சொற்றொடர் நயம்...(நகை)சுவையாய் மலரும் கவிதை...!
சொற்றொடர் நயம்...(நகை)சுவையாய் மலரும் கவிதை...!
கவியரசர் கண்ணதாசன் எதையும் நயம்படச் சொல்வார். மேடைகளிலும் அப்படித்தான் பேசுவார். அவர் தென்றல் என்ற இலக்கியப் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்த போது, துணை ஆசிரியர் ஒருவர் இரண்டு சினிமா ஸ்டில்ஸ்களை காண்பித்து, சினிமா பகுதியில் பிரசுரிக்க வந்துள்ளது என்றார்.
படங்களை வாங்கி பார்த்தார் கவியரசர்.
ஒரு படம் நடிகை ராஜசுலோச்சனா, கதாநாயகனுக்கு காப்பி கோப்பையை கொடுப்பது போல் இருந்தது. அந்த சமயம் ராஜசுலோச்சனா அவர்கள் திரைக்கு வந்த புதிது. மிகவும் அழகான தோற்றத்துடன் இருப்பார்.
படத்தை பார்த்த கவியரசர் ஒரே நிமிடத்திற்குள், படத்தின் பின்புறம் இரண்டு வரிகளை எழுதியதோடு, அந்த உதவி ஆசிரியரிடம் அதை கொடுத்துவிட்டு சொன்னார்..
"புகைப்படத்திற்குக் கீழே இந்த இரண்டு வரிகள் வரவேண்டும் - படத்துடன் சேர்த்து போட்டுவிடுங்கள்" என்றார்.
அந்த இரண்டு வரிகள்...
"காப்பிக்கு உப்பிட்டு காரிகைதான் தந்தாலும்
சாப்பிட்ட பின்புதானே சர்க்கரையின் நினைவு வரும்!"
காப்பிக்கு அந்த பெண் தவறுதலாக உப்பு போட்டு கொடுத்தால், கொடுத்த அந்த சிவந்த கரங்களையும், மலர்ந்த முகத்தையும் பார்த்துக் கொண்டே வாங்கியவன், அந்த காப்பியை குடித்து விடுவானேயன்றி, சர்க்கரையின் ஞாபகம் அப்போது அவனுக்கு எப்படி வரும்? வந்தாலும், குடித்து முடித்தபின் தானே வரும் என்று பொருள்படும்படி எழுதியிருந்தார்.
என்ன அசத்தலான வரிகள்!
இரண்டாவது படம் நடிகை பத்மினியின் படம். அவர் கார் ஒன்றில் ஸ்டியரிங்கை பிடித்தபடி முன் சீட்டில் அமர்ந்திருப்பது போன்ற படம். அதற்கும் கவியரசர் இரண்டு வரிகள் எழுதிக் கொடுத்தார்.
அந்த வரிகள்...
"வண்ணமயில் காரோட்ட வருகின்றார் என்றால்
எண்ணையில்லாமல் ஓடாதா இந்தக்கார்...?
கவியரசரின் மனைவி பொன்னம்மா அவர்கள் நன்றாக சமையல் செய்வார்கள். எல்லாம் மிகவும் பக்குவமாகவும், ருசியோடும் இருக்கும்.
தன் மனைவியின் சமையலைப் பற்றி தன் நண்பர்களிடம் கவியரசர் அடிக்கடி இப்படி கூறுவார்...
"பொன்னம்மா சமையல் செய்தால்
பூமியெங்கும் வாசம் வரும்!"
என்ன ஒரு வெளிப்பாடு...!
ஒரு சமயம் அவர் மனைவியின் காதுகளுக்கு கேட்கும் திறன் குறைந்துவிட்டது. அந்த நாட்களில் பெரிய சிகிச்சைகள் இல்லாததால், அந்த அம்மையாரும் அதை பொருட்படுத்தவில்லை. அதே போல அந்த குறைபாட்டினால் கவிஞருக்கு எந்தக் குறையும் வந்து விடாமலும், கவிஞர் மனம் மகிழும்படியாகவும் நன்றாக சேவகம் செய்தார்.
மேடைகளில் பேசும் போது, கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தன் மனைவியை பற்றி இப்படித்தான் குறிப்பிட்டு பேசுவார்...
"தன் செவிகள் பழுதானாலும்
என் கவிகள் பழுதாகாமல்
பார்த்துக் கொண்ட மகராசி!"
கவிதை அவர் வாழ்க்கையோடு இப்படி பின்னி பிணைந்திருந்தது!
- சைரா பானு பதிவு
Comments