108 வைணவ திவ்ய தேச உலா - 40 | சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்*
8
வைணவ திவ்ய தேச உலா - | சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்*
108 வைணவ திவ்ய தேசங்களில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில், 40-வது திவ்ய தேசமாகப் போற்றப்பட்டுள்ளது. இக்கோயில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உள்ளேயே அமைந்துள்ளது.
குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருமங்கையாழ்வார் பாசுரம்:
காயோடு நீடு கனியுண்டு வீசு
கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவஞ் செய்ய வேண்டா
திருமார்பனைச் சிந்தையுள் வைத்து மென்பீர்
வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
மூலவர்: கோவிந்தராஜர் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்)
உற்சவர்: தேவாதிதேவன்
தாயார்: புண்டரீகவல்லி
தீர்த்தம்: 12 தீர்த்தங்கள்
விமானம்: சாத்வீக விமானம்
ஆகமம்: வைகானஸம்
தலவரலாறு
கைலாயத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் நடனம் புரிந்த பிறகு, இருவருக்குள் யார் சிறப்பாக ஆடியது என்ற சந்தேகம் அவர்களுக்குள் எழுந்தது. இதுதொடர்பாக பிரம்மதேவரிடம் கேட்டபோது, அவர் சரியாக தீர்ப்பு அளிக்கவில்லை. அதனால் இருவரும், தீர்ப்பளிக்கும்படி திருமாலிடம் கேட்டுக் கொண்டனர்.
திருமால், தேவ சிற்பி விஸ்வகர்மாவை அழைத்து சித்திர சபையை அமைத்து, அதில் நடனப் போட்டியை வைத்துக் கொள்ளப் பணித்தார். இதைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடனப் போட்டி நடைபெற்றது. இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சும்படி ஆடிக் கொண்டிருந்த சமயத்தில், சிவபெருமான் தனது வலதுகாலைத் தூக்கி தலைக்கு மேலே நிறுத்தினார்.
பார்வதி தேவியால் அவ்வாறு செய்ய இயலவில்லை. அதனால் சிவபெருமான் வெற்றி பெற்றதாக திருமால் அறிவித்தார். பின்னர் சிவபெருமான், நடராஜப் பெருமானாக எழுந்தருளினார். திருமாலையும் இத்தலத்தில் எழுந்தருளச் செய்தார். திருமாலும் பள்ளி கொண்ட கோலத்தில் இத்தலத்தில் கோயில் கொண்டார்.
புண்டரீகவல்லி தாயார்
அசுர குலத்தைச் சேர்ந்த தில்லி என்பவள், வனங்கள் நிறைந்த வனமாக இருக்க விரும்பினாள். மேலும் அந்த வனத்தில் திருமால் எழுந்தருள வேண்டும் என்றும் விரும்பினாள், தனது எண்ணத்தை நிறைவேற்றும்படி திருமாலிடம் வேண்டினாள். திருமாலும், அவளை தில்லை மரங்களாக இருக்கச் செய்து, அவளது எண்ணப்படியே பள்ளி கொண்ட பெருமாளாக எழுந்தருளினார். தில்லை நகர் என்று அழைக்கப்பட்ட அவ்விடத்தில் தாயார் புண்டரீகவல்லி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் பெருமாளின் பாதங்களுக்கு நேராக தாயாரின் திருவடிகள் உள்ளன.
கோயில் அமைப்பும் சிறப்பும்
சாத்வீக விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் உற்சவர் தேவாதி தேவன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார், மற்றொரு உற்சவரான சித்திரக்கூடத்துள்ளான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சித்ர சபையில் நடராஜர் சந்நிதி அருகே கோவிந்தராஜப் பெருமாள் கொடிமரத்துடன் தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறார். பெருமாள் சந்நிதிக்கு முன் மண்டபத்தில் இருந்து பார்த்தால், நடராஜர், கோவிந்தராஜர், அவரது நாபிக் கமலத்தில் இருக்கும் பிரம்மதேவர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடைபெற்ற நடனப் போட்டிக்கு தீர்ப்பு சொல்லும் சபையில் திருமால் இருந்தபோது, அவருக்கு மரியாதை தரும்விதமாக இத்தலத்தில் பிரம்மதேவர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலமான இங்கு திருமால் ஆகாயத்தைப் பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்பு.
பதஞ்சலி சந்நிதி
ஆதிசேஷனுக்கு சிவபெருமானின் தாண்டவ நடனத்தைக் காண வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தனது விருப்பத்தை திருமாலிடம் தெரிவித்தார் ஆதிசேஷன். அதையேற்ற திருமால், சிவபெருமானின் தாண்டவத்தையும் திருவிளையாடல்களையும் காண்பதற்காக ஆதிசேஷனை அனுப்பி வைத்தார். இத்தகவல் சிவபெருமானுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு சிவபெருமான், தான் பூலோகத்தில் தில்லை வனத்தில் காட்சியளிக்க உள்ளதாகவும், அதைக் காணும் பொருட்டு, அத்திரி மகரிஷியின் மகனாக வளர்ந்து வருமாறு ஆதிசேஷனைப் பணித்தார்.
அதன்படி அத்திரி மகரிஷி ஆற்றில் நீராடும் சமயத்தில் ஐந்து முகங்கள் கொண்ட குழந்தையாக, மகரிஷியின் கைகளில் தவழ்கிறார். மகரிஷி குழந்தைக்கு ‘பதஞ்சலி’ என்று பெயரிட்டு வளர்க்கிறார். அத்திரி மகரிஷி, வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) இருவரும், சிவபெருமானின் தாண்டவத்தைக் காண, தவம் இயற்றினர். அவர்களோடு சேர்ந்து பதஞ்சலியும் தவம் புரிந்தார். மூவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், வியாழக்கிழமையுடன் கூடிய தைப்பூச தினத்தில் ஆனந்த தாண்டவத்தை அருளினார். அப்படியே கோவிந்தராஜப் பெருமாளையும் வணங்கி மோட்சம் பெற்று பாற்கடல் திரும்பினார் பதஞ்சலி முனிவர்.
இடுப்புவரை மனித உடல், இடுப்புக்கு கீழே நாகத்தின் உடல், தலைக்கு மேல் குடையாக ஐந்து தலை நாகம் என்ற தோற்றம் கொண்ட பதஞ்சலி முனிவருக்கு இத்தலத்தில் தனிச்சந்நிதி உண்டு. ஆதிசேஷன் அம்சம் என்பதால் பதஞ்சலி முனிவரின் வாயில் கோரைப் பற்கள் உள்ளன.
மோட்சம் அளிக்கும் தலம்
கலிங்க நாட்டு அரசன் கவேரனின் மகள் லோபாமுத்திரை, அகத்திய முனிவரை மணந்து கொண்டார், மனைவியை காவிரி நதியாக மாற்றினார் அகத்திய முனிவர். தினமும் கவேரனும் அவரது மனைவியும் காவிரியில் நீராடினர்.
தங்களுக்கு மோட்சம் கிடைக்கும் வழியைக் கூறுமாறு பெற்றோர், மகளிடம் கேட்டபோது, தில்லை சென்று பெருமாளை தரிசித்தால் எளிதில் மோட்சம் கிட்டும் என்று பெற்றோரிடம் கூறினார் லோபாமுத்திரை (காவிரி). அதன்படி இருவரும் இத்தலத்துக்கு வந்து பெருமாளை வழிபட்டபோது, திருமால் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி கொடுத்து மோட்சம் அருளினார்.
திருவிழாக்கள்
சித்திரையில் 10 நாட்கள் வசந்த உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச விழா நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழாவில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் செய்யப்படும். வேண்டிய அனைத்திலும் வெற்றி பெற, நீதி தவறாமல் இருக்க இத்தலத்தில் வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
*
Comments