அன்பை அருளும் ஆனைமுகத்தோன்*
அன்பை அருளும் ஆனைமுகத்தோன்*
விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் குழந்தைகளின் கடவுள் அதனால்தான் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக காட்சி தருகிறார். வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடிய மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன்.
அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். இவரை எளிமையாக வழிபட்டாலே நமக்கு அருளை வாரி வணங்குவார். அதனால்தான் அருகம்புல்லையும், மூஞ்சூரையும் தனக்கு பிடித்தமானவையாக வைத்திருக்கிறார்.
ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப்பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.
ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் - O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் - இணைந்து 'உ' எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடித்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு....
Comments