திராவிட மொழிகளுக்கு பெருங்கொடையளித்த பிதாமகன் கால்டுவெல் காலமான தினமின்று
திராவிட மொழிகளுக்கு பெருங்கொடையளித்த பிதாமகன் கால்டுவெல் காலமான தினமின்று
வாசிப்புப் பழக்கம் இல்லாமல் மாணவன் உயர்மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும்; ஆனால், எதனையும் விரிவாக அறியாமல், தன் பாடத்திட்டத்தில் மட்டும் திருப்தி கொண்டுவிடுவான்'' என்றார் ராபர்ட் கால்டுவெல். வாசிப்புமேல் அவருக்கு இருந்த காதல்தான், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்கிற நூலை எழுதவைத்தது. தமிழ்மொழிக்குச் 'செம்மொழி' என்ற சிறப்பைத் தேடித்தந்தவர் அந்தப் பெருமகனார்
1838-ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த அவர், கப்பலில்... பிரௌன் என்பவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தமிழைக் கற்றுக்கொண்டார். தமிழின் அழகியலை அறிந்த அந்த அறிஞர் பெருமகனார், தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி மொழியைத் திறம்பட பயின்றதாக நூல்கள் சொல்கின்றன. வட்டார வழக்குமொழிகளைக் கொண்டது தமிழ் என்பதால், பேச்சு வழக்கை அறியவும், அதன் மூலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டார் கால்டுவெல். திருச்சி, சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம் போன்ற பல்வேறு மாவட்டங்கள், பிற ஊர்கள், மலைக்கிராமங்கள் என தனது பயணத்தை வடிவமைத்துக்கொண்டு தமிழ் மொழியில் உள்ள வட்டார மொழிகளைக் கண்டறிந்தார்.
அந்தத் தேடலின்போது, 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலை எழுதினார். அதில், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் பற்றிய பதிவுகள், ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, மொழியியல் நடையில் எவ்வாறு மற்றமொழிகளில் தமிழின் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் கூறியுள்ளார். தமிழில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எவ்வாறு கிரேக்க மொழியில் திரித்துக் கையாளப்பட்டுள்ளது என்பது பற்றியும் அந்த நூலில் தெரிவித்துள்ளார்.
சிங்கள இலக்கிய நூலான 'மகாவம்சம்' என்ற நூலின் துணைக்கொண்டு தமிழ் - ஈழ உறவுகளையும் ஆய்வு செய்துள்ளார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவரும் ராபர்ட் கால்டுவெல்தான். பின்னர் தாம் கண்டறிந்தவற்றைக் கட்டுரைகளாகவும் வெளியிட்டார்.
மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, கலாசாரம், வாழ்கை முறை போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியியல் தரவுகளை தமது பயணத்திலேயே சேகரித்தார். அது மட்டுமன்றி, பல்வேறு மொழியியல் அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து அதில் இருந்து குறிப்புகள் எடுத்து ஒப்பிட்டுமுறை செய்து, ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். பின்னர் அவற்றை எல்லாம் தொகுத்து 1856-ல், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
"தன்னிடையே இடம்பெற்றிருக்கும் சொற்களை அறவே ஒழித்துவிட்டுத் தனித்து உயிர் வாழ்வதோடு... அவற்றின் துணை, சிறிதும் இல்லாமல் வளம்பெற்று வளர்வதோடு முன்பிருந்த நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக நிலைபெறும்'' என்றார் கால்டுவெல். அவர் சொல்லிய அந்தஸ்தோடு செம்மொழியாக நிலைபெற்றது தமிழ்.
Comments