஜெயப்பிரகாசம் அவர்களுடைய எழுத்து.
'சூரிய தீபன்' எனும் பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார்.
கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவின் போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் பனையூரில் கவிக்கோ இல்லத்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இப்போது அவரே மறைந்து விட்டார்.
முற்போக்கு இலக்கியத்தின் முன்னணி முகம் ஒன்று மறைந்துவிட்டது. இந்திய இலக்கிய வானில் ஒரு நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது.
ஆனால் அது ஏற்றிவைத்ததோ ஒரு சூரியதீபம். அது என்றென்றும் அணையாமல் ஒளிவீசும்.
இறந்த பிறகு தன் உடலைக் கூட மருத்துவ ஆய்வுக்காக அவர் வழங்கி இருப்பதாக அறிகிறேன். வாழும் போது மட்டும் அல்ல... சாகும்போதும் மக்களைச் சிந்திப்பவனே மகத்தான கலைஞன். பா. ஜெயப்பிரகாசம் அவர்களில் ஒருவர்.
அந்த மக்கள் கலைஞனுக்கு
என் மனதின் ஆழத்தில் இருந்து அஞ்சலி செலுத்துகிறேன்.
*
பிருந்தா சாரதி
Comments