சாய்வு நாற்காலி படைப்பாளி தோப்பில் முகமது மீரான் பிறந்த நாளின்று
சாய்வு நாற்காலி படைப்பாளி தோப்பில் முகமது மீரான் பிறந்த நாளின்று
கன்னியாகுமரி மாவாட்டம் தேங்காய் பட்டினத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதி உள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். அவரது ஒரு கடலோர கிராமத்தின் கதையை வாசிக்காமல் யாரும் இலக்கிய பயணத்தை கடந்து செல்ல முடியாது. துறைமுகம், கூனன் தோப்பு, அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம், சாய்வு நாற்காலி உள்ளிட்ட நாவல்களையும், பல சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
நெல்லை மாவட்டம் திருநெல்வேலி நகர் பேட்டையில் வசித்து வந்த இவர், 2019 மே 10 வெள்ளி, அதிகாலை 1:20 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார்.
இவர் எழுதியவை பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் கதைகள். ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப் போவது இவருடைய எழுத்தின் சிறப்பு. இவருடைய கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் மனோபாவங்களை , பச்சையிலை வாசம் கமழும் கிராமச் சூழலில் நகரநாகரீகம் புகுந்து முகங்களில் சாயம் பூசி விடப்பட்ட மனிதமனங்களின் ஆழங்களை எல்லாம் மிகத் துல்லியமாகத் துழாவி எழுத்தால் உருமாற்றிக் காட்டுகின்றன இவருடைய எழுத்துக்கள்.
Comments