ஈ ரோடு தொண்ணூறு தாண்டி நூறையும் கடக்கும்

 


ஈ ரோடு தொண்ணூறு தாண்டி நூறையும் கடக்கும் '

*

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு 

அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.

*

ஈரோடு தமிழன்பன் 90

*

தமிழ் புதுக்கவிதையின் தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். 


கவிதையின் எல்லா வடிவங்களையும் பரிசோதித்த முன்னோடிக் கவிஞர் . 


மரபு, புதுமை , ஹைகூ , கஸல், குறும்பா என வடிவ சோதனைகளை நிகழ்த்திக்கொண்டே இருப்பவர்.


அவருடைய 'நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்', 'தீவுகள் கரையேறுகின்றன', 'காலத்துக்கு ஒரு நாள் ஒன்றில் முந்தி', 'சூரியப் பிறைகள்' போன்றவை எல்லாம் என் ஆரம்பகாலப் பாட நூல்கள் என்றே சொல்லலாம். 


"பத்தாவது முறை விழுந்தவனுக்கு முத்தமிட்டுச் சொன்னது பூமி 

ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ."


'சூரியப் பிறைகளி'ல் இடம்பெற்றிருக்கும் புகழ்பெற்ற இந்தக் கவிதை தன்னம்பிக்கை நூல்கள் தருகிற கற்பனைத் தன்னம்பிக்கைகளைவிட இயல்பான , நடைமுறை சார்ந்த ஊக்க மருந்து. 


"புகை பிடித்தால் இறப்பாய் 

மது குடித்தால் இறப்பாய் 

இரண்டும் விற்றால் வாழ்வில் சிறப்பாய்,"


என்ற நையாண்டி கவிதை இன்றைய நாட்டு நிலையை சுருக்கென சுட்டிக்காட்டும் ஒன்று.


"இறைவனைத் தேட மதங்கள் மார்க்கங்கள் என்றால் 

மனிதனைத் தேட எது மார்க்கம்?"


என்பது மதங்களை தாண்டிய அவரது மனிதத் தேடல்.


"போராட்டம் ஆர்ப்பாட்டம் கிளர்ச்சி என்று காயம்பட்டுக் கதறியபடி முள் காட்டில் ஓடி வருகிற உனக்கு பூங்காக்களின் முகவரிகள் தெரியாதா?"


என்பது 24 மணி நேரமும் பரபரப்பான செய்திகளை கூறும் ஊடகங்களின் முன் அவர் வைக்கும் கேள்வி.


"ஊரில் ஒருவர் 

நகர் மன்ற உறுப்பினர் ஆனார் 

எம்எல்ஏ ஆனார் 

மந்திரி ஆனார் 

ஆனால் மனிதராகும் முன்பே மரித்துப் போனார்"


அரசியலில் மனிதத்தைத் தொலைத்த அரசியல்வாதிகளைப் பற்றிய அவரது சித்திரம் இது .


சூடான கவிதைகளை மட்டுமல்ல சுகமான கவிதைகளும் நிறைய எழுதியிருக்கிறார்.


'நீ ஊதி அணைத்தால் நான் அணைந்துவிடச் சம்மதிக்கிறேன்'


மென்மையான இதுபோன்று நிறைய காதல் கவிதைகளும் அவர் தொகுப்புகளில் காணமுடியும்.


"உடைகின்ற கண்ணாடிப்    

பாத்திரமும் நானே

உடைக்கின்ற கல்மனதின் 

ஆத்திரமும் நானே... "


இது 'கஜல் பிறைகள்' நூலில் அவர் வரைந்து கொண்ட தற்படம்.


இன்றும் சளைக்காமல் இளம் கவிஞர்களோடு போட்டிபோட்டு முகநூலில் கவிதை எழுதி வருகிறார்.


"ஒருபறவை

இறந்தபோது

வானம்

காற்றிடம்

துக்கம் விசாரித்தது


காற்று

கூட்டின்வாசலில்

குஞ்சுகளைத் 

தேற்றிக் கொண்டிருந்தது

அப்போது"


அண்மையில் முகநூலில் அவர் எழுதிய கவிதை இது.


ஹைகூ கவிதை நூல்கள் எழுதியது அல்ல... ஹைகூ அறிமுக  நூல்களை எழுதியும் ,  விளக்க உரைகள் நிகழ்த்தியும்

எண்ணற்ற ஹைகூ கவிஞர்கள் உருவாகத் தூண்டுகோலாக இருந்திருக்கிறார்.


அதேபோல மிகச் சிறந்த சொற்பொழிவாளர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

ஒரு உரை எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை கற்க வேண்டுமென்றால்  தமிழன்பன் அவர்களின் உரையை நேரில் கேட்க வேண்டும். எடுத்துக் கொண்ட தலைப்பின் மையப்  பொருளை ஆழ அகலமாகவும், நீள உயரமாகவும் பலப்பல பரிமாணங்களில் அடுக்கடுக்காக விரித்து எடுத்துச் செல்லும் அவரது ஆற்றல் மலைப்பை ஏற்படுத்தும் . ஒரு கவிதைக்கு எத்தனை பொருள்களா என்று வியக்க வைக்கும்.


அவரது உச்சரிப்பைக் கேட்டால் தமிழ் எவ்வளவு  அழகான , இனிமையான மொழி  என்பதை எந்த மொழிக்காரரும் ஏற்றுக்கொள்வர்.


மேடையில் நேர்த்தியாகத் தோன்றுவார். 

சட்டையை இன் செய்து ஒரு கல்லூரிப் பேராசிரியரின் கண்ணியமான தோற்றத்தில் கனிவும் கம்பீரமும் ஆகத் தோற்றமளிப்பார் . 


சளைக்காமல், சோர்வின்ங நின்றுகொண்டு ஒரு மணி நேரம் சொற்பொழிவு நடத்துவார்ர். உலக இலக்கியமே அதில் சுழன்றடிக்கும். தமிழ் மேடைகளில் சிலி நாட்டுக் கவிஞனான பாப்லோ நெருடாவை இவரளவுக்கு வேறு யாரும் பேசியிருப்பார்களா என்பது சந்தேகமே. பாப்லோ நெருடா கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார்.


அவரது கவியரங்கக் கவிதை பாணியும் கேட்கக் கேட்கச் சலிக்காத ஒன்று. கவிதையின் பொருள் முழுவதுமாகப் பார்வையாளரைச் சேரும்படிப் படிப்பார். புதுமையான கற்பனை, இதமான சொல்லாடல்கள், அழகான, எளிமையான படிமங்கள் எல்லாம் கலந்த சொற்ப் பின்னலைக் கணீரென்ற அவருடைய  அவருடைய குரலில் உச்சரிக்கையில் மேடையில் ஒரு மேகத்தின்  நாட்டியம் கண்ணில் தெரியும். இடி , மின்னல், மழை  எல்லாம் நம் புலன்களைக் கைப்பற்றி அதற்குள் நம்மை ஒருமுகப்படுத்திவிடும். 


நான் கல்லூரியில் படித்தபோது  அனைத்துக் கல்லூரிகளுக்கான கம்பன் கழகக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அதில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்தான் நடுவராக இருந்தார் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.


அதேபோல நான் வசனம் எழுதிய முதல் படமான 'ஆனந்தத்தி'ற்கு சென்சார் போர்டு உறுப்பினராகவும் ஈரோடு தமிழன்பன் அவர்கள் வந்திருந்தார். அப்போதெல்லாம் அவருக்கும் எனக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் என் வாழ்வின் முக்கியமான இரண்டு நிகழ்வுகளில்  என்னை அறியாமலேயே அவர் இருந்திருக்கிறார். இது நான் அவர் மீது கொண்ட மதிப்பிற்கும் அன்பிற்கும் கிடைத்த ஒரு பரிசு என்றே நினைத்துக் கொள்கிறேன்.


கும்பகோணத்தில் நடைபெற்ற

தமிழ் ஹைகூ நூற்றாண்டு நிறைவு விழாவில்  என் 'மீன்கள் உறங்கும் குளம்' ஹைக்கூ நூலை வெளியிட்டு ஹைக்கூ குறித்த நீண்ட உரை நிகழ்த்தினார் . 


என்னுடைய 'இருளும் ஒளியும்' நூலுக்கு அணிந்துரை தருமாறு வேண்டியபோது பல்வேறு பணிகளுக்கு இடையில் அற்புதமான அணிந்துரையை வழங்கினார். அதில் இத்தாலிய கவிஞன் 'அங்கரோட்டி' என்பவரின் கவிதையை எல்லாம் மேற்கோள்காட்டி எழுதியிருந்தது அவர் என்மீது காட்டிவரும் அன்புக்கான சாட்சி.


'வணக்கம் வள்ளுவ' என்ற நூலுக்காக 'சாஹித்ய அகடமி' விருது,  தமிழக அரசின் கலைஞர் கருணாநிதி செம்மொழி அறிஞர் விருது, கலைமாமணி விருது  மற்றும் 

அமெரிக்க  வாழ் தமிழ் மக்களின் அமைப்பான 'ஃபெட்னா' வழங்கும் உலகத் தமிழ்ப்பீட விருது,

கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழகம் வழங்கும் 'நாவலர் நெடுஞ்செழியன் தகைசால் இலக்கிய விருது' முதலிய எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்.


90-ஆம் பிறந்தநாள் காணும் ஒரு மூத்த கவிஞருக்கு அவரைப் பின் தொடரும் ஒரு கவிஞனின் அன்பு வாழ்த்துக்கள். 'ஈ ரோடு தொண்ணூறு தாண்டி நூறையும் கடக்கும் '


உடல் நலனும் மனவளமும் குன்றாமல் வழக்கமான மலர்ச்சியோடு அவர் தன் பயணத்தைத் தொடர பணிவோடு வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

*

அன்புடன் ,

பிருந்தா சாரதி


*

#ErodeThamilanban90

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி