மூட்டு நோய் ஏற்பட காரணங்கள், தீர்வுகள் | உலக மூட்டு நோய் தினம் சிறப்புப் பகிர்வு*
மூட்டு நோய் ஏற்பட காரணங்கள், தீர்வுகள் | உலக மூட்டு நோய் தினம் சிறப்புப் பகிர்வு*
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 12-ம் தேதி உலக மூட்டு நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மூட்டு நோய் ஏற்பட காரணங்கள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து பிசியோதெரபி மருத்துவரும், தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவ சங்க மாநில பொதுச்செயலாளருமான டாக்டர் ராஜேஸ் கண்ணா கூறியதாவது:
மூட்டு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளின் முனைகள் இணையும் பகுதியாகும். இது ஜவ்வால் இணைக்கப்பட்டு, தசைகளால் வலுவூட்டப்பட்டிருக்கும். இவை ஒன்றோடொன்று உரசாமல் இருக்க மூட்டு திரவம் உள்ளது. இது எலும்புகள் தேயாமல் இருக்க உதவுகிறது. ஆனால், இந்த திரவமானது 60 வயதுக்குமேல் குறையத் தொடங்குகிறது. அப்போது, முழங்கால் மூட்டு, எலும்புகளில் உராய்வு ஏற்பட்டு, எலும்புகள் தேயத் தொடங்கும்.
குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் ஹார்மோன்களில் உண்டாகும் மாற்றம், அதனால் மூட்டை சுற்றி உள்ள தசைகள் பலவீனமடைந்து பின்னர் சவ்வு சேதமடைகிறது. தசைகள் மற்றும் சவ்வுகளால் கடத்தப்படும் உடலின் எடை முழுவதும் முழங்கால் எலும்புகள் மூலமாகவே கடத்தப்படுவதால், மூட்டு திரவத்தின் அளவு குறைந்து உராய்வு ஏற்படுகிறது.
இதனால் மூட்டு தேய்ந்து நாளடைவில் முழுவதுமாக அதன் அமைப்பை இழந்துவிடுகிறது. மூட்டு வலி காரணமாக அடிப்படை தேவைகளுக்காககூட நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக நோயாளிகள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் தீர்வு என்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து பிசியோதெரபி சிகிச்சை எடுப்பதன் மூலம், மூட்டு தேய்மானத்தை தவிர்க்க முடியும். பிசியோதெரபி என்பது பக்கவிளைவில்லாத தனித்துவமான சிகிச்சை முறையாகும்.
இது, உடல் அசைவுகள் மற்றும் உயர்தர மின் உபகரணங்களால் உடலுக்கு வெளியே செய்யப்படும் சிகிச்சை என்பதால் பாதுகாப்பானது. இதன் மூலம் உடல் எடை குறைக்கப்பட்டு, முழங்கால் தசைகள் வலுவூட்டப்படுகிறது. மூட்டு உராய்வு குறைந்து, தேய்மானம் தடுக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் வலி இல்லாமல் வாழலாம். இளம்வயதில் மூட்டு நோய் வராமல் தடுக்க உயரத்துக்கு ஏற்றவாறு சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும். நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்தியமுறை கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். தரையில் அமர்ந்து உணவு அருந்த வேண்டும். பெண்கள் குதிகால் உயரமான காலணி அணிவதை தவிர்க்க வேண்டும். ராகி, பால், முட்டையின் வெள்ளைக் கரு, மீன் போன்ற கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்களை தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
: *
Comments