*பிரதட்சணம் (வலம்) வருவதன் உட்பொருள் என்ன?*


*பிரதட்சணம் (வலம்) வருவதன் உட்பொருள் என்ன?*


இறைவனுக்குச் செய்யும் உபசாரங்களுள் பிரதட்சண, நமஸ்காரம் இறுதியானது. அதுமட்டுமல்ல, பரிபூரணமானதும் கூட. ஏதாவது கிரக தோஷ

மிருந்தாலோ, அல்லது பெருந் துன்பம் ஏற்பட்டாலோ, ஆலயங்களில் நியமத்துடன் கூடிய எண்ணிக்கையில் பிரதட்சணம் செய்வதால், அவை பரிகாரமாகும் என்பது சாஸ்திரவாக்கு. நிறைய பேருக்கு இது அனுபவத்தில் பலனளித்திருக்கிறது.


ஆலயங்களில் செய்யும் பிரதட்சணங்களில் பலவகைகள் உள்ளன. சாதாரணமாக கொடி மரத்திலிருந்து (த்வஜ ஸ்தம்பம்) ஆரம்பித்து சுற்றி வந்து திரும்ப பலிபீடம் (த்வஜ ஸ்தம்பம்) அருகில் வந்து தெய்வத்தை நமஸ்கரிப்பது ஒரு வகை. சண்டீஸ்வரர் உள்ள சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் விதம் வேறொரு வகையானது. இதனை ‘சண்டீ பிரதட்சணம்’ என்பார்கள்.


வீட்டில் பூஜைசெய்து முடிக்கும்போது ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும். கோயில்களில் ஆத்ம பிரதட் சணம் செய்யக்கூடாது. பிரதட்சணத்தில் நிறைய ரகசியங்கள் உள்ளன. ஆலயத்தில் இருக்கும் தெய்வம் விஸ்வசக்தியின் மையப் புள்ளிக்குச் சின்னம். அவரைச் சுற்றியுள்ள ஆலயம் எல்லையற்ற விஸ்வத்தை குறிப்பாக உணர்த்துகிறது. பிரபஞ்சத்தின் பரிணாமமே பிரதட்சணம்.


வாழ்க்கை என்றாலே அது ஒரு சுற்றல்தான். பிறப்பு முதல் இறப்புவரை இவ்வுலகில் நம் வாழ்வே ஒரு பிரதட்சணம். இவ்வாறு எத்தனையோ சுற்றுகளில் (பிறவிகளில்) சம்பாதித்துக் கொண்ட கர்மப் பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கிறோம். ஆனால், பிரதட்சணம் என்ற பெயரால் பரமாத்மாவைச் சுற்றி வருவதன் மூலம் முற்பிறவிச் சுற்றுகளில் செய்த கர்மங்களின் கெட்ட பலன்களிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும்.


அது மட்டுமல்ல, அதிக அளவில் பிரதட்சணம் செய்வதால், வரப்போகும் பிறவிகளின் எண்ணிக்கையை கூடக் குறைக்க முடியும். உலகில் (விஸ்வத்தில்) இன்று சுற்றிய சுற்றை மறுபடியும் சுற்றுவதென்பது இயலாத காரியம். எனவேதான் விஸ்வேஸ்வரனைச் சுற்றி வர வேண்டும்.


ஜனனம் மரணம் த்வந்த்வம் மாயா சக்ர மிதீரிதம்!

க்ரியயா ஜபரூபம் ஹி ப்ரணவந்து ப்ரதட்சணம்!!


என்கிறது நூல் ஒன்று. வினைப்பயன்களைத் தொலைத்தலே பிரதட்சணத்தின் முக்கிய லட்சியம். ‘‘ப்ரதட்சண க்ரியாரூப ப்ரணவ ஜபம்’’ என்று

சிவபுராணம் வர்ணிக்கிறது. சாதாரணமாக பிரதட்சணம் செய்யும் போது சொல்லும் ஸ்லோகம்;


யானி கானிச பாபானி ஜன்மாந்தர க்ருதானிச!

தானி தானி ப்ரணஸ்யந்தி ப்ரதட்சண பதே பதே!!


பற்பல பிறவிகளில் செய்த பாவங்கள் பிரதட்சணத்திலுள்ள ஒவ்வொரு அடியிலும் தொலையும் என்பது மேற்சொன்ன ஸ்லோகத்தின் உட்பொருள். துக்கங்களுக்குக் காரணமாகப் பாவங்கள் நீங்கியபின், ஜீவன் சுத்தமாகி துக்கத்திலிருந்து விடுதலை பெறுகிறான். சூரியனிடமிருந்து தோன்றிய கிரகக் கூட்டம், சூரியசக்தி மூலமாகவே பலவித பாதைகளில் சஞ்சரிப்பதுபோல, உலகில் ஒவ்வொர் அணுவும் பரமாணுவைக் கேந்திரமாகக் கொண்டு அவர் அளிக்கும் சக்தியின் காரணமாகவே சுற்றிவருகின்றது.


உண்மையில் பூமி, ஆத்மபிரதட்சணம் செய்தபடியே சூரிய தேவனையும் சுற்றிவந்து பிரதட்சணம் செய்து வருகிறதல்லவா? நம் மனம், வாக்கு, உடல், செயல் அனைத்தும் பரமேஸ்வரனையே சுற்றி வரவேண்டுமென்பதே பிரதட்சணத்தின் முக்கிய உத்தேசம்.


ஒருமுறை கைலாசத்தில் உலகமெங்கும் சுற்றி விட்டு முதலில் வருபவனுக்கே ‘கணாதிபத்ய பதவி’ என்று நிபந்தனையிட்ட போது, முருகப் பெருமான் மயில் வாகனத்தில் மீதேறி உலகைச் சுற்றிவரக் கிளம்பினார். மூஷிக வாகனத்தைக் கொண்ட மகாகணபதியால் அவ்வாறு செல்ல இயலவில்லை, ஆனால் புத்திசாலித்தனமாக பார்வதி பரமேஸ்வரரையே சுற்றி வந்து பிரதட்சணம் செய்தார்.


விசித்திரமாக, முருகப் பெருமான் சென்ற ஒவ்வோரிடத்திலும் அவருக்கு முன்பாகவே கணபதி வந்து சென்ற தடயம் தெரிந்தது. முதலில் உலகைச் சுற்றி வந்தவராக விநாயகரை தேர்ந்தெடுத்து, பரமசிவனும் இதர தேவதைகளும் அவருக்கே ‘கணங்களுக்கு அதிபதி’ என்ற பதவியை அளித்தனர். முருகப்பெருமானின்  கோபத்தைத் தணிக்க சிவனும், பார்வதியும் சமாதானப்படுத்தினர்.


இக்கதையில் பரமேஸ்வரனைச் சுற்றி வருவது பிரபஞ்சத்தைச் சுற்றிவருவதற்குச் சமம் என்ற கருத்து தெளிவாக வெளிப்படுகிறது. விஸ்வமெங்கும் வியாபித்துள்ள விஸ்வநாதரைச் சுற்றிவருவதன் மூலம், உலகில் பிறப்பு இறப்பு என்னும் சுற்றைத் தாண்டி விடலாம் அல்லவா? மேற்சொன்ன கதையில் விநாயகர், முருகர் இவர்களில் யார் பெரியவர் என்பதல்ல முக்கியம். இருந்த இடத்தில் இருந்தபடியே ஈஸ்வரனை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே கணபதி எடுத்துரைத்த செய்தி.


அனைத்திடங்களிலும் ஈஸ்வரனை தரிசிக்க வேண்டுமென்பது முருகப்பெருமானின் போதனை. மையத்தில் இருப்பதே பரிதியிலும் விஸ்தரித்துள்ளது. உலக உருண்டை முழுவதும் மையத்திலுள்ள மூல சக்தியான பரமேஸ்வரனின் விஸ்தரிப்புதான். இதைப் புரிந்து கொண்டால் பிரதட்சணம் ஏன் செய்கிறோம் என்பதும் புரிந்து விடும்.


தொகுப்பு: ராஜி ரகுநாதன்...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி