தியாகிகள் சிந்திய ரத்தம் வீண் போகாது:

 


தியாகிகள் சிந்திய ரத்தம் வீண் போகாது:

வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம்!


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு மடல்


என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே...!


தமிழ்நாட்டில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட  பாட்டாளி மக்கள், தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக காவல்துறையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதன் 35-ஆவது நினைவு நாள் நாளை. இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில்  ஈடு இணையற்ற தியாகம் செய்த, காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் மார்பில் தாங்கிய இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்கள் 21 பேருக்கும் நான் எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன்.


வன்னியர்கள் வானத்தை வளைத்து வில்லாக்கித் தரும்படி கேட்கவில்லை... வாழ்வதற்கு வழிகாட்டும்படி  தான் கேட்டார்கள். தமிழ்நாட்டின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்பவர்களாகவும், நிலவுடைமை சமூகமாகவும் வாழ்ந்த அவர்கள், சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு, மற்றவர்களிடம் பணி செய்து பிழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் வீழ்த்தப்பட்டதற்கு காரணம் அவர்களுக்கு கல்வி கிட்டாததது தான். எதிர்காலத் தலைமுறையினராவது முன்னேறுவதற்கு வசதியாக கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்குங்கள் என்று தான் அவர்கள் கோரினார்கள். ஆனால், அவர்களின் மீதேறி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள், அவர்களுக்கான சமூக நீதியை வழங்க மறுத்தார்கள். அதனால், ஆண்ட சமுதாயம், அடித்தட்டு சமுதாயமாகவே வாடியது.


அந்த நிலையிலிருந்து வன்னிய சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டும்; கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்குடன் தான் பிரிந்து கிடந்த அமைப்புகளையெல்லாம் ஒன்று திரட்டி, வன்னியர் சங்கத்தை கட்டமைத்தோம். அதன்பிறகு அடுத்த 7 ஆண்டுகளுக்கு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதம், ஒரு நாள் சாலைமறியல், ஒரு நாள் தொடர்வண்டி மறியல் என ஏராளமான போராட்டங்களை நடத்தியும் நமது கோரிக்கை குறித்து பேச்சு நடத்தக்கூட ஆட்சியாளர்கள் முன்வராததால் தான் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் ஒருவார கால தொடர்சாலை போராட்டத்தை அறிவித்தோம். உரிமை கேட்டு நாம் நடத்திய போராட்டத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு, கொடூரத் தாக்குதல்கள் ஆகியவற்றில் 21 சொந்தங்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தனர்.


பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம்,  சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன்,  பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பாட்டாளிகளும் செய்த தியாகம் ஈடு இணையற்றது. அவர்களுக்குப் பிறகும் பலர் நமது சமூகநீதிப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் நாம் இன்று மட்டுமின்றி, என்றும் போற்ற வேண்டும்.


தொடர் சாலைமறியல் போராட்டத்திற்கு பிறகு தான் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அழைத்து பேசினார். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் நம்மை அழைத்துப் பேசி 108 சமுதாயங்களை இணைத்து  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார். அதிலும் நமக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில் தான் 2020-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு போராட்டத்தைத் தொடங்கினோம். அதன் பயனாக 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. அதன்பின் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு நமது சமூகநீதி பயணத்தில் வெற்றி ஆண்டாக அமைந்தது. அதனால், கடந்த ஆண்டு  இட ஒதுக்கீட்டு ஈகியர்களின் நினைவு நாளில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தினோம்.


காலம்காலமாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த சமுதாயம், போராடி, உயிர்த்தியாகம்  செய்து சமூகநீதியை வென்றெடுத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட 50 அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நீதிமன்றமும் சட்டத்தின்படியாக அல்லாமல், உணர்வுகளின் அடிப்படையில் வழக்கை விசாரித்து வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று  தீர்ப்பளித்தது. அப்போது நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதி.... ‘‘எப்பாடு பட்டாலும் வன்னியர்களுக்கான  இட ஒதுக்கீட்டை மீண்டும் வென்றெடுத்துக் கொடுக்காமல் ஓயமாட்டேன்’’ என்பது தான். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத் தான் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ஓயாமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.


வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நானே மேல்முறையீடு செய்தேன். தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வன்னியர் ஒட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் உயிர்கொடுக்க போராடியது. உச்சநீதிமன்றமும் நமது மேல்முறையீட்டு மனுக்களை ஆய்வு செய்து, வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் முன்வைத்திருந்த 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறானவை என்று தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தவித தடையும் இல்லை; அதற்கான சட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டது.


உச்சநீதிமன்றத் தீர்ப்பு மார்ச் மாதத்தின் இறுதி நாளில் வந்த நிலையில், உச்சநீதிமன்றம் வழி காட்டியவாறு புதிய சட்டத்தை இயற்றச் செய்து, வன்னியர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நமது தரப்பில் உள்ள நியாயத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஏற்றுக் கொண்டு, வன்னியர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதை தமிழக சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் வாக்குறுதியாக அளித்திருக்கிறார். நமக்கும் நம்பிக்கை உள்ளது.


ஆனாலும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தரை மாதங்கள் கடந்து விட்டன; மருத்துவக் கல்வி, பொறியியல் படிப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு  இல்லை; கடந்த 10 மாதங்களில் அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்  இட ஒதுக்கீடு இல்லை என்ற உங்களின் கவலைக்குரல்கள் என் காதுகளை எட்டாமல் இல்லை. உங்கள்  கவலைகளை நானும் உணர்கிறேன். அதைப் போக்க அனுதினமும் அயராமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.


கேட்டவுடன் கிடைத்து விடுவதற்கு சமூகநீதி ஒன்றும் சுக்கோ, மிளகோ அல்லவே. அதற்காக பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் கடந்து தான் வன்னியர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க முடியும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளில் நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன் என்பதை மட்டும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்.


கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற வேட்கையின் காரணமாகத் தான் 21 ஈகியர்கள் ஒரே போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தனர். அவர்கள் சிந்திய ரத்தம் ஒருபோதும் வீண்போகாது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றேடுத்தே தீருவோம். இந்த உணர்வுடன் நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளில் நமது இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்; அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து வீர வணக்கம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

-- மருத்துவர் இராமதாஸ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி