மகாகவி பாரதி பற்றி பாரதிதாசன்.


 மகாகவி பாரதி பற்றி பாரதிதாசன். இதைப் படித்தும் பாரதியைக் குறை சொல்வார் தமிழர் இல்லை.

பாரதி உலககவி! அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான
ஓட்டைச்சாண் நினைப்புடையவர் அல்லர்! மற்றும்
வீரர்அவர்! மக்களிலே மேல்கீழ் என்று
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்!
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற
செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம் (4:1)
அகத்திலுறும் எண்ணங்கள் உலகின் சிக்கல்
அறுப்பவைகள், புதியவைகள், அவற்றை யெல்லாம்
திகழ்பார்க்கு பாரதியார் எடுத்துச் சொல்வார்
தெளிவாக, அழகாக, உண்மை யாக!
முகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை
முனைமுகத்தும் சலியாத வீர ராகப்
புகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப்
புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்! (4:2)
பழய நடைபழங் கவிதை பழந்தமிழ்நூல்
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை
பொழிந்திடு செவ்விய உள்ளம் கவிதையுள்ளம்
பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள்
அழுந்தியிருந் திட்டதமிழ் எழுந்த தன்றே
ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்!
அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
அறிந்திலதே புவியென்றால் புவிமேற் குற்றம்! (4:3)
கிராமியம் நன்னாக ரிகம்பாடி வைத்தார்
சீர்த்தி யுறத்,தே சீயம் சித்திரித்தார்
சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்
தங்குதடை யற்றஉள்ளம் சமத்வ உள்ளம்
இராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம்
இன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்!
தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த
தமிழப்பாட்டை மொழிபெயர்த்தால தெரியும் சேதி! (4:4)
ஞானரதம் போலொருநூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை கண்ணன் பாட்டுப்
போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?
புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேனினிப்பில் தருபவர்யார்? மற்றும் இந்நாள்
ஜெயபேரி கை,கொட் டடா,என் றோதிக்
கூனர்களும், குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டிவைத்த கவிதை திசைஎட்டும் காணோம்! (4:5)
"பார்ப்பானை ஐய ரென்ற காலமும்போச்
சே"யென்று பாரதியார் பெற்ற கீர்த்தி
போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று
பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்
வேர்ப்பார்கள், பாரதியார் வேம்பென் பார்கள்,
வீணாக உலககவி அன்றென் பார்கள்
ஊர்ப்புறத் தில்,தமக் கானஒரு வனைப்போய்
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள் (4:6)
சாதிகளே இல்லையடி பாப்பா என்றார்
தாழ்ச்சி உயர்ச்சிகள் சொல்லல் பாவ(ம்) என்றார்
சோதிக்கின் "சூத்திரற்கோர் நீதி, தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி"
ஓதிஅதைப் பாரதியார் வெறுத்தார் நாட்டில்
ஒடுக்கப்பட்டார் நிலைக்கு வருந்தி நின்றார்
பாதிக்கும்படி "பழமை பழமை என்பீர்
பழமை இருந்திட்டநிலை அறியீர்" என்றார் (4:7)
தேசத்தார் நல்லுணர்வு பெறும் பொருட்டுச்
சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்
காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கிஅதைக் கனிவாய் உண்டார்
பேசிவந்த வசைபொறுத்தார், நாட்டிற் பல்லோர்
பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற
மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்
முரசறைந்தார் இங்கிவற்றால் வறுமை ஏற்றார் (4:8)
வையத்து மாகவிஞர் மறைந்து போனார்
வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்
செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்
சிலநாட் கள்,போ கட்டும்என இருந்தார்
உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்
உலககவி அல்ல அவர்எனத் தொடங்கி
ஐயர் கவிதைக் கிழுக்கும் கற்பிக்கின்றார்
அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ? (4:9)

(இப்பாடல் எழுந்த சூழல்: இது அந்நாளில் ஆனந்தவிகடனில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், 'பாரதி உலக கவியல்ல' என்றும், 'அவர் பாடலில் வெறுக்கத்தக்கன உள்ளன' என்றும் எழுதியதற்கு மறுப்பாக எழுதப்பட்டது) பாரதிதாசன் பாடிய மகாகவி பாடல் முடிந்தது. இப்பாடல் மொத்தம் 36 (முப்பத்தாறுமட்டும்) அடிகளால் ஆனவை. இப்பாடல்கள் எண்சீர் ஆசிரிய விருத்தங்கள் ஆகும். (மொத்தம் 9 -ஒன்பது- விருத்தங்கள்)

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி