கு.அழகிரிசாமி (Ku.Alagirisami) பிறந்த தினம்
சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரும் இலக்கியத்தின் அனைத்துக்களங்களிலும் முத்திரை பதித்தவருமான கு.அழகிரிசாமி (Ku.Alagirisami) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 23).
*தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் பிறந்தார் (1923). கோவில்பட்டியில் ஏ.வி. பள்ளியிலும் வ.உ.சி. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
*பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகச் சேர்ந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் இளமைக்கால நண்பர். வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன், புதுமைப்பித்தன் ஆகியோர் இவரது சமகால எழுத்தாளர்கள். முதன் முதலாக இவர் எழுதிய ‘உறக்கம் கொள்ளுமா’ என்ற கதை ‘ஆனந்த போதினி’ பத்திரிகையில் வெளிவந்தது. இதற்கிடையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது.
*எழுத்து மீது கொண்ட ஆர்வத்தால் அரசாங்க வேலையை உதறிவிட்டுச் சென்னைக்கு வந்தார். ‘ஆனந்த போதினி’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். 1944 முதல் 1952 வரை சென்னையில் ‘பிரசண்ட விகடன்’, ‘தமிழ்மணி’, ‘சக்தி’ ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1952-ல் வெளிவந்தது.
*உலகப் புகழ்பெற்ற நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். மக்சிம் கார்க்கியின் நூலை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் இவர்தான். ‘ராஜா வந்தார்’ என்ற இவரது கதை பல இந்திய மொழிகளிலும் ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1952-ல் ‘தமிழ்நேசன்’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்று மலேசியா சென்றார். அங்கிருந்த ஐந்தாண்டுகளில் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளை அறிமுகப்படுத்தினார்.
*இவர் எழுதிய ‘கவிச்சக்ரவர்த்தி’, ‘வஞ்ச மகள்’ ஆகிய நாடகங்கள் மலேசியாவில் உயர்நிலைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகத்திலும் பாடப் புத்தகங்களாக இடம்பெற்றுள்ளன. 1957-ல் சென்னை திரும்பிய இவர், மூன்றாண்டுகள் காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்தார். 1963-ல் ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார்.
*ராஜா வந்தார், டாக்டர் அனுராதா, தீராத விளையாட்டு, வாழ்க்கைப் பாதை, காளிவரம், மக்சிம் கார்க்கியின் நூல்கள், லெனினுடன் சில நாட்கள், விரோதி, தவப்பயன், வரப்பிரசாதம், துறவு, நான் கண்ட எழுத்தாளர்கள் உள்ளிட்ட படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
*கடிதங்கள் எழுதுவதை ஒரு கடமையாகவே செய்துவந்தார். இவர் எழுதிய கடிதங்களை ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற தலைப்பில் கி.ராஜநாராயணன் ஒரு நூலாக வெளியிட்டார். 1970-ல் ‘சோவியத் நாடு’ இதழில் பணிபுரிந்தார். சுந்தர ராமசாமிக்கு இவர் எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
*இவரது மறைவுக்குப் பின் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவரது சிறுகதைகளைத் தொகுத்து சாகித்ய அகாடமி வெளியிட்டது. பழ.அதியமானை பதிப்பாசிரியராகக் கொண்டு இவரது அனைத்துச் சிறுகதைகளையும் காலச்சுவடு பதிப்பகம் செம்பதிப்பாக 2011-ல் வெளியிட்டது.
*ஆசிரியர், பத்திரிகையாளர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர், மொழி பெயர்ப்பாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட கு.அழகிரிசாமி 1970-ம் ஆண்டு தனது 47-வது வயதில் மறைந்தார்.
Comments