பகத்சிங்


பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 27, 1907

இடம்: பங்கா (லயால்பூர் மாவட்டம்), பஞ்சாப், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

இறப்பு: மார்ச் 23, 1931

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘சாஹீது பகத்சிங்’ என அழைக்கப்படும் ‘பகத்சிங்’ அவர்கள், 1907  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27  ஆம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள “பங்கா” என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

பகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார். லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்த கொடூரமான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.

விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு

தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். ‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்தார். 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.

லாகூர் கொலை வழக்கு

1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார். இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். 

இறப்பு

சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர். அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளைக் கடந்து சுமந்து நிற்கும்.




 லாகூர் சிறையில் பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய சில மணி நேரங்களை எப்படி கழித்தார்?

அதிகாரபூர்வ உத்தரவின்படி மார்ச் 24 அன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
ஆனால் மார்ச் 23 ஆம் தேதி மாலையே தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஏனெனில் சிறைச்சாலை தாக்கப்படலாம் என்று பிரிட்டிஷ் அரசு பயந்தது.
23ம் தேதி காலை பகத்சிங், பிராண்நாத் மேத்தாவை அழைத்து புத்தகம் கொண்டு வருமாறு கூறினார். அது வி.இ.லெனின் எழுதிய நூல் என கூறப்படுகிறது.
உயிலில் கையொப்பம் பெறவேண்டும் என்ற காரணம் காட்டி பிராண்நாத் மேத்தா, பகத் சிங்கை சந்தித்தார்.
பகத் சிங், பிராண்நாத் மேத்தாவிடமிருந்து புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, அதிகம் பேசாமல் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார்.
மார்ச் 24 ஆம் தேதி தூக்கிலிடப்படுவதற்கு முன்பு புத்தகத்தை படித்து முடித்துவிடலாம் என்று பகத் சிங் நினைத்தார். ஆனால் மார்ச் 23 அன்று அவரை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிறை ஊழியர் போகாவின் கையிலிருந்து உணவு உண்ண வேண்டும் என்று தனது கடைசி ஆசையை பகத் சிங் தெரிவித்தார்.
பகத்சிங் அவரை 'பேபே' (பஞ்சாபியில் தாய் என்று பொருள்) என்று அன்புடன் அழைப்பார். இது போகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
குழந்தையின் மலம், சிறுநீரை தாய் மட்டுமே சுத்தப்படுத்துவாள். இதன்படி பார்த்தால் போகா 'பேபே' தானே என்று அப்போது பகத் சிங் அன்புடன் சொல்வார்.
தான் ஒரு தலித் என்பதால், உணவு கொடுக்க போகா மறுத்தார். அவ்வாறு செய்வது 'பாவம்' என்று அவர் நினைத்தார்.
பின்னர் போகா உணவு கொண்டு வர சம்மதித்தார். ஆனால் உணவு வருவதற்குள் பகத்சிங் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
புறப்படுவதற்கு முன் பகத் சிங் புத்தகத்தில் தான் படித்த கடைசி பக்கத்தை மடித்துவைத்தார்.
பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் லாகூரில் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் ஃபெரோஸ்பூரில் உள்ள ஹுசைனிவாலாவில் இறுதிச் சடங்குகள் ஏன் நடத்தப்பட்டன?
லாகூர் சிறைச்சாலைக்கு பக்கத்து கிராமம் இச்ரான். அதே கிராமத்தில் பிரபல பஞ்சாபி கவிஞர் ஹரிபஜன் சிங்கின் குடும்பமும் வசித்து வந்தது.
பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்கிலிட அழைத்துச் செல்லப்பட்டபோது, அந்த கிராமம் வரை கைதிகளின் இன்குலாப் ஜிந்தாபாத் கோஷங்கள் கேட்டன.
பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் இரவு 7 மணி முதல் 7.30 மணிக்குள் தூக்கிலிடப்பட்டனர்.
சிறையின் பிரதான வாயிலில் ஏராளமானோர் திரண்டனர். உடல்களைத் தருமாறு மக்கள் கேட்டார்கள். ஆனால் சிறை நிர்வாகம் பீதியடைந்தது. உடல்கள் துண்டாக்கப்பட்டு, லாரிகளில் அடைக்கப்பட்டு, சிறையின் பின் கதவு வழியாக ஃபெரோஸ்பூர் நோக்கி எடுத்துச்செல்லப்பட்டன.
வாகனம் கசூரில் ஒரு இடத்தில் நின்றது. கட்டைகள் வாங்கப்பட்டன. ஒரு பண்டிதரும், சீக்கிய பூசாரி ஒருவரும் வண்டியில் ஏற்றப்பட்டனர். ஒரு மண்ணெண்ணெய் குப்பியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்லஜ் நதிக்கரையில் காட்டிற்கு உள்ளே உடல்கள் மீது எண்ணெய் ஊற்றப்பட்டு அவசர அவசரமாக எரியூட்டப்பட்டன.
பின்னர் மார்ச் 24 காலை, லாலா லஜபதி ராயின் மகள் பார்வதி பாய் மற்றும் பகத் சிங்கின் தங்கை அமர் கெளர் உட்பட சுமார் 200 முதல் 300 பேர் பின்தொடர்ந்து அதே இடத்தை அடைந்தனர்.
தேடல்களுக்கு பிறகு மண்ணைத் தோண்டியபோது பாதி எரிந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த சாம்பல் எடுக்கப்பட்டு, லாகூர் திரும்பிய பிறகு, பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோரின் அஸ்திகள் தயார் செய்யப்பட்டன.
மூவரின் இறுதிச் சடங்கிற்காக ராவி ஆற்றங்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
லாலா லாஜ்பதி ராயின் உடல் தகனம் செய்யப்பட்ட அதே இடத்தில் மூவரின் இறுதிச் சடங்குகளும் ஏராளமான மக்கள் முன்னிலையில் நடைபெற்றதாக மார்ச் 26ஆம் தேதி டிரிப்யூன் நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
நன்றி: பிபிசி தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி