ராமராஜன் சாமான்யனா, சரித்திர நாயகனா?

 


ராமராஜன் சாமான்யனா, சரித்திர நாயகனா?


நாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற வரையறையை உடைத்தவர்கள் பலர்.

தமிழ் சினிமாவிலும் அப்படிப்பட்ட வரையறைகள் காலந்தோறும் உடைக்கப்பட்டிருக்கின்றன.

2000க்கு பின்னர் தமிழ் திரையுலகில் அப்படி இலக்கணங்களை உடைத்த நாயகர்களாக தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் வெற்றிகரமாகப் பயணிக்கின்றனர்.

அதற்கும் இருபதாண்டுகளுக்கு முன்னர் அப்படியொரு நாயகனாக அறியப்பட்டவர் ராமராஜன். மக்கள் நாயகன் என்ற பெயரில் அவர் விஸ்வரூப வெற்றிகளை ஈட்டியது வரலாறு.

தொண்ணூறுகளின் இறுதியில் வசூல் நாயகனாக போற்றப்பட்டவர் அதற்கடுத்த பத்தாண்டுகளில் சரியான வாய்ப்புகள் அமையாமல் ரசிகர்களால் மறந்துபோனதும், சில படங்களில் குணசித்திர வேடங்களுக்காக அணுகப்பட்டதும் காலத்தின் கோலம்.

அப்போதும், விடாப்பிடியாக நாயகனாக மட்டுமே நடிப்பது என்றிருந்தவர் ராமராஜன்.

தொடர்ந்து 44 படங்களில் நாயகனாக மட்டுமே நடித்தவர், நீண்டநாட்களுக்குப் பிறகு ‘சாமான்யன்’ படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கருடன் சேர்ந்து ஆக்‌ஷன் நாயகனாக களம் கண்டிருக்கிறார்.

அசுரத்தனமான வளர்ச்சியும் வீழ்ச்சியும்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலவே, ராமராஜனின் மிகச்சாதாரணமான பால்யத்திற்கும் நாயகனாகி கோடிகளில் புரண்ட காலத்திற்கும் இடையே ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு.

திரையரங்கில் ஆபரேட்டராக வேலை பார்த்து, பல நூறு தமிழ் படங்களைக் கண்டு ரசித்து, அந்த உத்வேகத்துடன் இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்து, அப்போது கிடைத்த அனுபவம் கொண்டு ’மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் வழியே இயக்குனராக அறிமுகமானவர்.

திரையுலகில் நுழைந்தபோது சிறிய வேடங்களில் நடித்தவர், இயக்குனர் நாற்காலியில் அமர்ந்தபிறகு ‘நாயகனாக மட்டுமே நடிப்பது’ என்ற முடிவில் உறுதியாக நின்றார்.

அதற்கேற்ப இயக்குனர் வி.அழகப்பன், ராமராஜனை ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் அறிமுகம் ஆனார்.

அதற்கடுத்த ஆண்டே கங்கை அமரனின் ’எங்க ஊரு பாட்டுக்காரன்’ மூலமாக பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்தார்.

‘கரகாட்டக்காரன்’ படம் ஓராண்டு வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.

இடைப்பட்ட காலத்தில் ராமராஜன் நடித்த படங்கள் பல தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை அள்ளித் தந்தன.

ராமராஜன் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தமானது ‘செண்பகமே செண்பகமே’. அப்படம் முழுவதும் மிக இயல்பாக ஒரு சாதாரண கிராமத்து இளைஞனாக வலம் வந்திருப்பார்.

தொடர்ந்து அது போன்ற கதைகளை மிகக்கவனமாகத் தேர்ந்தெடுத்திருந்தால், விஜயகாந்த் போன்று தனக்கான பாதையை உருவாக்கியிருக்கலாம். ஆனால், அவரோ எம்ஜிஆரை திரையில் பிரதியெடுக்க ஆசைப்பட்டார்.

அதுவே, அவரது வீழ்ச்சிக்கான காரணங்களில் முதன்மையாகிப் போனது. கூடவே, ஜோசியம் போன்ற விஷயங்களில் காட்டிய அதீத ஈடுபாடும் சேர்ந்துகொண்டது. வளர்ச்சி அசுரத்தனமாக இருந்ததைப் போலவே வீழ்ச்சியும் அமைந்தது.

ராமராஜனின் தவறு!

மது, சிகரெட் பழக்கங்களை தீண்டாமல் இருப்பது, பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வது, அதீத வன்முறையையோ சோகத்தையோ பிரதிபலிக்காத கதைக்களங்களை தேர்ந்தெடுப்பது போன்றவற்றை விடாப்பிடியாக கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட படங்களில் பின்பற்றியவர் எம்ஜிஆர்.

திரையில் தனது பாத்திரம் எப்படி நோக்கப்பட வேண்டுமென்பது முதல் தனக்கான அரசியல் வரை அனைத்தையும் படங்களின் வழியே அவர் பிரதிபலித்தார்.

ரவிச்சந்திரன் தொடங்கி மு.க.முத்து, பாக்யராஜ், சத்யராஜ் என்று பல நடிகர்கள் தங்கள் நடிப்பில் எம்ஜிஆரின் சாயலை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ஆனால், அவரை முன்மாதிரியாக கொண்டு இயங்க ஆரம்பித்த ராமராஜன் தனது தோற்றத்தையும் அப்படி மாற்றிக்கொள்ள விரும்பியதுதான் பெருந்தவறாகிப் போனது.

அதன் விளைவாக, கெட்டியான மீசையை மழித்து மெல்லிய கோடு போன்று மாற்றினார். வண்ணமயமான உடைகளை அணிந்தார். குதிரையில் வலம் வந்தார். வசனங்களில் கூட எம்ஜிஆரை மேற்கோள் காட்டினார்.

இதெல்லாமே வளரும் நாயகர்கள் பின்பற்றும் உத்திகள்தான் என்றாலும், எம்ஜிஆர் பக்தர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

எம்ஜிஆரின் பலமே அவரது தனித்துவம்தான் என்பதை மறந்து, தானும் அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படுவோம் என்று எண்ணினார்.

குறிப்பாக, எம்ஜிஆர் ரசிகர்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்று கண்மூடித்தனமாக நம்பினார். தன்னுடைய தனித்துவத்தை மறந்துபோனார்.

தொண்ணூறுகளின் இறுதியில் ரஜினி, கமல் தவிர்த்து விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என்று முன்னணி நாயகர்கள் பலரும் கிராமத்து கதைகளில் அதிகமாக நடிக்க ஆரம்பித்தனர்; அதே நேரத்தில், ராமராஜன் நடித்த படங்களின் கதைகளிலும் பெரிதாக சுவாரஸ்யமில்லை.

இந்த காலகட்டத்தில் ‘கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும்’ என்று ‘நாட்டாமை’யாக சரத்குமாரின் கொடி பறக்க ஆரம்பித்தது. மெல்ல ராமராஜன் படங்கள் சரிவைச் சந்தித்தன.

அப்போதும், தன்னுடைய திரைப்படங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதில் உறுதி காட்டினார் ராமராஜன். ‘அம்மன் கோயில் வாசலிலே’, ‘கோபுர தீபம்’ என்று தானே இயக்கி நடிக்கவும் செய்தார்.

கால ஓட்டத்திற்கேற்ற மாற்றங்களை கைக்கொள்ளாமல் போனது அவரது படங்களின் வீழ்ச்சிக்கு காரணமானது.

போலவே, எதிர்மறை நாயகனாக நடிக்க மாட்டேன் என்பதில் ராமராஜன் காட்டிய உறுதி ‘என் ராசாவின் மனசிலே’ போன்ற வெற்றி படங்களில் இருந்து விலக வைத்தது.

சிகரெட் புகைப்பது போன்றோ மது அருந்துவது போன்றோ நடிக்க கூடாது என்பதில் அவர் காட்டிய மன உறுதி பாராட்டத்தக்கது என்றாலும், திரையிலும் நல்லவராகவே தோற்றம் தர வேண்டுமென்று அவர் எண்ணியது சரிதானா என்பதற்கு வேறெவராலும் பதில் கூற இயலாது!

விடாப்பிடியான தன்னம்பிக்கை!

ராமராஜன் நாயகனாக நடித்த படங்களில் பெரும்பாலானவை இளையராஜாவின் பங்களிப்பைக் கொண்டவை. இருவரும் ஒன்றிணைந்த படங்களின் பாடல்கள் இப்போதும் நல்லிசை விரும்பிகளின் மனதுக்கு நெருக்கமானவை.

அதேநேரத்தில் கங்கை அமரன், எஸ்.ஏ.ராஜ்குமார், மனோஜ்-கியான், ராஜேஷ் கண்ணா, பின்னாட்களில் சிற்பி என்று பல இசையமைப்பாளர்களுடன் அவர் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

முக்கியமாக, தேவா தமிழ் திரையுலகில் கால் பதிக்க காரணமாக இருந்தவர்களில் ராமராஜனும் ஒருவர் என்பதை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்போதிருந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் இன்னபிற தொழில்நுட்பக் கலைஞர்களைக் கேட்டால், ராமராஜன் குறித்து இது போன்ற பல நிகழ்வுகளை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

‘பம்பாய்’ படத்தில் அரவிந்த் சாமியுடன் வரும் பாத்திரத்திற்காக ராமராஜனிடம் கால்ஷீட் கேட்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு.

ஆனால், அது போன்று சிறு வேடங்களுக்காகப் பெருந்தொகை கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வந்தபோதும் ‘வேண்டாம்’ என்று மறுத்ததை தன்னம்பிக்கை என்றே சொல்ல வேண்டும்.

இடைப்பட்ட காலத்தில் அதிமுகவில் சேர்ந்து கட்சிப்பணி, பிரச்சாரம் என்றிருந்தவர், 2010வாக்கில் விபத்தொன்றில் சிக்கி முடங்கிப் போனார்.

தற்போது, மீண்டும் இயக்குனர் ராகேஷின் ‘சாமான்யன்’ மூலமாக நாயகனாக களம் இறங்குகிறார்.

சமீபத்தில் ‘சாமான்யன்’ அறிமுக விழாவில் பேசிய ராமராஜன், தான் நாயகனாக நடிக்கும் 45வது படம் இது என்றார்.

கூடவே, 50 படங்களில் நாயகனாக நடித்துவிட்டு திரையுலகை விட்டு ஒதுங்க விரும்பியதாகத் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

‘கரகாட்டக்காரன்’ மூலமாக ரஜினி, கமலுக்கே போட்டி என்று வர்ணிக்கப்பட்டவர், மிகச்சுலபமாக தன்னைத் தேடி வந்த தயாரிப்பாளர்களைப் பயன்படுத்தி அவ்வாசையைப் பூர்த்தி செய்திருக்கலாம்.

ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை.

தனக்கான பாத்திரங்களும் கதைக்களங்களும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற நியதியில் இருந்து மாறவே இல்லை.

ராமராஜனின் பின்னாளைய படங்கள் பெருவெற்றியைப் பெறாத காரணத்தால், அதனைக் குறை கூறுவது சரியாகாது.

வெற்றிகரமான படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் ட்ரெண்ட் குறித்த கேள்விக்கு கூட ‘கரகாட்டக்காரன் இரண்டாம் பாகத்தில் தான் இல்லை’ என்று நேரடியாக பதில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

‘நமக்கு நாமே நீதிபதி’ என்பது போல தனக்கென்று கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுத்துக் கொண்டு வாழ்பவர்கள் ஒரு சிலர்தான்.

அவர்கள் நிச்சயம் தனித்துவமிக்கவர்கள்; குறைந்தபட்சம் மிகச்சிலருக்காவது முன்னோடிகளாகத் திகழும் சரித்திர நாயகர்கள். தமிழ் திரையுலகில் அதற்கான உதாரணங்களில் ஒருவராகத் திகழ்பவர் ராமராஜன்.

புகழ் வெளிச்சத்தை மீண்டும் தன் மீது பாய்ச்சிக்கொள்வதன் மூலமாக, அவர் குறித்து பலரும் விவாதிப்பதற்கான வாய்ப்பைத் தந்திருக்கிறார்.

இதே மனநிலையுடன் இனிவரும் காலத்தில் தனக்கேற்ற நாயக பாத்திரங்களை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்; தனது தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அதற்காகவாவது ‘சாமான்யன்’ வரவை நாம் வாழ்த்தி வரவேற்க வேண்டும்!

-உதய் பாடகலிங்கம்

நன்றி: தாய்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி