பன்னிரண்டு ராசிகளுக்கான ராசியான பிள்ளையார்கள்*

 பன்னிரண்டு ராசிகளுக்கான ராசியான பிள்ளையார்கள்*



பிள்ளையார் என்றாலே பிறந்த குழந்தைக்கும் பிடிக்கும். குழந்தை முதல் கிழவர் வரை விநாயகப் பெருமானைக் கண்டாலே மனதில் தனி ஆனந்தம் பிறக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. விநாயகர் சதுர்த்தி நாளன்று களிமண் பிள்ளையாரை ஓடிச் சென்று வாங்கி வரும்போது வீட்டிற்குள் விநாயகப் பெருமான் பிரத்யட்சமாய் உள்ளே வந்துவிட்டதாய் ஓர் உணர்வு. வீட்டினில் பூஜை முடித்த பின்பு அன்றைய தினத்திற்குள் குறைந்தது 108 பிள்ளையாரையாவது தரிசித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நகர்வலம் கிளம்பிவிடும் பக்தர்களும் இருக்கிறார்கள்.  இந்த நன்னாளில் அவரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானின் மூர்த்தங்களை வழிபட்டால் மேலும் சிறப்பு  அல்லவா...  இதோ 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகரின் திருவுருவங்கள்.  அன்று மட்டுமல்லாது எப்போதும் எங்கு தரிசித்தாலும் வணங்குங்கள். உங்களின் தியான சித்திரமாக மனதில் கொள்ளுங்கள்.


மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோதைரியம் மிக்க நீங்கள் வழிபட வேண்டியவர் வீரகணபதி.


ரிஷபம்: சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் அம்பிகையின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர்கள். 12 ராசிகளில் சந்திரன் உச்சம்பெற்ற நிலையில் இருப்பது உங்களுடைய ஜாதகத்தில் மட்டுமே. இயற்கையில் ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீ வித்யா கணபதி.  


மிதுனம்: பல்வேறு திறமையை உடைய நீங்கள் கண்திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர்களின் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம். எதிரிகளைப்பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டியவர் கண்திருஷ்டி கணபதி.


கடகம்: பல்கலை வித்தகர்களான நீங்கள் பன்முகம்கொண்டவர்கள். அபார ஞானமும், அசாத்தியமான ஞாபகசக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.


சிம்மம்: இயற்கையில் தைரிய குணம் மிக்க உங்களுக்கு என்றும் வெற்றித்திருமகள் துணை நிற்பாள். 12 ராசிகளில் தலைமைக் குணத்தினை உடைய உங்களுக்கு என்றுமே தன்னம்பிக்கை குறையவே குறையாது. அசாத்தியமான மன வலிமையுடன் என்றென்றும் வெற்றியினை ருசித்துவரும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜயகணபதி.


கன்னி: இயற்கையில் பெண்மைக் குணத்தினை உடைய நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் காரியங்களில் வெற்றி காண்பவர்கள். உங்கள் வாழ்க்கைத்

துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரியவர் உச்சிஷ்ட கணபதி.


துலாம்: அயராத உழைப்பினை உடைய  நீங்கள் கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் ஓய்ந்துவிடாது அடுத்த லட்சியத்தை நாடிச் செல்பவர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.


விருச்சிகம்: இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நினைத்த மாத்திரத்தில் காரியத்தைச் செய்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டவர்கள். சதா பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் நர்த்தன கணபதி.


தனுசு: குரு பகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். நேர் வழியைத் தவிர குறுக்கு வழியில் செல்ல விருப்பமில்லாதவர்கள். தர்மநெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்துவரும் உங்களுக்கு சங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர்.


மகரம்: சனி பகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒரு சில விஷயங்களில் இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக்குழப்பத்திற்கு ஆளாகும் நீங்கள் மனதினை அடக்கி ஆளக் கற்றுக்கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.   


கும்பம்: அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கி ஆள நினைப்பவர்கள். தான் அறிந்திராத விஷயத்தையும் கூட தனக்குத் தெரியாது என்பதை வெளிக்காண்பிக்காது செயல்பட்டு வருவீர்கள். அதே நேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு தனித்திறமை மூலம் முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.


மீனம்: இயற்கையிலேயே கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர்கள். அடுத்தவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது எல்லோரும் நல்லவரே என்ற எண்ணத்துடன் பழகிவருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள் நான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.

...Dr. குமாரசுவாமி சோமசுந்தரம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி