ரேஷன் கடையில் மோடி படம் கேட்ட நிர்மலா..
வேற மாதிரி பதிலடி.. ரேஷன் கடையில் மோடி படம் கேட்ட நிர்மலா.. சிலிண்டரில் ஒட்டி விலையை எழுதிய டிஆர்எஸ்
தெலங்கானாவில் நேற்று ரேசன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் இடம்பெறவில்லையென மாவட்ட ஆட்சியர் ஒருவரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இன்று சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஒட்டி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
ஏற்கெனவே தெலங்கானாவில் நிர்மலா சீதாராமனின் காரை மறித்து காங்கிரஸ் பிரச்னை செய்த நிலையில், தற்போது புதிய பிரச்னைகள் மேலெழுந்துள்ளன.
பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக தெலங்கானா மாநிலத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், ஜஹீராபாத் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது உடன் காமரெட்டி மாவட்டத்தின் ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது நிர்மலா சீதாராமன், ரேசன் கடைகளில் வழங்கும் அரிசியில் மத்திய மாநில அரசுகளின் பங்குகள் என்ன என ஆட்சியரிடம் கேள்வியெழுப்பினார்.
ஆனால் விடை தெரியாமல் ஆட்சியர் முழிக்கவே, அரை மணி நேரத்தில் இதற்கான விடையை தெரிந்துகொண்டு வாருங்கள் என கூறியுள்ளார். இதன் பின்னர் இந்த விவரங்களை நிதியமைச்சரே விரிவாக கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி, கோதுமை போன்றவற்றுக்கான நிதியில் பெரும் பங்கு மத்திய அரசு வழங்குகிறது. வெளி சந்தையில் ரூ.35க்கு கிடைக்கும் அரிசி, ரேஷன் கடைகளில் ரூ.1க்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசிக்காக மத்திய அரசு ரூ.30 பங்களிப்பு வழங்குகிறது.
lமாநில அரசோ ரூ.4 வழங்குகிறது. பயனாளர்களிடம் ஒரு ரூபாய் மட்டும் தான் வசூலிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று வந்த பின் 2020ஆம் ஆண்டு முதல் இலவச அரிசி கோதுமையை மத்திய அரசே இலவசமாக வழங்கி வருகிறது" என விரிவாக கூறினார். பின்னர் ரேசன் கடைகளில் பிரதமர் மோடியின் படங்களை ஏன் வைக்கவில்லை என்று கேள்வியெழுப்பிய நிதியமைச்சர், பாஜகவினர் அவ்வாறு படங்களை வைக்க வந்தால் அதை அகற்றக்கூடாது என்றும், ரேசன் கடைகளில் பிரதமரின் படம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பல்வேறு கண்டனங்கள் மேலெழுந்தன. நிதியமைச்சர் மாவட்ட ஆட்சியரிடம் அவ்வாறு நடந்துகொண்டிருக்கக்கூடாது. இப்படி நடந்துகொண்டது வெட்கக்கேடானது என்று பாஜவின் சுப்பிரமணிய சுவாமி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் ஒட்டியுள்ளனர். இந்த படத்தில் "மோடிஜி ரூ.1,105" என பிரதமர் சிரித்தவாறு காட்சியளிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குறைந்த அளவில் இருந்த கேஸ் சிலிண்டர் விலையானது பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 2014 மே மாதம் ரூ.928 ஆகவும், ஜூன் மாதம் ரூ.905 மற்றும் அடுத்தடுத்த மாதங்களில் ரூ.906 என்கிற அளவில் காஸ் சிலிண்டர் விலை இருந்தது. இதனையடுத்து தற்போது இந்த விலை ரூ.1,105 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மானியத்தை பொறுத்த அளவில் உஜ்வாலா திட்டத்தில் இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே மானியம் தரப்படுகிறது. முன்னதாக கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2010ல் இந்த விலை ரூ.345.35 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments