வள்ளலார்_200 * / பிருந்தா சாரதி *
வள்ளலார்_200
*
பிருந்தா சாரதி
*
வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளின் 200 வது பிறந்தநாள் இன்று .
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ' என்று பாடியவர் வள்ளலார்.
பயிருக்கே வருந்தியவர் மனித உயிர்களுக்குப் பசிப் பிணி என்றால் எப்படித் துடித்திருப்பார்?
வடலூரில் தரும சாலை அமைத்து அணையா அடுப்பை மூட்டிப் பசி என்று வந்தவருக்கெல்லாம் அன்னமிட்டார் அணையா விளக்காய் ஆனவர்.
சடங்குகள் மறுத்து அங்கேயே
'சத்திய ஞான சபை' கண்டார் இன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர் போல் கண்ட இனியவர்.
நாட்டில் பல இடங்களில் பசி போக்கும் தர்ம சாலைகள் அமைத்து அவரது அடுப்பை அணையாமல் காக்கிறார்கள் இன்றும் அவரைப் பின்பற்றும் பலர் .
அவரது 'திருவருட்பா'வில் இருந்து சில வரிகளையேனும் இன்று படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. கையில் நூல் இல்லை. ஆகவே அவரது பாடல்களைக் கூகுளில் தேடி இரண்டை மட்டும் இன்று படித்தேன்.
செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை இரண்டையும் எப்படிப் பட்டியல் போட்டிருக்கிறார் ? எளிமையும் இனிமையும் கலந்த ஆன்மீக இலக்கியம்.
தமிழ் இலக்கியத்திற்கும் அன்னமிட்டிருக்கிறது அந்த அருட்பெருஞ்ஜோதி.
பாரதிக்கு முன்பே
இறுக்கமான செய்யுள் நடையில் இருந்து கவிதையை எளிய நடைக்கு மாற்றியதில் வள்ளல் பெருமானுக்கு பெரும் பங்கு இருக்கிறது .
அவரது ஆன்மீகம் வணங்குவதற்குரியது; சமுதாயப்பணி போற்றுதற்குரியது; இலக்கியப் பணி ஈடு இணையற்றது.
பசியை ஒழிக்கப் பாடியவன் கவிஞனாகலாம். அதை ஒழிக்கப் பாடியதோடு மட்டும் நிற்காமல் பாடும் பட்டதால் இராமலிங்கர் வள்ளலார் ஆனார்.
வள்ளல் பெருமானை நினைத்தாலே நெஞ்சம் நெகிழ்கிறது. அவரது வரலாற்றையும் அவர் படைத்தளித்த திருவருட்பாவையும் இனியேனும் வாசிக்க வேண்டும்.
சடங்குகளை மறுத்த அந்த சன்மார்க்கரை
அவரது இந்த 200 -வது பிறந்தநாளில் கைகூப்பித் தொழுது வணங்குகிறேன்.
*
கீழே அவரது இரு செய்யுள்கள் இன்றைய வாசிப்புக்கு.
மிக எளிய பாடல் வரிகள்... ஆனால் ஒவ்வொரு வரியும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிகள்.
*
'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!'
- திருவருட்பா
*
'நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!'
( மனுமுறை கண்ட வாசகம்)
*
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
*பிருந்தா சாரதி
Comments