தரிசனம்
தரிசனம்
*
கோயில் குளத்தில்
மடல் விரித்து மலர்ந்திருக்கும்
தாமரைகளும்
அங்குமிங்குமாய்
மாறி மாறித் தோன்றும்
நினைவழிந்த
கனவாழக் கணங்களில்
மனக் குளத்து நீரிலிருந்து
சலனமில்லாமல் எழுந்து வந்து படியேறிச் செல்கிறாய்.
சொட்டு சொட்டாய் வடியும்
உன் கூந்தல் நீர் வைக்கும் புள்ளிகளில்
கோலம் போடும் மனதை
விட்டேற்றியாய் விட்டுவிட்டுத் தூணில் சாய்ந்து
நீ செல்வதையே
வேடிக்கை பார்க்கிறது
என்னைப் பிளந்த
எனது ஒரு நான்.
சடமெனச் சரிந்திருக்கும் உடலில்
சக்திப் பிரவாகம் பீறிடும்
அறிகுறி
ஒளித் துகள்கள் அண்டவெளியெங்கும் பரவி விரவும் காட்சி
கால வெளி எதுவென
விவரிக்க இயலாக்
கால வெளியில்
நிதானித்த சுவாசமும்
அடங்குகிறது
நீ நான் அது இது எல்லாம்
கூடு விட்டுக் கூடு பாய்ந்து
ஒன்றாகிப் பலவாகிச்
சிதறி ஒன்றி
இறுதியில் ஒன்றுமில்லாமல் போய்
அரைகுறை விழிப்பில்
காண்கிறேன்
மண்டபத்தின்
ஒரு தூணில் நீ
மறு தூணில் நான்
சிலையாக.
*
பிருந்தா சாரதி
*
நன்றி: நிறை
Comments