தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29ம் தேதி தொடங்கும்: வானிலை மையம் அறிவிப்பு*
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29ம் தேதி தொடங்கும்: வானிலை மையம் அறிவிப்பு*
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை 29ம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேநாளில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத காரணத்தால் தான் வடகிழக்கு பருவமழை தொடங்குவது தள்ளிப் போவதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான புயல் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக் கடல் வழியாக மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து விட்டது. இந்த நிகழ்வின் காரணமாக தீபாவளி பண்டிகையின்போது பெய்யும் மழையும் இந்த ஆண்டு பொய்த்துவிட்டது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 29ம் தேதி தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 27, 28ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 29ம் தேதி முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும்.
இதையடுத்து, 30ம் தேதியன்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை ஒத்திப்போவதன் காரணமாக குறைவான மழை பெய்யும் வாய்ப்பு ஏதும் இல்லை. கடந்த ஆண்டுகளில் நவம்பர் மாதங்களில் பெய்த மழையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வங்கக் கடல் பகுதியில் வலுவான புயல்கள் உருவாகும் வாய்ப்புள்ளதால், நவம்பர் மாதம் நல்ல மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடாப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் மீனவர்கள் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்....
Comments